புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில், செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல் இங்கே.
அண்ணா கண்ணன் : ஐயா வணக்கம்
முனைவர் ஔவை நடராசன் : வணக்கம்.
அண்ணா கண்ணன் :
முத்துவிழா கண்டு, ஆயிரம் திரைகள் கண்டுள்ள நீங்கள், இந்த நீண்ட நெடிய வாழ்க்கையில் உங்களுக்கு மன நிறைவளித்த நிகழ்வுகள் என்று எதையெல்லாம் சொல்வீர்கள் ?
முனைவர் ஔவை நடராசன் :
அண்ணா கண்ணன் உங்களோடு பேசுவதே எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகப்பெரிய முத்துவிழா என்று சொல்லி மகிழ்வதற்கு ஒன்றும் இல்லை. நானொன்று போனால் ஆண்டு வருகிறது என்று சொல்வது போல 80 ஆண்டுகள் கடந்துவிட்டதால், இயல்பான தளர்ச்சியை என்னால் பல நேரங்களில் காண முடிகிறது. ஆனாலும், இந்தநெடிய வாழ்வு தமிழ் வாழ்வாகவே தழைத்தது என்று நினைக்கும்போது, நான் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் பள்ளி மாணவனாக இருந்தபோதே, என் நெஞ்சில் தமிழார்வம் தளும்பிக் கொண்டிருந்தது. எனக்கு வாய்ப்பாக கிடைத்த என் தமிழாசிரியர், இனிய தமிழ்ப் பகுதிகளை மனனம் செய்யவும், வாய்ப்பிருக்கும்போது எடுத்து உரைப்பதுமான பழக்கத்தை எனக்கு உரைத்தார்கள். அந்த வகையிலேதான் தமிழாசிரியராக திகழ வேண்டும் என்று நான் கொண்ட மன உறுதி, நான் நினைத்ததுபோலவே நிகழ்ந்தது. பெரும்பாலும் வாழ்க்கையில் நினைப்பதுபோல் நடக்குமா என்று கேட்டால், நினைப்பில் திண்மை இருந்தால் அவ்வாறு நடக்கும் என்றுதான் நான் என் வாழ்க்கையில் காண முடிகிறது.
என்னுடைய அருமைத் தந்தையார், தமிழ்ப் பெருங்கடலாக இருந்து, தன் பணிகளை ஆற்றுவதை, நான் இளம் பருவத்திலிருந்தே பார்த்திருக்கிறேன். பொழுது விடிந்தால், அவர் எழுதத் தொடங்குவார். பொழுது முடிந்த பிறகும்கூட அந்த எழுத்துப் பணியை தொடர்ந்து எழுதுவார். அவருக்கு அந்த வாய்ப்பிருந்தது. எனக்கு அப்படி எழுதுகிற ஊக்கம் வராமல், எடுத்துப் பேசுகிற ஆர்வத்தினால், கூட்டங்களில், அறிஞர்கள் பேசுவதைக் கேட்டு கேட்டு அவ்வாறு பேச வேண்டும் என்ற ஆர்வம் எனக்குப் பெருகிற்று. இந்த நிலையிலேதான், நான் தியாகராசர் கல்லூரியில் தமிழ் படித்த மாணவனாக இருந்தபோது பிறகு அங்கேயே நான் பணியாற்றினேன்.
கல்லூரி விரிவுரையாளர்
தியாகராசர் கல்லூரியில் 1958 ஆம் ஆண்டில் நான் பணியாற்றியபோது, என்னோடு பேராசிரியர் தமிழண்ணல், அண்மையில் மறைந்த தமிழ்ப்பல்கலைக் கழக துணை வேந்தராக இருந்த, மகாதேவன், இவர்களெல்லாம் என்னோடு உடன் பணியாற்றினார்கள். பேராசிரியர் சு.பாலச்சந்திரன் போன்ற இவர்களோடு உடன் இருந்ததால், எந்நேரமும் தமிழ்ப்பாடல்களையும், தமிழ்க் கவிதைகளையும் படித்து, சொல்லி, பேசுகிற ஆர்வம் வந்தது.
