POST: 2016-12-21T12:18:14+05:30

திருவெம்பாவை
=============
பாடல் – 6
—————

மானே! நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போனதிசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ?
வானே நிலனே பிறவே அறிவரியாள்
தானே வந்தெம்மைத் தலை அளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குள் வாய்திறவாய்!
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்!.

விளக்கவுரை :
————————
பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன்

வான்வார் கழல்
————————–

இறைவனது கோலமும் சீலமும் பாடியபடி வரும் பாவை மகளிர், மற்றொரு தோழியின் மனைக்கு வருகிறார்கள். நாளை நானே வந்து உங்களை எழுப்பி அழைத்துப் போகிறேன் என்று கூறியிருந்தாள். இன்றோ அவள் உறக்கத்திலிருந்து விழிக்கவேயில்லை. துள்ளித் துள்ளி மான் போல வந்து நாளை உங்களை நானே எழுப்புவேன் என்ற கூறியதை மறந்து இப்போது எங்கே போய்விட்டாய்? மனமருள் போல மறதி கொண்ட மான் போன்றவளே! ஏன் இன்னமும் உறங்குகின்றாய்? எனக்கு இன்னும் பொழுது புலரவில்லையா? இரவு முடியவில்லையா! விண்ணகத் தேவரும் வையத்து மாந்தரும் பிறரும் எளிதில் காண முடியாத பரம்பொருள் தானே நம்முன் எளியனாய் வந்து தலைசிறந்த கருணையை நமக்குத் தந்தருளி ஆட்கொள்கின்ற தன்மையினை எண்ணி எண்ணி – நம் பொருட்டாக எளிவந்து நடந்துவந்த பெருமையும் அழகும் வாய்ந்த திருவடிகளை மனமுருகிப் பாடி வந்தோம். நீயோ வாய்திறவாது இருக்கின்றாயே? உன் உள்ளமும் உடலும் உருகவில்லையே ! இத்தகைய உருகாத இறுகிய வன்மை உனக்குத் தகுமோ? எனக்கு மட்டுமல்ல! எல்லோர்க்கும் தலைவனாகிய பரம்பொருளைப் பாடிப் பரவ எழுந்து வா என்று பரிவோடு அழைக்கின்றனர். சித்திரையின் விடியலில் மக்களுக்கு நித்திரை கலைவதில் புதுமையில்லை. மார்கழியோ பனித்திங்கள்! மேலும் விடியலில் உறக்கம் கண்களை மயக்கும். மெல்லிய பஞ்சனையோ எழ முடியாது மேனியைத் தடுக்கும். குளிரோ நடுக்கும்! இவைகளை மீறி உதறி எழவேண்டும்.

செயற்கரியவற்றைச் செய்வதுதானே சாதனை! அதனால் தான் பனித் திங்களில் இந்தப் பாவை நோன்பு நோற்கப்படுகிறது. பாவை நோன்பில் கலந்து கொள்ளும் பாவையர் 5 வயது முதல் 12 வயதளவு உள்ளவர்கள்தாம். முன்னே பெரியவர்கள் துயிலுணர்வதும் இளையவர்கள் பின்னர் எழுவதும் இயல்பு. இதுவரை ஒருவரை ஒருவராக ஐந்து பேரை எழுப்பியிருக்கிறார்கள் என்று கொள்ளலாம். இந்தச் சிறிய செல்வியோ இன்னும் உறங்குகிறாள். துள்ளும் இளமை பொலியும் மானே என்று அழைத்தனர். அடுத்த பாடலில் அன்னே என்று அழைப்பதற்கும் இந்த வயது வரம்பு பொருந்தும். முத்தன்ன வெண்ணகையாய், ஒண்ணித்தில நகையாய் என்பது போன்ற விளித்தொடர்கள் இங்கேயில்லை. பரிவு ததும்ப மானே என்று குழைந்து அழைக்கின்றனர். சின்னஞ்சிறு செல்வி யல்லவா! நாளைக்கு நானே வந்து உங்களை எழுப்பிகிறேன் என்று ஆர்வத்தோடு கூறினாள். ஆனாலும் அவள் உறங்குகிறாள். நீ சொன்ன சொற்கள் எல்லாம் எங்கே வழி தவறிப் போய்விட்டன என்று வினவுகிறார்கள். நீ சொன்ன சொற்கள் எல்லாம் எந்தத் திசையிலாவது தொடர்ந்து போகட்டும். நாங்கள் வந்து எழுப்பிய பின்னும் நீ உறங்குவதா என்று கேட்கிறார்கள். எதற்காக எழுப்புகிறார்கள்? அருளார்ந்த பரம்பொருளின் பொருளார்ந்த புகழ் பாடுதற்கு அல்லவா எழுப்புகிறார்கள். எப்படிப்பட்ட பரம்பொருள்? விண்ணவராயினும் மண்ணவராயினும் மற்றவராயினும் தம்முடைய அறிவு ஆற்றல்களின் துணையதாக அளந்தறிய முடியாத பிழம்பாயிற்றே! ஆயினும் அப் பரம்பொருள் அடியவர் பொருட்டுத் தானே வந்து தலையளி செய்கிறாள். மிகப்பெரிய கருணை காட்டுகிறாள்! “இங்கே நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி“ என்று எளிமைக்கு எளிமையாய் வந்து திகழ்கிறாள்.

இப்படியன் இந் நிறத்தன் இவ் வண்ணத்தன் ‘இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாத இறைவன் மணிவாசகப் பெருமான் பொருட்டு திருப்பெருந்துறையில் தானே வந்து அருள்செய்த தனிப்பெருங் கருணைத் திறத்தினை அடிகள் பலகாலம் நினைந்து உருகுகின்றார். இங்கேயும் அடியவர் பொருட்டாகப் புவனியில் தீண்டிய அந்தச் சேவடிப் பெருமையை நினைப்பது பெருமையுடைய திருவடிகள் என வான்வார் கழல் என்று சிறப்பித்தார்.

அத்தகைய திருவடிப் புகழ்ச்சியினைக் கேட்டு உள்ளம் உருக வேண்டும். பாடுகின்ற வரும் உள்ளம் உருகிப் பாடவேண்டும் கசிந்து கண்ணீர் மல்க ஓத வேண்டும். கேட்பவர்க்கும் உள்ளம் உருகுமாறு உணர்த்த வேண்டும். கல்லான நெஞ்சினையும் கரைந்துருகச் செய்வதுதானே திருவாசகத்துக்குரிய தனிச்சிறப்பு! நெஞ்சம் என்பது ஒரு கைப்பிடியளவு என்று சொல்லுவார்கள். திருவருளின் பெருங் கருணைக்கு இவ்வளவு சின்னஞ்சிறிய உள்ளம் உருகினால் போதுமா? உள்ளத்தால் நின்று உச்சியளவும் நெஞ்சாய் உருகவேண்டும். உடம்பெல்லாம் கண்ணாகி ஆனந்தக்கண்ணீர் பெருகவேண்டும் என்பது மணிவாசகர் மன உருக்கமாகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *