திருவெம்பாவை
=============
பாடல் – 3
————–
முத்தன்ன வெள் நகையாய்! முன்வந்தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்!
பத்துடையீர்! ஈசன் படிஅடியீர், பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டால் பொல்லாதோ?
எத்தோ? நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ? நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்!
விளக்கவுரை :
————————
பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன்
சித்தம் அழகியார்
================
பாச உணர்வை பரஞ்சோதிக்கே ஆக்கி இரவும் பகலும் எப்போதும் திருவருளின் திருப்புகழையே பேசி மகிழும் இயல்புடைய இள மகளிர், மார்கழி நீராட்டத்துக்காக ஒருவரை யொருவர் எழுப்பி அழைத்துக்கொண்டு இன்னொரு தோழியின் மனைவாயிற்கு வருகிறார்கள்.
முன்னெல்லாம் அவளே எழுந்து, வைகறை நீராட அழைக்கவரும் தோழியரை ஆர்வத்தோடு எதிர்கொண்டு அழைத்து, எல்லோர்க்கும் தந்தையும் தாயுமாகிய தன் அத்தன், எல்லோர்க்கும் இணையிலாப் பேரின்பத்தை அருளுகின்ற இனிப்பவன் என்றெல்லாம் பேசி வாயூறி நிற்கும் பெண்ணரசி இன்று ஏனோ இன்னும் உறங்குகிறாள் !
‘எதற்கெடுத்தாலும் எயிறு தோன்றும் புன்னகை பொலியத் திகழும் முத்தனைய முறுவல் கொண்டவளே! புன்னகை முத்துகளை இன்று ஏன் உன்னுடைய பூவிதழ்ச் செவ்வாயில் பூட்டிவைத்துக் கொண்டாய்‘ என்ற குறிப்போடு பேசுகிறார்கள். ஆம் ஏசுகிறார்கள். ‘ஆனந்தன் அமுதன் என்று அன்பு ஊற்றெடுக்கத் தித்திக்கப் பேசி நிற்கும் நீ ஏன் இன்னும் உறங்குகிறாய்! எழுந்து வந்து உன் வாயிற்கடை திறவாய்? அமுதூறும் வாய்திறவாய்‘ என்று ஆனந்திப்பதிலே ஒரு குறிப்பு. எம்பெருமான் இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் என்பதுபோல தந்தையாய்த் தலைவனாய் மைந்தனாய் உறவும் பரிவும் உரிமையும் உடையவன் என்பது தோன்ற அத்தன் ஆனந்தன் அமுதன் என்றனர். உலகியலிலும் ஒரு பெண் மகளாயிருக்கும்போது தந்தையும், மனையாட்டியாகும்போது கணவனும் பேரிளம் பெண்ணாய்த் திகழும் பற்றற்ற நிலையில் பரம்பொருளும் புரப்பவர்களாக அமைவதால் அத்தன் ஆனந்தன் அமுதன் என்றார் என்றும் கூறுலாம். என்னப்பன் எம்பிரான் எல்லார்க்கும் தான் ஈசன் எனக்கூறுவது காணலாம்.
