திருவெம்பாவை
=============
பாடல் – 8
—————
கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணைக் ‘
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ? வாய்திறவாய்!
ஆழியான் அன்புடமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்!
விளக்கவுரை :
————————
பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன்
ஆழியான் அன்புடைமை
—————————————
விடிவதற்கு முன்னரே துயிலெழுந்த மகளிர் ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டு வருவதற்குள் பொழுதே புலர்ந்துவிடுகிறது. கோழிகள் கூவுகின்றன. பறவை இனங்கள் பண்ணொலி செய்கின்றன. திருக்கோவில்களில் ஏழிசைக்கும் இடமாகிய எழில் என்னும் மங்கலப் பெருவங்கியங்கள் ஒலிக்கின்றன. சங்கங்கள் முழங்குகின்றன. இவற்றோடு நீராட வந்த தையலர் தனக்குவமை இல்லாத பரஞ்சுடரின் ஈடு இணை இல்லாத தனிப்பெருங் கருணையினைப் பாடுகின்றார்கள். இன்னும் ஒரு தோழி சிறுமி உறங்கிக் கொண்டிருக்கிறாள். இவ்வளவு ஓசைகளையும் கேட்ட பிறகுமா உறங்குகின்றாய்? என்ன உறக்கம் இது? இறைவனிடத்துக் கொண்ட அன்புடைமை இதுதானா? உலகுக்கே முதல்வனாக இருக்கும் ஒருவனை – ஒப்பற்றவனை பெண்ணொரு பாகப் பெருமகனைப் பாடுவதற்கு எழுந்திரு என்று எழுப்பு கிறார்கள்.
பொறுப்புள்ள பெண்ணான நீ தூங்கின் எத்தனை பொன்னுரைகள் தடைப்படுமே! மிகை சிறிதும் இன்றி வைகறையாமத்து இயல்புகள் இயல்பு நவிற்சியாய் இசைக்கப்படுகின்றன. பொழுது புலர்வதைப் புலப்படுத்தும் அடையாளமாகக் கோழி கூவுதலைக் கொள்ளுவர். பொழுது விடிந்தது பொற்கோழி கூவிற்று என்பார் வள்ளலார். காலம் அறிவிக்கும் காலக் கணக்கராய்க் கோழி உடனாற்றுவது வைகறை யாமக் குறியளக்க உளைக்கும் செங்குடுமி வாரணம் என்பார் சேக்கிழார்.
கோழி கூவுதலைத் தொடர்ந்து ஏனைய பறவை இனங்களும் ஆரவாரத்தைச் செய்து கொண்டு அன்றைய கடமையினை ஆற்றப் புறப்படும் நேரம் இந்த இயற்கை ஒலிகளோடு திருக்கோயில்களில் இசைக் கருவிகளின் இன்னிசை முழக்கமாகிய செயற்கை ஒலிகளும் சேர்ந்து விடுகின்றன. விழிப்புணர்வு கொண்ட மகளை துயிலெழுப்புவதற்காகப் பாடிக்கொண்டு வருகின்றார்கள். துயிலெழுப்புவதற்காக இன்னிசை பாடுவது பழைய மரபு. அந்த இசை கேட்டும் எழுந்திருக்கவில்லை என்றால் விசிறி கொண்டு மெல்ல விசிறுவர். அதற்கும் எழுந்திருக்கவில்லை எனில் தட்டி எழுப்ப வேண்டிய தேவையும் நேர்ந்துவிடும். கும்பகருணனை எழுப்புகின்ற கதை நாடறிந்தது தானே! இப்படியும் உணர்விழந்த நிலையில் உறங்குவதா என்று கடிந்துகொள்கிறார்கள்.
மெய்யுணர்வு பெறாதவர்களாய் விலங்கு போலவும், மரம் போலவும் வாழ்பவர்கள் என்றால் உண்பதுவும் உறங்குவதுமாக வாழ்கின்ற அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் தம்மை உணர்ந்து தம் தலைவனையும் உணரும் தகுதி படைத்தவர்கள் வழிபாட்டுக்கே உரிய வைகறைப் பொழுதில் வழிபாட்டினை மறந்து உறங்கலாமா?
இதுவா நாம் அன்பு செலுத்தும் முறைமை என்று கேட்கிறார்கள். கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை என்று கூறுவது அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்ற வள்ளலாரின் அருள் முழக்கத்துக்கு வழிகாட்டியதுபோல் விளங்குகின்றது.
கேழில் பரஞ்சோதி கேழில்பரங் கருணை கேழில் விழுப்பொருள்கள் என்பதனால் ஒப்பில்லாத பரஞ்சோதியும் அதன் பரங்கருணையுமே இங்கு பாடப்பட்டது – ஏன்? எங்கும் பாடுவதற்குரிய – ஒப்பில்லாத பொருள்கள் என்று கருதச் செய்கிறது. பின்னர் இறைவனை ஆழியான் என்றும் அழைக்கின்றார். ஆழியான் என்பதற்குப் பலவாறு பொருள் காண்பர். ஆழியான் என்றவுடன் திருமாலே நினைவில் நிற்பதும் இயல்பே. அன்றியும் ஒரு நாமம் ஓருருவம் இல்லாற்கு ஆயிரம் ஆயிரம் திருநாமம் பாடுகின்றோம். திருமாலை ஆழியான் ஆக்கியதும் சிவபெருமான் அல்லவா?.
நலமுடைய நாரணன்தன் நயனமிடத்து அரனடிக்கீழ்
அலராக இட ஆழி அருளினன் காண்சாழலோ
என்று மணிவாசகரே பாடுகின்றார்.
ஆழியளித்தவனை ஆழியான் என்றும் கொள்ளலாம் அன்றோ? அந்தத் திருநாமங்களில் ஆழியான் என்பதும் ஒன்றாகிவிடுகின்றது. ஆழியானுக்கும் ஆழியினை அளித்த அவன் ஊழிமுதல்வன் அவன் அவள் அது என்று சுட்டிக் கூறப்படும் இந்த உலகத்துப் பொருள்கள் எல்லாம் தோன்றி நின்று மறைகின்றன. ஒருநாள் அனைத்தும் ஒடுங்கிவிடலாம் அப்போதும் இறைவன், அவனே அந்தத்தில் இருக்கிறான். ஆதியும் ஆகின்றான். ஆதலின் அந்தம் ஆதி என்றார் மெய்கண்டார். இங்ஙனம் ஒடுங்கிவிட்ட உலகினை மீண்டும் வருவிப்பவன் அவனே. அதன் பொருட்டாக அவன் அழிவின்றி உள்ளவன் அவனே. திருவருட் சத்தியோடு கூடிய கோலமே பெண்ணொருபாகத் திருக்கோலம். பெண்ணொரு பாகனாகிய பெற்றியினையே ஏழை பங்காளன் என்று குறிப்பிட்டார். ஏழை என்ற சொல் எளியவரைக் குறித்து மெல்லியலாரையே இங்கு குறிக்கும். உலகியலில் வேறு பொருளில் வழங்கும் ஏழை பங்காளன் என்ற சொல் சமய உலகில் பெண்ணோரு பாகனைக் குறிப்பது.
கோழியும் குருகுகளுமாகிய அஃறினைப் பொருள்களும் விழிப்புணர்வு கொள்ளும் பொழுதில், உயர்திணையைச் சேர்ந்த நாம் உள்ளுணர்வு கொண்டு அருட்பெருஞ்சோதியின் தனிப்பெருங் கருணையினைப் பாடிப் பரவுதல் வேண்டுமென்பது இப் பாடலின் கருத்தாகும்.

Add a Comment