திருவெம்பாவை
=============
பாடல் – 10
—————
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் முனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே !
பேதை ஒருபால்திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தரன் தன்கோயில் பிணாப் பிள்ளைகாள்!
ஏதவன் ஊர்? ஏதவன் பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்?
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்!.
விளக்கவுரை :
————————
பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன்
ஓத உலவா ஒரு தோழன்
——————————————–
இறைவனுடைய திருக்கோயிலுக்குச் சென்ற மகளிர் திருக்கோயிலில் வழிவழியாகப் பணி செய்து வரும் திருக்கோவில் பாவலர்களை நோக்கு நாங்கள் இறைவனைப் பாடிப் பரவ வந்துள்ளோம். அவனுக்கு ஊர் எது பேர் எது அவனுக்கு உற்றார் யார்? அயலார் யார்? அவனை நாங்கள் எப்படிப் பாடுவது என்று கேட்கிறார்கள். ஏதவன் ஊர்? ஏதவன் பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்? என்ற வினாக்களுக்குரிய விடை போலவே முன்னுள்ள விளக்கங்கள் அமைகின்றன.
பாதாளம் ஏழினும்சீர் சொற்கழிவு பாதமலர் போதார் புளைமுடியும் எல்லாப்பொருள் முடிவே என ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெருஞ்சோதியின் அளப்பரிய தன்மையினைப் பேசுகின்றனர்.
மாநிலம் சேவடியாக, வளை நால் பௌவம் உடுக்கையாக, விசும்ப மெய்யாகத் திசை கையாக இறைவனது பேருருவினைச் சங்கத்தமிழும் சால்புடன் உரைத்தது.
மணிவாசகர் இறைவனுடைய பாதமலர் பாதாளம் ஏழினும் கீழ் செல்லும் என்றார். இறைவனுடைய திருவடிகளைக் காண்பேன் என்று முனைப்புடன் முயன்ற மாலவன் ஏழ்தலம் உருவ இடத்து எய்த்தான் என்பார்.
இறைவனது திருவடிகள்
இந்த ஏழ்தலங் கடந்து நிற்பன ஆதலின் அடிபேரில் பாதாளம் பேரும் என்றார் காரைக்கால் அம்மையார். திருவடிகளைத் தேடிச் சென்றுதான் காணமுடியாது. சொல்லிலாவது காட்டமுடியுமா என்றால் அது சொல்லிலும் அடங்காது என்பார் சொற்கழிவு பாதமலர் என்பார்.
இனி அவன் தன் திருமுடியோ எல்லாப் பொருள்களுக்கும் முடிவில் திகழும் என்பார். போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே என்றார். காரைக்கால் அம்மையாரும் மாமுடி பேரில் மாமுகடு பேரும் என்பது எண்ணத்தக்கது. இங்ஙனம் அளப்பரிய வடிவினனாகிய இறைவனுடைய ஊர் என்று இவ்வுலகில் எத்தனையேனும் சொல்ல முடியுமா? எது அவன் ஊர் அடுத்து அவனுக்கு எப்படிப் பேர் வைப்பது? உருவும் திருவும் பிறவும் பற்றித்தானே பெயர் சூட்டுவது மரபு? இறைவனோ ஆண் அல்லன், பெண் அல்லன், அலியும் இல்லை. திருமேனி ஒன்றல்லனிட எனவே அவனுக்கு ஏது பேர்?இறைவனை வேதங்களும், விண்ணோரும் மண்ணகத்து மாந்தர்களும் சொல்லித் துதிக்கின்றனர். ஆனால் அவனது பெரும் புகழோ அந்தச் சொல்லளவில் அடங்குவதன்று. விதிப்பவரும் துதிப்பவரும் எல்லாம் இறைவனை மதித்திட முயன்று தோற்றனர் என்பார் வள்ளலார்.