தொடக்க ஆசிரியராக என்னுடைய பணியை தியாகராசர் கல்லூரியில் தொடங்கியபோது, ஒத்த வயதினரான பேராசிரியரான மீரா, பேராசிரியர் அப்துல் ரகுமான், மாணவர்கள் அபிபுல்லா, மேத்தா, நா.காமராசன், காலம் சென்ற காளிமுத்து முதலியோர் மாணவர்களாகவும், என்னோடு நெஞ்சார பழகும் நண்பர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் அப்படி இருந்ததால், வாய்விட்டு பேசுவதெல்லாம் கவிதைகளாகவும், எண்ணுகிற எண்ணங்களையெல்லாம் எப்படி எதுகை மோனையோடு கலந்து பேசலாம் என்பதையும் தொடர்ந்த ஆர்வம் என்னெஞ்சத்தை கவர்ந்து கொண்டது.
பச்சையப்பன் கல்லூரி
நான் பச்சையப்பன் கல்லுரியில் 1952 முதல் 1955 வரை மூன்றாண்டு காலம் தமிழ் முதுகலை படித்தேன். நான் மதுரையில் இருந்து அப்போது முதுகலை படிப்பதற்காக சென்னை மாநகருக்கு வந்தது, ஒரு பெரிய நெடும் பயணமாக எனக்குத் தோன்றியது. எங்களுக்கெல்லாம் அந்த நாளில் பேராசிரியர் என்றால், மு.வ. அவர்களைப் பற்றிய ஒரு பெருமிதமான கருத்து இருந்தது. எனவே, பெருமிதம் வாய்ந்த பேராசிரியர் மு.வ. அவர்களிடத்தில் பயில்கிறோம் என்கிற ஊக்கத்தால் நாங்கள் சென்னை மாநகருக்குச் சென்றோம். சென்னை மாநகரத்தில் அவரைப் பார்த்து, நாங்கள் தமிழ் பயில வந்திருக்கிறோம் என்று சொன்னபோது, அவர் எல்லோரும் நினைப்பதுபோல் ஊக்கம் தரவில்லை. “ஏனப்பா இந்த இளம் வயதில் நீங்கள் வேறு துறைகளைப் பயின்று, வேறு துறைகளில் வளர்ந்து செழிப்பாக இருக்கலாமே, தமிழ் என்பது உங்களுக்கு இயல்பாக வரும், இயற்கையாக தொடர்ந்து தமிழ் நூல்களைத் பயின்றால் தமிழ் ஆர்வம் வரும். எனவே, நீங்கள் வேறு துறையில் படிக்க வேண்டாமா என்று கேட்டபோது, எங்களுக்கு ஒரு திடுக்கீடாக இருந்தது என்றாலும், அவர் மனம் கனிந்து எங்களை முதுகலையில் சேர்த்துக் கொண்டபோது, பேராசிரியர்கள் அ.மு.பரமசிவானந்தம், அன்புகணபதி இப்படி தொடராக ஆசிரியர்கள் எங்களுக்கு கற்பிப்பதில் இருந்தபோது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
பேராசிரியர் மு.வ. அவர்களின் மாணவராய்……
பேராசிரியர் மு.வ.அவர்கள் அமைதியாகவும், ஆழமாகவும் சங்க இலக்கியப் பாடல்களை எங்களுக்கு கற்பித்து பாடல்களை எடுத்துக்காட்டிய திறம் இருக்கிறதே, அது எங்களால் மறக்கவே முடியாது.
நற்றிணையில் வரும் குறிஞ்சித் திணைப் பாடல்
பூக்களிலே சிறந்த பூ தாமரைப் பூ,
மரங்களிலே சிறந்த மரம் சந்தன மரம்,
இடங்களிலேயே உயர்ந்த இடம் மலைகளின் உச்சி,
எனவே அந்த மலை உச்சியில் தாமரையில் நிறைந்த தேனை கொண்டுபோய், சந்தனத்தில் போய் பொதிந்து வைத்தால் எப்படி இருக்குமோ
என்று நற்றிணைப் பாடலை அவர் எடுத்துக்காட்டியது எனக்கு இன்றைக்கும் நேரிலே உரைப்பது போல் இருக்கிறது. சான்றோர்களின் நட்பு என்பது சாலப்பெரிய நன்மை தருவது அகன்றது ஆழமுடையது என்ற கருத்தை அந்தப் பாடலில் எங்களுக்கு பேராசிரியர் மு.வ. எடுத்துக்காட்டியதை நான் இப்போது பார்ப்பதற்கில்லை.
தஞ்சை சரபோஜி கல்லூரி
பிறகு நான் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலையை முடித்துவிட்டு, தியாகராசர் கல்லூரியில் சில ஆண்டுகள் பணி புரிந்தபோது, என்னுடைய வாழ்க்கையில் பிறகு, நான் தஞ்சை சரபோஜர் கல்லூரியில் 1961ல் பணியாற்ற வந்தேன். அங்கே பணியாற்றியபோது, நான் எனது மாணவர்களுக்கு, எழுச்சி வாய்ந்த என் குரலில் பாடங்களை நான் நடத்துவது அவர்களுக்கு பெருமிதமாக இருந்தது. அவர்களுக்கு உரிய வகையிலே தமிழை இனிமையாக எடுத்துக்காட்டுவது,
பாடல்களை சொல்லிக் காட்டுவது,
நாடகம் நடிப்பது,
எல்லா வகையிலேயும் தமிழார்வத்துடன் பங்கு பெறுவது,
வாய் திறந்தால் எந்தச் சொற்களையும் தமிழில் எப்படி ஒலிப்பது என்பதை கற்றுக்கொள்வது, ஆங்கிலச் சொற்கள் படிகிற இடங்களில் எல்லாம் உரிய தமிழ்ச் சொற்களை கண்டறிவது
என்ற வகையில் சரபோஜி மன்னர் கல்லூரியில் எனக்கு இரண்டாண்டு காலம் எல்லையில்லாத மகிழ்ச்சியைத் தந்தது, பெருமிதம் தந்தது. அந்த தமிழ் வளர்ச்சி ஆர்வம் நிலைகொண்டது தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியில்தான்.
புது தில்லி வாழ்வு
என்னுடைய வாழ்க்கை, வளர்ச்சிக்கு நன்மையாக இருந்தது என்று நான் பல ஆண்டுகள் நினைத்தேன். பிறகு தஞ்சையில் இருந்து, எனக்கு அங்கிருந்து வளம் பெற வேண்டும் என்ற வாய்ப்பு இருந்தாலும்கூட, நான் 1960ம் ஆண்டு புதுடில்லிக்குச் சென்று, அங்கு வானொலி நிலையத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினேன். சில ஆண்டுகள் இல்லை. எண்ணினால் ஒரு எட்டு திங்கள்தான் பணியாற்றினேன். அது எனக்கு ஒரு புதுமையான பணியாகவும், இனிய தமிழை வானொலியில் எடுத்துப் பேசுவதைக் கேட்டு அப்போது எல்லோரும் வியந்தார்கள். புதுடில்லியில் விடியற்காலையில், கிழக்கு நாடுகளுக்கு ஒலிபரப்பு என்ற அந்த ஒலிபரப்பில் நான் பங்கு கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இருந்தாலும்கூட என்னுடைய சிந்தனைக்கோ, என்னுடைய கருத்துக்கோ, என்னுடைய நெஞ்ச ஓட்டத்துக்கோ அந்த வானொலி நிலையம் ஒரு பெரிய நிறைவைத் தரவில்லை என்ற கருத்தினால், நான் மீண்டும் 1961ம் ஆண்டே தியாகராசர் கல்லூரிக்கு வந்தேன். தியாகராசர் கல்லூரி வந்த பிறகு, நான் பணியாற்றத் தொடங்கினேன். சரபோஜி மன்னர் கல்லூரியில் பணியாற்றியதைப்போல, தியாகராசர் கல்லூரியிலும் மகிழ்ச்சியாக பணியாற்றினேன்.
திருமணம் தந்த திருப்பம்
இந்த வகையிலேதான் 10.12.1961ம் நாளில் என்னுடைய திருமணம் நிறைவேறிய பிறகு, என்னுடைய துணைவியாருடன் நான் சென்னையில் இருக்க வேண்டும் என்ற ஒரு வாய்ப்பு எனக்கு வந்ததால், சென்னையில் எந்தப் பணியிலாவது சேர்ந்துவிடலாம் என்று துணிவாக தியாகராசர் கல்லூரியை விடுத்து நான் வந்தேன். எல்லாம் நன்மைக்கே என்கிற வகையில், நான் சென்னை மாநகரத்திற்கு வந்த பிறகு, சென்னையில் எல்லா கல்லூரியிலும் பேசினேன், எல்லோரும் என்னை ஆர்வத்துடன் அழைத்தார்கள். பார்க்கிறவர்களெல்லாம் ஔவையினுடைய பேச்சு எங்கே என்று கேட்கிற அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இராமலிங்கர் பணிமன்ற செயலாளர் பணியில்…. (1965 முதல் 1975 வரை)
அந்த நேரத்திலேதான் அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள், இராமலிங்கர் பணி மன்றம் என்று ஒரு நிறுவனத்தை தொடங்குவதாகவும், அதற்கு ஒரு நல்ல ஆற்றல் வாய்ந்த, தமிழ் உணர்வு ததும்புகிற ஓர் இளைஞர் செயலாளராக இருந்தால், எங்கள் கருத்துக்களை நாங்கள் பரப்புவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சொன்னார்கள். நான் இங்கே மகிழ்ச்சியாக குறிப்பிடுவது, எனக்கு அங்கே பெருந்துணையாக இருந்தவர், அருட்பா கிரிதாரி பிரசாத் என்று நான் சொல்ல வேண்டும்.
வெள்ளம்போல் பேசி, மக்கள் உள்ளங்களைக் கவர்ந்தது என்றால் மிகையில்லை. அவர் தமிழில் பெரும் புலமை உள்ளவர், ஆங்கிலத்தில் புலமை உள்ளவர். கீதையில் கரை கண்டவர், அவர் மரபாக இந்தி பேசும் குடும்பத்தில் இருந்து வந்தவர். அந்த நிலையிலேதான் நான் ஆயிரக்கணக்கான ஆங்கில நூல்களை அவரோடு இருந்து படிக்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அருட்ச்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம், கிரிதாரி பிரசாத், நான் ஆகிய நாங்கள் மூவரும் டில்லி மாநகருக்கு ஒரு திங்கள் சென்று, அங்கு பல்வேறு இடங்களில் பேசினேன். அங்கு அருட்செல்வருக்கு எனக்கு ஏற்பட்ட பழக்கத்தினால், சான்றோர்கள், செல்வந்தர்கள், பொதுமக்கள், வணிகர்கள் அனைவரிடத்திலும் பழகுகிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது, என்னுடைய வாழ்க்கையில் ஒரு பெருமிதத்தை தந்தது.
முத்தமிழறிஞர் கலைஞருடன் நட்பு….
இராமலிங்கர் பணி மன்றத்தின் நிகழ்ச்சிகளெல்லாம், ஏ.வி.எம். திருமண மண்டபத்தில்தான் நடைபெறும். அந்த இனிய மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, தமிழ் நாட்டுச் சான்றோர்கள் அனைவரையும் அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பது வழக்கம். அப்படி அழைத்த வகையிலேதான் பேரறிஞர் அண்ணா வந்திருக்கிறார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வந்தபோதுதான், நான் அவருக்கு ஒரு வரவேற்புரை ஆற்றினேன். வரவேற்புரை ஆற்றும்போது அவர் சொன்னார், “ஔவை நடராசனை நான் மாணவனாக இருக்கும்போதே அறிவேன். அவரைப் போன்றவர்கள் எனக்குத் துணையாக ஆலோசிக்க வருவார்களானால், அது மிகப் பெரிய ஊக்கத்தை தரும்” என்று சொன்னது ஒரு பெரிய ஆரவாரத்தை கூட்டத்திற்கு வழங்கியது.
