திருவெம்பாவை (பாடல் - 17)

Published Date: 
Monday, January 2, 2017

செங்கணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதா
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கன் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

விளக்கவுரை
==============
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================

எங்கும் இலாததோர் இன்பம்
===========================

மண்ணும் விண்ணும் மலையும் கடலுமாக மலர்ந்து நிற்கும் உலகம் ஒருகாலத்து உருவாக்கப்பட்டது. பின்னொரு காலத்து அழிக்கவும் படுவது. இவ்வுலகினைப் படைத்து அளித்து அழிப்பதற்குரிய கடவுளரே திருமாலும் நான்முகனும் உருத்திரனும், பரம்பொருள் இம் மூவர்க்கும் வேறானது. தேவர் கோவறியாத தேவதேவன் செழும்பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை மூவர்கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி என்று இறைவன் மூவர்க்கும் முதல்வனாய் நின்ற முதன்மையினைக் கூறினார். அவன் படைப்போற் படைக்கும் பழையோன், காப்போற் காக்கும் கடவுள், ஒற்றுமை பற்றி மூவர்களுள் ஒருவனாகிட உருத்திரனையும் மகா சங்கார காரணனாகிய முதல்வனையும் தனியே பிரித்துக் கூறுவதில்லை- ஆயினும் வள்ளலார் ஐந்தொழிலாதி செய் ஐவாரதிகளை ஐந்தொழில் ஆதிசெய் அருட்பெருஞ் சோதி என்று கூறியுள்ளார்.

படைத்தலும் காத்தலும் வல்லார் இருவருமே முதல்வனை உணராது தாமே முதல்வர்கள் என்று போரிட்டுக் கொண்டனர். ஆயினும் அவ்விருவர் பேரொளிப் பிழம்பாகிய பரம்பொருளின் அடியும் முடியும் காணமாட்டாதவராய் நின்றனர் என்பது உட்கோள் உடையதோர் புராண வரலாறு. திருமாலும் நான்முகனும் மற்றைத் தேவர்களும் புண்ணிய மிகுதியால் அதிகாரம் பெற்றவர்கள். ஆயினும் யான் என்னும் முனைப்பினால் இறைவனது பேரானந்தப் பெருஞ் செல்வத்தை நுகரும் பெறவரும் பேறு பெற்றிலர் என்பர். இங்ஙனம் இறைவனை உணரமாட்டாத மயக்கம் உடையவராகப் பேசப்படும் மால் அயன் முதலானோர் அணுபட்சத்தவர் உயிர்க்குலத்தார் என்றும் கூறுவர். அடர் மலத்தடையால் தடையுறும் அயன்மால் என்பார் வள்ளலார். தேவர்க்கும் மூவர்க்கும் அறிவறியான் ஆகிய பெருமான் அடியார்க்கு எளியனாய் அருள்புரிய காட்டகத்து வேடனாய் கடலில் வலைவாணனாய் நாட்டில் பரிமேலழகனாய் வந்த வரலாறுகள் மெய்ப்பிக்கின்றன.

தேவர்கட்கு அருமையும் அடியார்க்கு எளிமையும் ஆகிய அருமையில் எளிய அழகினை எண்ணியே செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதாக் கொங்குண் கருங்குழலி நம் தம்மைக் கோதாட்டி இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை அங்கன் அரசை அடியோங்கட்கு ஆரமுதை நங்கள் பெருமானைப் பாய்ந்தாடேலோர் எம்பாவாய் என்று பாடுகின்றனர்.

விண்ணாளும் தேவர்க்கும் மேலாய வேதியன் மண்ணாளும் மன்னவர்க்கும் மாண்பாகி நின்றவன் அடியவர்தம் இல்லங்கள் தோறும் எழுந்தருளுகின்றான். தான் மட்டுமா வருகிறான்? இல்லை.தானும் தன் தையலுமாய் வருகிறான். அடியவர்தம் குற்றங்களைப் போக்கிக் குறைகளை நீக்கி அவர்கட்கு அருள் செய்ய வருகிறான். இதனைக் கொங்குண் கருங்குழலியாகிய மணங்கமழும் கூந்தலை உடைய ஞானப் பூங்கோதையாகிய இறைவி நம்மைக் கோதாட்ட குற்றம் களைந்து நம்மைச் சீராட்டி வேண்டி நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளுகின்றான்.

திருமாலும் பன்றியாய்ச் சென்று காணாத திருவடிகளைத் தானே வந்து அடியவர்க்குத் தருகின்றான்.

முன்னரும், விண்ணோரும் ஏத்துதற்குக் கூசும் மலர்ப் பாதம் தந்தருள வந்தருளும் தேசன் என்றார்.

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகன் என்றார்.

சேவகன் என்பது வீரன் என்று பொருள் தரும் ஓர் வழக்குச் சொல்.

‘மதுரைப் பெருநன் மாநகர் இருந்து குதிரைச் சேவகன் ஆகிய‘ கொள்கையும் இங்கே ஒப்புநோக்கத் தக்கது.

பெருவீரனாகிய எம்பெருமான் கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உடைய பேரரசன். அடியார்கட்கு ஆரமுதாய் இனிப்பவன். செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை அரசை, ஆரமுதை நங்கள் பெருமானைப் பாடிப் பன்னலங்களும் பெருகுமாறு நீராடுவோம் என்று கூறுகின்றனர்.

இறைவனைப் பாடிப் பரவுகின்ற இன்பம் அவனது பேரருளால் பெறுகின்ற இன்பம், எங்கும் இலாததோர் இன்பம் என்பதே இப் பாடலின் தெளிபொருள் எனலாம். தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே என்றார் திருஞான சம்பந்தர்.

மன்னராவார் உறுசுகமும்
வானோர்புரிந்து பெறுசுகமும்
மணிப்பைந் நாகந்தவர் சுகமும்
மற்றையோர்கள் பெறுசுகமும்
பன்னுங் காலைச் சிவந்தெழுந்த
‘பரமானந்த லேசம்

என்பார் சிதம்பர சுவாமிகள்.