அருள் இயக்கம்
(ஔவை – சு.துரைசாமி, மதுரை)
சித்தாந்தம் இதழ் – 1945
பகுதி – 11
இவ்வாறு நிலவும் திருவருள் இயக்கத்தால்தான் உயிர் உடம்பொடு கூடி மன முதலிய கருவிகளையும் உடலையும் கொண்டு உடலில் வாழ்வு நடத்துகிறது.
வாழ்வாவது மன முதலிய கருவி வாயிலாக அறிவன அறிந்தும் செய்வன செய்தும் நுகர்வன நுகர்வதாம். இந்நுகர்ச்சி முதலியவற்றால் உயிரைப் பற்றியிருக்கும் அறியாமை நீங்க அறிவு விளக்கமும், தூய்மையும் பெறுகிறது. அறிவு விளக்கம் பெற்ற உயிர், உலகின் இயல்பும் உடம்பு மனங்களின் இயக்கமும் யாவும் திருவருட் பரிப்பு என்பதைத் தெளிந்து அத்திருவருளில் தன்னை அழுத்தி யான் எனது என்ற பற்றின்றி நிற்கும்.
அதனால் உயிரின் நினைவு செயல் யாவும் திருவருளின் செயலாகி விடும்; அப்போது திருவருட் செல்வனான சிவன் அதனைத் தானாக்கித் தன் திருவடிக் கீழ் நிறுத்துவன். இதனைத் திருஞான சம்பந்தர்,
“……………………… முக்குணங்கள் வாய்
மூடா வூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்
சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப்பரம் பொருள்
சேர்வார் தாமே தானாகச் செயும் அவன் உறையுமிடம்
கத்திட்டோர் சட்டங்கம் கலந்திலங்கு நற்பொருள்
காலோ ஓவாதார் மேவும் கழுமல வளனகரே”
என்று பாடியருளுகின்றார்.

Add a Comment