முனைவர் ஔவை நடராசன் அவர்களின் உரைச் சுருக்கம்
திருமிகு சு.த.முதலி அவர்களே,
[கௌரவ செயலாளர்,
மியர் பேங்க் தமிழ்ப்பாடசாலை சபை]
கடந்த 120 ஆண்டுகளாகத் திரைகடலோடித் தென்னாப்பிரிக்காவை வாழ்வகமாக்க் கொண்டு வாழ்ந்து வரும் இந்தியத் தமிழ் மக்கள் இந்தியப் பண்பாட்டையும் குறிப்பாகத் தமிழ்க்கரை, இயல், இசை, நாடகம் ஆகியவற்றைக் கண்போல் போற்றிக் கருத்தாக வளர்த்து வருகிற செய்தியை நான் அறிந்து மகிழ்கிறேன். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பொன்மொழிக்கேற்றவாறு தென்னாப்பிரிக்காவில் வாழ்கின்ற தமிழர்கள் அங்குள்ள மக்களோடு நன்கு பழகித் தோழமையும் நட்புணர்வும் வளர்த்து வருகிறார்கள். தமிழ்க்கல்வி பெருக, தமிழ்ப்பண்பாட்டுக்கூறுகள் வளர, தென்னாப்பிரிக்கத் தமிழ் மக்கள் ஆற்றிவரும் பணிகள் போற்றத்தக்கனவாகும். உலகெங்கும் வாழும் அயலகத் தமிழர்கள் தமிழ் கற்கவும் தமிழ்க்கலை, தமிழ்நாகரிகப் பண்பாடுகளைப் பேணி வளர்க்கவும் தேவைப்படும் உதவிகளையெல்லாம் தமிழக அரசு இயன்றவரை செய்துவருகிறது. அயலகத் தமிழர்களோடு கலை பண்பாட்டு உறவு கொள்வதற்காக உலகத்தமிழ்ச் சங்கத்தைத் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித்தலைவர் அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அச்சீரிய நோக்கம் வெற்றிபெறத் தென்னாப்பிரிக்காவிலுள்ள தமிழ் நிறுவனங்களும் ஒத்துழைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

Add a Comment