அருட்செல்வரின் மனம் முழுமையாக இசைந்தது என்று நான் சொல்ல மாட்டேன். அதற்காக கசந்தது என்றும் நான் சொல்ல மாட்டேன். அவர் “சரி, ஆலோசிக்க உங்களை அழைக்கிறபோது நீங்கள் சென்று வாருங்கள்” என்று சொன்னார்.
நான் அந்த நிலையிலேதான் செய்தித்துறைக்கு 1975ல் துணை இயக்குநராகவும், பிறகு சில திங்களில் மொழிபெயர்ப்புத் துறையின் இயக்குநராகவும் ஜுலை 1975 முதல் ஏப்ரல் 1984 வரை பணியாற்றினேன். மொழிபெயர்ப்புத்துறையின் இயக்குநராக நான் பணியாற்றியதால், என்ற புதுமை என்று சொன்னால், அரசின் சார்பாக வருகின்ற பெருமக்களையெல்லாம், சான்றாக திரு.ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் வந்தபோதும், இந்திய நாட்டின் தலைமை அமைச்சர்கள் வந்தபோதும், அவர்கள் பேசிய உரைகளுக்கெல்லாம் நான் தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்வது, உரைபெயர்ப்பு செய்வது என்கிற பொறுப்பும் எனக்கு அமைந்தது, எனக்கு பெரிய இன்பமாக இருக்கிறது இப்போது நினைத்துப் பார்த்தாலும்.
புரட்சித் தலைவரின் பாசம்
எவ்வாறு கலைஞர் அவர்கள் எனக்கு மதிப்பில் பெரியவராக தெரிந்தாரோ, அதே நிலையில், ஒத்த நிலையில் நான் பச்சையப்பன் கல்லூரியில் மாணவனாக இருந்தபோதே, புரட்சித்தலைவர் அவர்களோடு எனக்கு ஒரு நெருங்கிய நட்பு இருந்தது. அந்த நட்பினால், இல்லாமையால் வருந்துகின்ற மாணவர்களை அழைத்துக் கொண்டுபோய், அவர்களுக்கு நிதி உதவி பெற்று தருவதும், அவர்களுக்கு திங்கள்தோறும், அந்த கல்லூரிச் செலவைக் கட்டுகிற வாய்ப்பை பெற்றுத் தருவதுமாக என்னுடைய நட்பு இருந்தது.
அவர் அந்த வகையில் என்பால் பேரன்பு கொண்டவராக இருந்தார். அது எனக்கு வாய்த்த ஒரு பெரிய நற்பேறு என்றுதான் சொல்ல வேண்டும். கலைஞருக்கு அடுத்து அவர்தான் முதலமைச்சராக வந்தார். என்னைப் பார்த்தவுடனேயே எனக்கு முன்னாலேயே நீங்கள் அரசுக்கு வந்துள்ளீர்கள் என்று சிரித்து சொல்லி, என் தோளைத் தழுவினார். அவருடன் எந்த நிகழ்ச்சியிலும் நான் பங்கு பெறுவேன். நான் முதலமைச்சருக்கு வேண்டியவன் என்று அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த்து. இந்த நிலையில், நான் மொழிபெயர்ப்புத்துறையில் ஒரு பத்தாண்டுகாலம் நிறைவடைகிறது என்று போய் நான் கேட்டேன், “எனக்கு இந்த துறை போதும், இந்த துறையை விட்டு வேறு இடத்திற்கு நான் செல்வதற்கு நீங்கள் வழி செய்ய வேண்டும்” என்று கேட்டேன். அதற்கு அவர் கேட்டார், “நான் என்ன வழி செய்வது, நீங்கள் எந்த துறைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள், நான் அனுப்புகிறேன்” என்று சொன்னார்.
