முனைவர் பத்மஸ்ரீ ஔவை நடராஜன், M.A., M.Litt., PhD. அவர்களின் 75-ஆம் அகவையைக் கொண்டாடி
82 ஆண்டுகளாக அரும் பணியாற்றிவரும்
லிப்கோ பதிப்பகத்தார் அளிக்கும்
பணிவார்ந்த வாழ்த்து மடல்
அற்றார் அழிபசி தீர்த்தல் அறமென்ற
வற்றாத வான்கருணை வள்ளலருட் பாவுக்குத்
தெள்ளு பொருளளித்த செந்தமிழ் வித்தகன்தன்
உள்ளம் மகிழவந்த ஒண்கலைப் பெட்டகமே;
என்றுமுள தென்றமிழ்த்தாய் இன்பமுடன் பாராட்ட
வென்றிபுனை நூல்களெலாம் விண்டுணர்ந்த பேறாள;
பொன்மலர் வாசனை பெற்றதுபோல் வெல்லரிய
மென்மதுரச் சொல்லாற்றல் மேவுபெரும் பண்பாள;
காசினி யெவ்விடத்தும் கால்பதித்துக் கன்னிமொழி
ஆசினி யின்சுளைகாண் என்றார்த்த வித்தகனே;
பைந்தமிழ் நாட்டுயர்ந்த பண்பைமேன் மேலுயர்த்த
செந்தமிழ்க் காவியங்கள் சீரோங்கிப் பல்க
அரசு நிறுவிய ஆன்ற துறைக்கு
விரசு முதல்வனென முன்னின்ற முனைவனே;
வெள்ளைப் பதுமத்தில் வாழும் கலையரசி
உள்ளம் களிக்க பதுமஸ்ரீ பட்டம்
பெருமையுற ஏற்ற பெருநாவல; நின்
அருமையறிந் தல்லவோ தஞ்சைத் தமிழ்ப்பல்2
கலைக்கழ கத்துணை வேந்தெனச் சொல்லித்
தலைமைப் பதவியைத் தந்தனர் தாளாள;
தேன்வழியும் தென்மலயச் சேக்கை தனிற்பிறந்த
தேன்மொழியைத் தென்மொழியை ஆயும் நிலையத்
துணைத்தலைவா; ஔவை நடராசச் செல்வா;
பணைத்த வாவணங்கள் பிறமொழியி லுள்ளவற்றைச்
செம்மொழியில் சீராக மாற்றியருள் சீலனே;
எம்மொழியில் நின்னையாம் வாழ்த்துவேம்; இன்னுமொரு
நூறாண் டிருமென்பேம் நும்புகழ் பல்கோடி
நூறாண் டிலங்கிட நோற்று.
கவிதையுருக் கொடுத்த அன்பன்: வித்துவான் ந.சுப்பிரமணியன், B.A., B.T.

Add a Comment