அருள் இயக்கம்
(ஔவை – சு.துரைசாமி, மதுரை)
சித்தாந்தம் இதழ் – 1945
பகுதி – 3
இனி, பரிப்பு என்னும் சொல்லின் பொருள் இதுதானா என்றோர் ஐயம் சிலர் உள்ளத்தில் எழலாம். ஞாயிற்றின் பரிப்பு என்பதற்கு உரை வகுத்த புறநானூற்றுப் பழையவுரைகாரர் ஞாயற்றினது இயக்கம் எனப் பொருள் கூறி, “பரிப்பு என்றது இத்துணை நாழிகைக்கு இத்துணை யோசனை செல்லும் என்னும் இயக்கத்தை “என்று விளக்கமும் கூறினார். ஞாயிறு நிலவுலகத்தைச் சுற்றுகிறதென்னும் கொள்கை அக்காலத்தே நிலவியதனால் அவர் இவ்வாறு கூறவேண்டியவரானார். இக்கால விஞ்ஞானிகளுள்ளும் அதனை முற்றிலும் மறுப்பவர் இலர்; ஞாயிற்றுக்கும் இயக்கமுண்டு; அது நிலவுலகு முதலிய வானுலகப்பொருள்கள் எல்லாவற்றையும்விட மிகமிகப் பெரிதாக இருத்தலால் ஏனைத் திங்கள் முதலியவற்றைப்போல இயக்கம் புலப்படத் தோன்றவில்லை என்பர். நிற்க, பரிப்பு என்னும் சொல்லுக்குத் தாங்குதல் என்னும் பொருள் உண்டு; “வாழும் நாளினில் தமைப் பரித்தவரையும் வணக்கித் தாழும் நாளினில் சரண் என அவரையே சாரும், ஏழை “என்று பிற்காலத்து ஆன்றோரான செவ்வந்திப் புராணமுடையார் கூறுவதாலும், ஞாயிற்றின் செலவும் எனச் செலவு கூறிப் பின்னர் அஞ்ஞாயிற்றுப்பரிப்பும் எனக் கூறுதலாலும் தாங்குதல் என்ற பொருளே ஏற்றது என்பது விளங்கும்.
இப்பரிப்பினால், ஞாயிறு, நாள்கோள் ஆகிய வானப் பொருள்களை ஈர்த்துப் பற்றித் தாங்குகிறது; அதனால், அவை ஞாயிற்றைச் சூழ்வருகின்றன. அன்றியும், ஞாயிற்றின்பால் உள்ள இப்பரிப்பாற்றல் அதனைச் சூழ்வரும் நிலவுலகு முதலியவற்றிற்கும் பாய்கிறது. அதனால், நிலவுலகைத் திங்கள் மண்டிலம் சுற்றி வருகிறது. நிலத்திலுள்ள பரிப்பு அதன் மேலே உள்ள பொருள்களை ஈர்த்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஞாயிறு முதலிய கோள்களிடத்தே பரிப்பென்னும் ஈர்ப்பாற்றல் இயல்பாக அமைந்திருப்பதை நியூட்டனுக்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே நம்மவர் கண்டிருந்தாராயினும், அதன் உண்மை கண்டு அளந்து பயன்படுத்திய பெருமையும் அருமையும் மேனாட்டவர்க்கே உரியவை என்பதை யாரும் மறுக்க முடியாது.

Add a Comment