அரசு செயலாளர் பணி (1984-1992)
அப்போதுதான் நான் சொன்னேன், “அரசு செயலாளர்கள் என்று, ஒரு இருபத்தைந்து பேருக்கு மேல் இருக்கிறார்கள், அவர்கள் எல்லாம் தங்கள் துறையில் வல்லவர்களாக இருக்கிறார்கள் என்பது மட்டுமில்லை, அவர்கள் மைய அரசில் இந்திய ஆட்சிப் பணி தேர்வு பெற்றவர்கள், அதனால், அவர்கள் துறைச் செயலாளர்களாக வர முடிகிறது. தமிழுக்கு அதுபோல, தமிழ் சார்ந்த துறைகள் என்று பார்த்தால், ஒரு எட்டு பத்து பிரிவுகள் இருக்கின்றன. தமிழ் வளர்ச்சித்துறை என்பது, மொழிபெயர்ப்புத்துறை என்பது, அருங்காட்சித்துறை என்பது, நூலகத்துறை என்பது, அகராதித்துறை என்பது, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் என்பது, தமிழ்ப்பல்கலைக்கழகம் என்பது என்கிற வகையில் இருக்கிற பிரிவுகளையெல்லாம் ஒன்றாக்கி, அரசு செயலாளர் என்கிற அமைப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்குமா என்பதை தாங்கள் தான் ஆராய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டேன். “உடனே அதை அப்படியே எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டு, “நான் நாளை மறுநாள் புதுடில்லி செல்கிறேன், டில்லி சென்று திரும்பியதும் உங்களுக்கு விடை சொல்கிறேன்” என்று டில்லி சென்றார். சொன்னதுபோலவே செய்தார். அவர் திரும்பி வந்தவுடனேயே, எனக்கு தொலைபேசியில் அழைத்து, “உங்களை நான் அரசு செயலாளராக இன்று முதல் நியமிக்கிறேன்” என்று சொன்னார்கள்.
அது எனக்கு ஒரு பெரிய மணி மகுடம் இட்டதுபோல் இருந்தது. அரசு செயலாளர் என்பது ஒரு பத்துப் பிரிவுகளை ஒன்றாக்கி நிர்வகிக்கும் பெரும் பொறுப்பாகும். அந்த பொறுப்பில் நான் ஒரு எட்டாண்டு காலம் தொடர்ந்து இருந்தது என் வாழ்க்கையில் பெரிய சிறப்பு என்றுதான் நான் நினைக்கிறேன்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக துணை வேந்தராக…. (1992-1995)
அந்த நிலையிலேதான் நான் அப்படி பொறுப்பில் இருந்தபோதே, எனக்கு நினைவிருக்கிறது, இப்போதைய முதலமைச்சர் அம்மையார் அவர்கள், முதலமைச்சராக 1992ல் இருந்தபோது என்னை அழைத்துச் சொன்னார்கள், “தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகம் கொஞ்சம் தளர்ந்துபோய் இருக்கிறது, அது அடிக்கடி சில இடர்பாடுகளுக்கு இரையாகிறது, நீங்கள் அங்கு துணை வேந்தராகப் பொறுப்பேற்றுக் கொண்டால், அது பெருமையாக இருக்கும், நாளை முதல் நான் உங்களை துணை வேந்தராக அமர்த்தம் செய்கிறேன்” என்றார்கள்.
அது பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல்தான். காரணம், என்னுடைய வாழ்வில் தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்கு துணை வேந்தராக இருக்க வேண்டும் என்ற விருப்பம் ஒரு மூலையில் இருந்தது. இப்போது சொன்னால் அது குற்றமில்லை. அதை தெரிந்தவர்கள் இப்போது யாரும் இரண்டொரு அமைச்சர்கள் தெரிந்தவர்கள், அவர்கள் இருவருமே இப்போது உயிரோடு இல்லை. புரட்சித்தலைவர் அவர்கள், தமிழ்ப்பல்கலைக் கழகத்தை உருவாக்கிய உடனேயே, முதல் துணை வேந்தராக என்னைதான் அமர்த்தம் செய்ய வேண்டும் என்று அவர் விரும்பி இருக்கிறார். ஆனால், அப்போது தலைமைச் செயலாளராக இருந்த திரு.க.திரவியம் அவர்கள், ஔவை நடராசன் வயதால் இளையவர், ஒரு ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் நம்முடைய பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியத்தை அமர்த்தலாம் என்று சொன்னார். அவர் என்னைவிட பல மடங்கு தகுதி வாய்ந்தவர், பெருமிதம் வாய்ந்தவர், அப்போது அவர் ஜப்பானில் ஒரு ஆய்வு மாணவராக சேர்ந்திருந்தார். என்னைத்தான் அழைத்து பேசச் சொல்லி, அவரை துணை வேந்தர் பொறுப்பை ஏற்றுமாறு சொன்னார்கள். அது ஒரு பழைய நிகழ்ச்சி. அவ்வாறு அந்த நிகழ்ச்சியெல்லாம் தொடர்ந்து ஒரு பத்தாண்டுகள் கழித்த பிறகுதான், இந்த நிகழ்ச்சியாக “நீங்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகச் செல்ல வேண்டும்” என்று முதலமைச்சர் அம்மையார் சொன்னபோது, “நான் மகிழ்ச்சியோடு ஏற்கிறேன்” என்று பெருமிதத்தோடு சொன்னேன், “என்னுடைய பணி நிறைவு ஒரு மூன்றாண்டு காலத்தில் முடியும், நான் இங்கேயே இருந்துவிட்டு பிறகு ஒரு மூன்றாண்டு கழித்து சென்றால், எனக்கு இன்னும் பணியாற்றிய நாள் கொஞ்சம் அதிகமாகும்” என்று சொன்னேன். “இல்லை இப்போதைய சூழலுக்கு நீங்கள் உடனேயே செல்வது தக்கது” என்றார்கள். நான், “சரி” என்று இசைந்தேன். அது எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியாகும்.
துணை வேந்தர் பணி நிறைவு
இப்படி நான் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஒரு மூன்றாண்டு காலம் பணியாற்றினேன். அது மகிழ்ச்சியான ஒரு பணிதான். ஆனால், பல நேரங்களில், பேராசிரியர்களை எல்லாம் கொண்டு, பல்கலைக் கழகம் ஒரு பெரிய வரையறையை செம்மையாக அமைத்துக் கொள்ளவில்லை என்பதினால், அது எப்படி போனாலும், பலநேரம் பலபேர் கழுத்தை நெருக்குவதைக் கண்டு, மனம் துணுக்குற்றிருந்தது. என்றாலும், மகிழ்ச்சியாகவே இருந்து, நான் நினைக்கிறேன், விடை பெற்று செல்லும்போது ஒரு பாடல் கூட சொன்னேன்.
“இருந்தமிழே உன்னால் இருக்கின்றேன் என்றும்,
அருந்தமிழால் ஆக்கமெலாம் பெற்றேன் – பொருந்துபுகழ்த்
தஞ்சைநகர் பல்கலைவிட் டேகின்றேன் தண்ணளியீர்
நெஞ்சமெலாம் உங்கள் நினைப்பு
என்று ஒரு பாடல் எழுதியதாகக்கூட நினைப்பு.
குடும்பம்
பிறகு என் மக்கட்செல்வங்கள், அவர்கள் தங்கள் கல்விச் செல்வத்தினால், அயல் நாடுகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், என்னுடைய துணைவியாரும் பெரிய மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றதனால், நாங்கள் இருவரும், ஆஸ்திரிலேலியா நாடு, தென்னாப்பிரிக்க நாடு முதலிய நாடுகள் பலவற்றிற்குச் சென்று, ஒரு மூன்று நான்கு ஆண்டுகள் கழித்த பிறகு, மீண்டும் சென்னைக்குத் திரும்பினேன். திரும்பிய பிறகு எல்லா தமிழ் வளர்ச்சி நிகழ்ச்சிகளுக்கும் நான் பங்கு கொள்வது மட்டுமல்ல, எந்த குழுவிலும் என்னையே தலைவராக நியமித்தார்கள்.
