POST: 2016-12-24T07:22:39+05:30

திருவெம்பாவை
=============
பாடல் – 9
—————

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே !
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீர் அடியோம்
உன் அடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேன்
என்ன குறையும் இலோம் ஏலோர் என்பாவாய்!.

விளக்கவுரை :
————————
பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன்

முன்னைப் பழம்பொருள்
—————————————

தையில் நீராடித் தவம்புரிய வந்த மாதர் நோன்பின் சிறப்பு நோக்கத்திற்கென ஒருவரை ஒருவர் புலரியில் எழுப்பி, ஒருங்கு கூட்டி இறைவனை முன்னிலைப்படுத்திச் சிவனைப் பாடிப் பரவி விண்ணப்பித்துக் கொள்கின்றனர்.
பழைமையான பொருள்களுக்கும் பழைமையும், புதுமையான பொருள்களுக்கும் புதுமையுமானவனே என்று விளித்து நாங்கள் உன்னையே தலைவனாகக் கொண்ட சிறப்பினை உடைய அடியவர்கள். நாங்கள் உன் அடியவர் திருவடிகளையே வணங்குவோம். அவர்களுக்கே உரிமை உடையவர்கள் ஆவோம். அடியவராகிய தன்மை உடையவரே எங்கள் தலைவராவார். அவர்கள் விரும்பிக் கூறிய வண்ணமே அவர்கட்கு அடிமையாய் நின்று பணிசெய்வோம். எம்முடைய தலைவனே நீ எங்களுக்கு இவ் வண்ணமே அருள் செய்வாயானால் நாங்கள் எவ்விதக் குறையும் இல்லாதவர்கள் ஆவோம் என்று வேண்டி நிற்கின்றார்கள்.
இப் பாடலில் மணிவாசகர் இறைவனை முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருள் எனவும் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியன் என்றும் கூறுகிறார். அடிகள் அருளிய மாணிக்கத் தமிழின் மணியான தொடர்கள் இவை.
நேற்று இன்று நாளை என்று ஓடிக் கொண்டிருக்கின்றது காலம். நேற்று நிகழ்ச்சிகள் பழமையாகி விடுகின்றன. நாளைய வருகைகள் புதுமைப் பொலிவோடு திகழ்கின்றன. பழைமைகள் தாமே நம்மைவிட்டு நீங்கி விடுகின்றன. புதுமைகள் நம்மையும் அறியாமல் நம்மிடம் வந்து சேர்கின்றன. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்பது இலக்கணம் ஆகிவிடுகிறது.

ஆயினும் பழைமை என்று நாம் எதுவரை சுட்டிக்காட்ட முடியுமோ அதற்கு முற்பட்ட தொல்பழைமை உடையவன் இறைவன். படைப்போன் படைக்கும் பழையோன் என்கிறார் பெருமான். பழைமை புதுமை என்பன எல்லாம் காலத்தை வைத்தே கணிக்கப்படுவன. இறைவனோ காலகாலன், அவன் காலத்தைக் கடந்தவன். காலக்கணக்கையும் கடந்து அவன் முதன்மை அடைகிறானே தவிர முதுமை அடைவதில்லை. இது பற்றியே பின்னரும் மூத்தானே மூவாத முதலானே என்கிறார் மூவாமுதல்வா என்று திருத்தக்க தேவரும் கூறுவார். முதுமை அடையாத அவன் புதுமை குறையாமலும் பொலிகின்றான். உலகத்தில் எத்தனை எத்தனையோ புதுப்பொருள்கள் தோன்றுகின்றன. ஆயினும் அவற்றுக்குரிய மூலப்பொருள்கள் முன்னுள்ளவைகள் தாமே ! பழைய பொருள்கள்தாம் புதுமைக்கோலம் பூணுகின்றன. இதனை விளக்கவே பின்னைப் புதுமைக்கும் பின்னும் புதுமையனே என்று பாடாது பேர்த்தும் அப் பெற்றியனே என்றார்.

இங்ஙனம் முழமுதற்பொருள் பழம்பொருள் என்பதனையும் பரம்பொருள் என்பதனையும் எளிமையாக இனிமையாக எடுத்துக் கூறித் தம்முடைய வார்த்தைகள் மாசில்லாத மணி வார்த்தைகள் என்பதனையும் புலப்படச் செய்கின்றார். இத்தகைய பரம்பொருளைத் தலைவனாகக் கொண்டவர்கள் அடியவர்களோடு தானே உறவாடுவார்கள்.

வணங்கத் தலைவைத்து, வார்கழல் வாழ்த்தவாய் வைத்து இணங்கத்தன் சீரடியார் கூட்டமும் வைத்துள்ளான் அன்றோ? எனவே இறைவனே நாங்கள் உன் அடியவர்களையே வணங்குவோம். அவர்களுக்கே பாங்காவோம். அவர்களே எங்கள் கணவராகட்டும் என்று வேண்டுகின்றனர். இந்த அன்பு மேலீட்டினை ‘நள்ளேன் உனது அடியாரோடு அல்லால்‘ எனவும் சிவம் வேண்டார்தமை நாளும் தீண்டேன், எனவும் அடிகள் எடுத்துரைக்கக் காணலாம்.

ஒத்த உணர்வுடையவரே ஒருங்கிணைந்து வாழ்தல் இயலும், உணர்வால் வேறுபட்டவர்களோடு வாழ்வது பாம்போடு பழகுவது போன்றது என்பார் திருவள்ளுவனார்.
அடிகள் வரலாற்றிலும் அவரோடு ஒத்த மெய்யுணர்வு நலம் பெறாதவரிடையே அவர் பணி புரிந்து பெற்ற இடர்ப்பாடுகளையும் இங்கே எண்ணிப்பார்க்கலாம். எனவேதான் தன்னுடைய அன்பு மேலீட்டினைப் பத்தி வைராக்கியத்தை ‘உன் அடியவரே என் கணவராகட்டும்‘ என்ற பெண்களின் வேண்டுகோள் வாயிலாகப் புலப்படச் செய்கிறார்.

நல்லாரிணக்கம் கொண்டு அவர்தம் குறிப்பறிந்து தொண்டு செய்கின்ற வாழ்வே குறைவிலா நிறைவினை உடைய பெரிய வாழ்வென்பது இப் பாடலால் எடுத்துரைக்கப்படுகின்றது.
செல்வத்துட் சிறந்தது அரசுச் செல்வம்
அதனினும் பெரியது வானோர் செல்வம்
அதனினும் பெரியது இந்திரன் முதலிய இறைபதம்
அதனினும் சிறந்தது ஆன்மஞானம்
அதனினும் சிறந்தது அரன்பால் அறிவு-
அதனினும் சிறந்தது அடியார்க்கு அடிமை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *