POST: 2012-03-09T12:03:50+05:30

இந்தியாவில் பன்னிரு ஜோதிர்லிங்கத் திருத்தலங்கள் உள்ளன என்று சிவபுராணம் சொல்கிறது. மகாராட்டிரா மாநிலத்தில் ஐந்து, உத்திரப்பிரதேசத்தில் இரண்டு, மத்தியப்பிரதேசத்தில் இரண்டு, ஆந்திராவில் ஒன்று, குஜராத்தில் ஒன்று, நம் தமிழ்நாட்டில் ஒன்று என பன்னிரு ஜோதிர்லிங்கத் திருத்தலங்கள் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டிலுள்ள ஜோதிர்லிங்கத் தலமான இராமேஸ்வரம் பன்னிரு திருத்தலங்களில் பத்தாவது திருத்தலமாகும். பொதுவாகப் பத்துக்கு எப்போதும் பெருமை உண்டு. உழைக்கும் நம் கைவிரல்கள் பத்து என்பது மட்டுமல்ல.

அரசர் அங்கம் பத்து. அதாவது, மலை, யாறு, நாடு, ஊர், மாலை, பரி, கரி, முரசு, கொடி, செங்கோல்.

ஆண்பாற் பிள்ளைத் தமிழ் பத்து. அதாவது, காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர்.

பெண்பாற் பிள்ளைத் தமிழ் பத்து. அதாவது, காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல்.

பாட்டுக்கள் பத்து. அதாவது பத்துப்பாட்டு எனப்படும், குறிஞ்சிப்பாட்டு, சிறுபாணாற்றுப்படை, திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, பெரும்பானாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, பொருநராற்றுப்படை, மலைபடுகடாம், முல்லைப்பாட்டு.

திக்குகள் பத்து. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, மேல், கீழ்.

அழகுகள் பத்து. சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல், ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல், முறையின் வைப்பு, உலக மலையாமை, விழுமியது பயத்தல், விளங்குதாரணத்தாதல்.

குற்றம் பத்து. குன்றக் கூறல், மிகைபடக் கூறல், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், வழூஉச் சொற் புணர்த்தல், மயங்க வைத்தல், வெற்றெனத் தொடுத்தல், மற்றொன்று விரித்தல், சென்று தேய்ந்திறுதல், நின்று பயனின்மை.

பசி வந்திடப் பறந்திடும் பத்து. மானம், கல்வி, குலம், வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காமம்.

இப்படி பத்தின் பெருமைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

திருமாலின் பிறப்பும் கூட பத்துதான்.

பத்து பிறப்பு கண்ட திருமால் ராமனாகப் பிறந்த போது சிவனை வழிபட்ட பழமையான தலம் இராமேஸ்வரம். இக்கோயிலில் சீதாதேவியால் நிறுவப்பட்ட ராமலிங்கம், அனுமாரால் கொண்டு வரப்பட்ட விசுவலிங்கம் என இரண்டு லிங்கங்கள் இருப்பு இதன் சிறப்புக்கு சிறப்பு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *