சங்க இலக்கியத்தில் தலைவனுக்கும் தலைவிக்கும்
பாடல் எழுதிய புலவர்கள் இருந்தார்கள்
புலமைப்பித்தன்
————————————
நீங்கள் தலைவருக்கும் தலைவிக்கும்
பாடல் எழுதிய புலவர்
இலங்கை போல் இதயம் கொண்ட
இன உணர்வு போராளி
வெள்ளை மீசை வைத்த
குட்டிப் பெரியார்
மயிலையில் ஒரு குயிலைப் பார்க்கிறேன் ஆம்
நீங்கள் பாவேந்தரின் பாட்டுக் குயில்
அவசரக் கவிஞர்கள் மத்தியில் நீங்கள்
எங்கள் அரசவைக் கவிஞர்
நான் யார் நீ யார் என்ற பாடல் மூலம்
நீ யார் என்பதை நான் அறிந்து கொண்டேன்
எம் ஜி ஆரின் நிழலில் வாழ்ந்தவர் நிறைய பேர் இருக்கிறார்கள்
நீங்கள் மட்டுமே புரட்சித் தலைவரின் இதயத்தில் வாழ்ந்த புலவர்
நீங்கள் எம்.ஜி.ஆரின் காற்றில் சுவாசிப்பவர் என்பதால்
அவர் நினைவிடத்தின் எதிரிலேயே நிகழ்ச்சியை வைத்திருக்கிறார்கள்.
ஈசுவரன் கோயில் குடியிருக்கும் இடத்தில் வாழ்ந்தாலும்
நீங்கள் குடியிருந்த கோயில் இராமச்சந்திரன்தான்
சினிமாவில் எல்லோரும் பொருளுக்காக எழுதுகிறார்கள்
நீங்கள் மட்டும்தான் அகப் பொருளுக்கும் புறப் பொருளுக்கும் எழுதுகிறீர்கள்
பலர் தன் பேனா முள்ளிலேயே தன் காலைத் தைத்துக் கொள்கிறார்கள்
நீங்கள் மட்டும்தான் தன் பேனா முள்ளாள் சமூக இழிவைத் தைக்கிறீர்கள்
நீங்கள் அரிதாரம் பூசிக் கொள்ளாதா அதிகாரப்
பாலையில் பயிராகும் பகுத்தறிவு ரோஜா
முற்போக்கே உங்கள் பொழுது போக்கு
திரைச்சேலையை பட்டுச் சேலையாய் மாற்றிய தறியாளன்
நிகழ்காலத் தமிழின் நெறியாளன்
கலங்கரை விளக்காய் உயர்ந்த கரிகாலன்
பேனா கலப்பையால் நிலத்தை உழுது உழுது
பழுதுபார்க்கும் விவசாயி
இளைஞர்களின் இரண்டாம் தாய்
விடுதலை இனத்தில் விலா எலும்பு
கருத்துப்போகாத கருத்தாளன்
எளிமையாய் இருக்கும் எழுத்தாளன்
நீங்கள் இலையை வைத்து மருத்துவம் பார்க்கும் சித்தன்
புடவை பித்தனாய் இல்லாத புலமைப்பித்தன்
வயதால் கனிந்தவன்
தமிழுக்கு மட்டும் பணிந்தவன்
பரம்பரையை மீட்க துணிந்தவன்
வெண்ணிலாவை தோல் உரித்து வேட்டி சட்டை அணிந்தவன்
இந்த மக்கள் திலகத்தின் மாண்புமிகு தொண்டனை
நான் வரலாற்று தமிழால் வணங்குகின்றேன்.
கவிஞர் தங்க காமராஜ்- 13/4/2012

Add a Comment