அருள் இயக்கம்
(ஔவை – சு.துரைசாமி, மதுரை)
சித்தாந்தம் இதழ் – 1945
பகுதி – 7
முழுமுதற் பொருளிடத்திலிருந்து பாயும் பரிப்பு அதனை இயக்கும்; அதனால் ஞாயிற்றின்பால் தோன்றும் செலவும் பரிப்பும் நிலத்தையும் திங்களையும் இயக்குகின்றன. இதனை மேலே காட்டிய படத்தில் தெளியக் காணலாம். இவ்வாறே முழு முதலாகிய சிவத்தின் அருளாகிய பரிப்பினால் நம்முடைய உயிரும் உடலும் இயங்குகின்றன. அருளால் பரிப்புண்டு நிற்கும் உயிர் ஞாயிறு போலத் தானும் இயங்கித் தன்னைச் சூழ்ந்து தாங்கும் உடற்கூறுகளையும் இயக்குகிறது. அதனால் உயிர் உள்வழிக் காணப்படும் வளமும் ஒளியும், அது நீங்கியபோது உடலிடத்தே அவை காணப்படாமற் போகின்றன. உயிரும் உடம்பும் பரிக்கப்படும் திறத்தை இப்படத்திற் காணலாம். உடம்பின் பரிப்பினால் உயிரும் ஈர்க்கப்படுவதனால், “துன்பம் உழத்தொறும் காதற்று உயிர்” என்று திருவள்ளுவனாரும், “உடம்பொடு உயிரிடை நட்பு அறியாதார், மடம்புகு நாய்போல் மயங்குகின்றாரே” என்று திருமூலனாரும் சிறப்பித்துக் கூறியுள்ளனர்.

Add a Comment