உண்மையில் அவள் உறக்கத்தில் இல்லை. ஆர்வக் குறைவால் சோர்ந்து புரண்டிருந்தாள் போலும்! உடனே எழுந்து வந்த அந்த இளைமயிலோ எதிர்வந்த தோழியர் தன்னுடைய குறைவினைச் சுட்டிக்காட்டியது கண்டு மனம் பொறுக்காதவளாய், அவர்களை நோக்கித் தானும் தன்னைப் பத்தியில் குறையுடையவள். புதிதாக இப்போது சேர்ந்தவள் பரிவுணர்ச்சிப் பண்பில்லாதவள் என்று பேசுவதாகக் கொண்டு சிறிது இகழ்ச்சிக் குறிப்பு உடையவளாய்ப் பரம்பொருளின்பால் பற்றுடையவர்களே! பத்துக் குணமுடையவர்களே என அழைக்கிறாள். திருநீறணிதல், அருளாசிரியனை வழிபடுதல், பொருள் சேர் புகழ் பாடுதல், திருநாம எழுந்தைந்தும் எண்ணுதல், வழிபடுதல், இறைபணி நிற்றல், திருவிளையாடல்களைக் கேட்டல், திருக்கோயில்களைப் போற்றல் அடியவரோடு உறவு காட்டித் தொண்டர்க்குத் தொண்டராதல் ஆகிய அருட்குணங்கள் பத்துமுடையவர்களே பத்து கொலாம் அடியார் செய்வதுதானே என்ற அப்பர் அருண்மொழி நினைக்கத்தக்கது. இறைவனுக்கு வழிவழியாகத் தொண்டு செய்யும் வாய்ப்பமைந்த வரம் பூண்டவர்களே! என்னையும் நன்னெறிப்படுத்துங் கடப்பாடுடைய நட்புரிமை சான்றவர்களே! நான் வேண்டுமென்றால் புதிய அடியவர் என்றே வைத்துக்கொள்ளுங்கள். எங்களுடைய குறை தவிர்த்து எங்களையும் ஆட்கொள்ளக் கூடாதா? என்று வினவுகிறாள். இன்று உலகியலில் ‘தொண்டன்‘ என்று நிம் பாராட்டிக் குறிக்கும் சொல் ‘பழவடியார்‘ என்ற பழுத்த பொருள் கொண்டதாகும்.
மழவிடையார்க்கு வழிவழி ஆளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழவடியார் என்றும் கூறுவர். உரிமை வேட்கை மிக்குயர்ந்த உலகியலில் அடிமைத்திறம் கடியப் படுவதே ஆயினும் அன்பு கொண்டு செய்யும் தொண்டின் திறம் என்றும் உயர்ந்தே ஒளிரும்.
முன்னே எழுந்த செல்வி இன்னும் துயிலெழாத மகளைத் துயிலுணர்த்தும் கடமை கொண்டவளாவது போலவே பழைய அடியவர்கள் புதிய அடியவர்களைக் கோதாட்டிச் சீராட்டி இறை பணிக்கண் ஆற்றுப்படுத்தும் கடப்பாடுடையவர்களாவர். இவ்வியல்பெல்லாம் தோன்ற ‘பத்துடையீர், பழ அடியீர். பாங்குடையீர், புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ‘ என்று புகல்கின்றனர்.
எழுப்பியவர்களும் விட்டுக்கொடுக்கவில்லை. அவர்களும் வீம்பு பேசுகிறார்கள். நேற்றோ நீ எங்களுக்கு முன் எழுந்து வந்து எங்களை எழுப்பும்போது பழைய அடியவளாக இருந்தாய். இன்றோ நாங்கள் உன்னை வந்து எழுப்ப நேர்ந்ததால் நீ புதிய தொண்ராகிவிட்டாயோ? பழ அடிமை, புத்தடிமை யென்பது முன்பின் துயிலுணர்வதனால் வந்துவிடுவதா? எத்தோ நின் அன்புடைமை! அன்புடைமைக்கு நீ கொண்ட இலக்கணந்தான் என்ன? இதுவுமொரு ஏமாற்றுத்தானோ? உன்னுடைய அன்பின் திறத்தினை நாங்கள் அறிய மாட்டோமோ!‘ என்று ஒன்றாகி விடுகிறார்கள். இப்படி என் வீணுரை பேசிக் காலம் போக்கவேண்டும். சித்தம் அழகியவர்கள் நம் சிவனைப் பாட மாட்டாரோ? என்று அமைதி கூர்கிறார்கள். உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு, நீயே அறிவுரை கூறத் தொடங்கிவிட்டாயே, எங்களுக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும் என்பார் போல இத்தனையும் வேண்டும் எனக்கு என்கிறார்கள். இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று இளமகளிர் பேசும் இயல்பான பாங்கை மணிவாசகர் மறவாது உணர்த்துகின்றார்.
புற உடலழகு மட்டுமே அழகெனக் கருதி மயங்குவாருக்குச் சித்தம் அழகியார் என மனவழகின் மாட்சியைக் காட்டி, நெறியூட்டும் திருப்பாட்டாக இது ஒலிக்கிறது. சித்தத்திற்கு அழகு யாது! நெஞ்சம் உமக்கே இடமாக வைப்பது!.

Add a Comment