திருவெம்பாவை
=============
பாடல் – 5
————–
மால்அறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போல் அறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பால்ஊறு தேன்வாய்ப் படிநீ! கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே! சிவனே என்று
ஓலமிடினும் உணராய் உணராய் காண்!
ஏலக்குழவி பரிசேலோர் எம்பாவாய்!.
விளக்கவுரை :
————————
பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன்
மாலறியா நான்முகனும் காணா மலை
விண்ணுக்கொரு மருந்தை, வேத விழுப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கரைந்துருகும் மகளிர் இன்னொருத்தியை எழுப்புகிறார்கள். பாலொடு தேன் கலந்தாற்போல் பேசும் பண்புடைய இத் தோழி கனிந்த விழியும் பணிந்த மொழியும் கொண்டவள். இதற்கு முன்னரெல்லாம் பரம்பொருளை முழுதுணர்ந்த நன்மகனைப் போல பேசுவாள். பரம்பொருளோ மாலறியா நான்முகனும் காணாமலை. இவளோ முழுதுணர்ந்தாற்போல் எதையும் பேசி வந்தவள், அப்படி அன்பொழுகப் பேசுபவள் இன்று வாய்மூடி இன்னமும் உறங்கிக்கொண்டிருக்கிறாள். ஆகவே அவளைப் பாலூறு தேனவாய்ப் படிறீ என்று விளித்து “மனையின் மணிக் கதவம் திறக்க மனம் வைக்கலாகாதா“ என வேண்டுகிறார்கள். ‘வாள் கொண்ட கண்ணார் யாரே வண்ணமும் இயல்பும் முடிவுறக் கண்டார்!‘ பேரறியாத பரஞ்சுடர் ஒன்றதன் வேரறியாமை விளம்புகின்றேனே‘ என்றார் திருமூலர். ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான். ஞாலமாய் விசும்பாய் இவை வந்துபோம் காலமாய், அந்தக் காலமும் கணக்கும் கடந்த மூல முதற் பொருளாய்த் திகழ்வது முழுமுதல். ஆயினும் அடியவர் பொருட்டாய் அருட்கோலங்கொண்டு அவ் வாழ்முதல் வருகின்றது. அடியவர்களை ஆட்கொள்கின்றது. அடியவர்களுடைய குற்றங் களைந்து அவர்களைக் குணமென்னும் குன்றேறி நிலைக்கச் செய்கிறது. இவ்வாறு நம்மை ஆட்கொள்ளும் கோலமும் ஆட்கொண்டு கோதாட்டும் சீலமும் பாடிச் ‘சிவனே சிவனே‘ என்று ஓலமிட்டாலும் உணரவில்லையே! இங்ஙனம் உணராது கிடப்பதா உன் இயல்பு என்று தோழியர் தெருட்டுகின்றனர். “மாலறியா நான்முகனும் காணா மலை‘ என்று தொடங்குகின்றார் மணிவாசகர். இத் திருவெம்பாவை திருவண்ணாமலையில் அருளிச் செய்யப்பட்டதென்பர். அதன் சான்றாக திருவண்ணாமலைத் திருத்தலக் குறிப்பினை இங்கே காண்கிறோம்.
திருமாலும் நான்முகனும் தாமே பெரியவரென்று ஒருவரோடொருவர் செருக்கோடு போராடினர். இடையிலே அந்தப் பேரொளிப் பிழம்பு தோன்றியது. இருவரும் முதலும் முடிவும் காண முயன்றனர். பணம் பாதாளம்வரை என்பார்கள். ஆனால் அறிவு உயர உயரப் பறக்கும் என்பதற்கேற்றபடி அகழ்ந்தும் பறந்தும் காணாது தோற்றனர். உலகினைப் படைத்தளித்து அழிக்கும் மூவருள் இருவராலேயே அவனைக் காண வியலாது போயிற்று என்பது சமய நுண்பொருள். வெறும் ஆராய்ச்சி அறிவினாலும் பொருளினாலும் இதனை அறிய முடியாது. அன்பினால் மட்டுமே அவனை அடைய முடியும் என்பதற்கு இது ஒரு சான்று. எவராலும் எளிதில் காணத்தக்கது மலை. மலையாய் நிலைத்த போதும் இவர்களால் காண முடியாது போயிற்று. மலையாக வெளிப்பட்டும் அறிந்திலர் என்பது கதிர்மணி விளக்கம். “மாலறியா நான்முகனும் காணா மலை‘ என்றார் என்ற நயம்பட. இங்ஙனம் அறிவதற்கரிய பரம்பொருளை அவனருளாலேயே ஒரு சிறிது அறிந்து நுகர்ந்து கொண்டு அறிந்தோம் என்று கூறலாமா? இவளோ அறிந்துவிட்டேன் என்று கூறுகிறாளே! எவ்வளவு பெரிய பொய் என்கின்றனர். உணர்ந்தார்க்கும் உணர்வரியோன் தில்லைச் சிற்றம்பலத்து ஒருத்தன் என்று மணிவாசகம் மீளவும் கூறும். அறிவோமென்று பொக்கங்களே பேசும் பாலூறு தேன்வாய்ப்படிறீ என்கின்றனர். அருளால் எவையும் பாரென்றான் அதைவிட்டு என்னறிவாலே கண்டனன் தோழி-கண்ட என்னையும் கண்டிலன் என்னேடி தோழி என்பார் இராமலிங்கர். தன்னை முன்னிலையாக்கிக் காண ஒவ்வாது.
அன்புகலந்த வஞ்சனையில்லாத சொற்களே இன்சொற்களாகும் என்பதற்கு மாறாகப் பாலூறு தேன்வாய்ப்படிறீ என்ற தொடர் பாலுந்தேனும் போலத் தித்திக்க மட்டுமே புறமாக வஞ்சம் கலந்த சொற்களை அகமாகவும் அமைந்த சொல்லினாள் என்பதைக் காட்டுகிறது. ஞாலமே விண்ணே பிறவே என்பதனால் மக்கள் தேவர் நாகர் என்ற பிறப்பு வகைகளையும் கருதலாம். இவர்களால் அறியப்படாத பரம்பொருள் உயிர்கட்கு அருள் புரியவேண்டி உருவங்கொள்ளும் என்பதனை “உருமேனி தரித்துக்கொண்ட“ தென்றலும், உருவிறந்த அருமேனி அதுவும் கண்டோம் அருவுருவானபோது திருமேனி உபயம் பெற்றோம். செப்பிய மூன்றும் நந்தங் கருமேனி கழிக்கவந்த கருணையின் வடிவுதானே என்று சிவஞான சித்தியார் தெரிவிக்கின்றது.
இங்ஙனம் நமக்கு அருளவந்த அருட்கோலத்தையும் குறை தவிர்த்து நிறைவாக்கும் அவனது பேரருட் சீலத்தையும் பாடிப் பரவி நிற்றல் வேண்டுமென்பதனால் கண்ணுக்கினிய திருமேனி யழகில் –உருவ வழிபாட்டில் ஈடுபட்டுப் பின்னர் கருத்துக்கினிய அவனது அருட்பெருங்குணக்கடலில் நினைத்தலும் வேண்டுமென்பதும் கருத்து.
அறிவால் அளவிட முடியாது என்பதைக் கண்ட பிறகு கோலமும் சீலமும் பாடி ஓலமிடுவதே உபாயமென உணராமல் தற்போதத்தில் உறங்கிக்கொண்டு தவிப்பது உலகியல்பு என்பதும் கருத்து. ஏலக்குழலி என்ற விளியால் உன் கருங்குழல் மணப்பது போல உன் ‘மனம்‘ மலராது கரிந்து உருகாது கவித்து கிடப்பது தகவோ என்ற நுண்பொருளின் ஏலக்குழலி பரிசு இதுவோ என்கின்றனர். சிவனே சிவனே என்று அடுக்கிக்கூறி அபயம் வேண்டிக் கூவி அவற்றினும் விழித்தாயிலை என்று இரங்கிக் கூறியது மாணிக்கவாசகர் மன நெகிழ்வைச் சுட்டிக் காட்டும்.
மயக்க வுணர்வால் அறியப்படாதவன் என்பதும் மனத்தை ஒருமுகப் படுத்தாமல் பலமுகமாகச் செல்லவிடுபவரால் காணப்படாதவன் என்பதும் குறிப்பு.
மாலறியா நான்முகனும் காணகறியா என்பது காணா அனுமானக் காட்சி.
அளக்கலாகா அளவும் பொருளும், துளக்கலாகா கையும் தோற்றமும் வனப்பினும் வஸந்தமும் வண்மையும் கலந்தே என் மலையினது காட்சி.

Add a Comment