துணைத் தலைவர் (செம்மொழி நிறுவனம்)
ஒரு இரண்டாண்டுகளுக்கு முன்பு கூட 01.03.2014ம் ஆண்டு செம்மொழி நிறுவனத்தில் நான் துணைத் தலைவர் பொறுப்பேற்க வேண்டும் என்று மைய அரசில் சொன்னார்கள். செம்மொழி தொடங்கியபோது, செம்மொழி நிறுவனத்தை சென்னை மாநகரில், தலைமையிடம் உருவாக்கியபோதும், அந்த துணைத் தலைவர்களின் ஒருவராக இருக்க வேண்டும் என்று என்னுடைய பணியைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
இந்த வகையில், எல்லா நிலைகளிலும், தமிழ் நிறுவனங்களிலும், தமிழ் மன்றங்களிலும், பங்கு கொண்ட மகிழ்ச்சியோடும், தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு உரையாற்றுகிற திறத்தோடும்,
என்னைப் பொறுத்த அளவுக்கு எந்த கருத்தை எப்போது பேசினாலும்,
ஒரு தெளிவான சிந்தனையும்,
ஓர் ஆழ்ந்த புதுமையும்,
அதனால் சமுதாயத்திற்கு பயன்படுகின்ற ஆக்கமும்
ஆகிய மூன்றையும் நோக்கமாகக் கொண்டுதான் நான் உரையாற்றுவது வழக்கமாகும். அந்த வகையில் மேடையில் பேசி பேசி என்னுடைய வாழ்க்கை இந்த அளவுக்கு இப்போது வந்திருக்கிறது. நான் தொடர்ந்து என்ன சொல்ல வேண்டும் என்று சொன்னால், என்னுடைய நண்பர்கள் சொல்வதுபோல், மேடையில் வீசுகின்ற மெல்லிய தென்றலாக, பலபேர் மேனியில் பட்டு அவர்கள் மேனி நெருட மகிழ்ச்சி பெருக என்னுடைய கருத்துக்களை நான் சொல்லி வருகிறேன்.
கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில்
ஆக, இந்த எண்பது ஆண்டு காலம் என்பதும், எட்டுப் பத்து ஆண்டுகளாகத்தான் என்று நினைக்கிறேன். வாய்ப்பிருந்தால், இன்னும் வாழ்விருந்தால், இன்னும் அளப்பறிய ஊக்கம் இருந்தால், இந்த காட்சியெல்லாம் கொஞ்சம் நீங்குமானால், இன்னும் கூட நான் பல இடங்களுக்குச் சென்று உரையாற்றுவதை வளர்த்துக்கொள்ள முடியும்.
இப்போது நான் நெடுந்தொலைவு சென்று நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதற்கு, வாய்ப்பில்லாதபடி இருக்கிறது. யாராவது ஒருவர் என்னுடன் வர வேண்டும், என்னை தோள் தொட்டு அழைத்துக்கொண்டு போக வேண்டும் என்கிற நிலை இருப்பதனால், தளர்ச்சி என்பது மன நெகிழ்ச்சியைத் தருகிறது. ஆனாலும், தமிழ்க்கூட்டங்களைக் காணும்போது, அந்த மகிழ்ச்சி பெருகி வருகிறது. எனவே, எண்பது ஆண்டுகள் என்று பார்த்தால், இந்த எட்டு என்ற கணக்கு முடிகிறது. புதியதாக ஒன்பதை நோக்கி கணக்கு தொடங்குகிறது என்ற மகிழ்ச்சி என் உள்ளத்தில் படருகிறது.
வணக்கம்.

Add a Comment