இங்ஙனம் சொல்லுக்கு அடங்காத பெரும் புகழ் உடையவன் இறைவன். அவன் சொல்லும் பொருளும் கடந்த சுடர். அவனைச் சொல்லித் துதிக்க முயன்ற வேதங்கள் ஆற்றாது. ‘ஐயா‘ என ஏங்க அவன் ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனாகவும் விளங்குகின்றான். ஆகவே அவனுக்குத் தேவர்களும் அயலவர் தாம். வையகத்தாரும் அப்படியே. ஆனால் தொண்டர் தம் உள்ளத்தில் அவன் குடியிருக்கின்றான். இறைவனுக்கு உள்ளம் பெருங்கோயில் என்பார் திருமூலர். யாருடைய உள்ளம்? தொண்டருடைய உள்ளம். எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் கருதும் ஒத்துரிமை உடைய உள்ளம். ஆகவே இந்தத் தொண்டர்கள் அவனுக்கு உற்றார்கள் என்று தெரிகிறது. உறவாவார் உருத்திர பல்கணத்தார் என்பார் அப்பரடிகள். எனவே அவனுக்கு உற்றவர்களாக இருக்கின்ற கோயிற் பணிப்பெண்களே நீசங்கள் அவனைப் பாடும் பரிசறிந்து கூறுங்கள் என்ற கேட்கின்றார். பிணா என்பது பெண்மை சுட்டிய பெயர். அவர்கள் தொண்டக் குலத்தினர். ஆதலின் அவர்களைக் கோதில் குலத்துப் பிள்ளைகள் என்றார் இறைவன். ஊரும் பேரும் உறவும் பகையும் ஒன்றும் இல்லாதவன் என்பதனை ஊருமிலார் பேருமிலார் உற்றார் பெற்றாருமிலார் யாருமிலார் என்னை அறிவாரோ பைங்கிளியே என்று தாயுமானவரும் கூறினார்.
இறைவன் ஊரிலான் பேரிலான் என்றாலும் அவனைச் சொல்லிப் பரவ ஒரு நாமம் வேண்டுமன்றோ? எனவே ஓத வுலவா ஒரு தோழம் தொண்டனேன் சாதல் ஒழித்தென்னைத் தானாக்கிப் பூதலத்தில் ஐந்தொழில் செய்கென்றே அருட்சோதிக் கோர் வெந்தொழில் போய் நீங்க விசைந்து அளித்தேன் எனத் திருவாசக வரி முழுவதுமான வள்ளலார் தழுவி எடுத்துப் பொற்றினார். உத்தரகோச மங்கை ஊர் எனவும் தேவதேவன் என்பது இறைவன் திருப்பெயர் எனவும் அடிகள் அருளிச் செய்கின்றார்.
இனி அவனைப் பாடும் பரிசு எது என்பார்க்கு விடை போலத் திருமூலர் சொல்வதொன்றினையும் இங்கே எண்ணிக் கொள்ளுதலும் தகும். அப்பனை நந்தியை ஆராஅமுதனை, ஒப்பிலி வள்ளலை, ஊழிமுதல்வனை எப்பரிசாயினும் ஏத்துமின் ஏத்துமின். அப் பரிசு ஈசன் அருள்பெறலாமே என்ற இந்த மூல மந்திரத்தில் கூடத் திருவாசகச் சாயல் தெரிகிறது. எனவே இறைவனது பெரும்புகழ் ஓத உலவாத பெரும்புகழ் ஆயினும் அவனை நாம் அறிந்தவரை அத்தன் ஆனந்தன் அமுதன் என்று சொல்லிப் பாடினோம். அவன் பாடுவார் பசிதீர்ப்பான். பரவுவார் பிணி களைவான்.
அவன் ஒரு தோழம் தொண்டர்களைக் கொண்டவன். அந்தக் குற்றமில்லாத தொண்டர் குழாத்தில் ஒருவராகி இறைபணி நில்லுங்கள் என்பது இப் பாடற் கருத்தாகக் கோள்ளத் தக்கது.
அவன் தோழம் என்பது ஒரு பேரெண் எனவும் நெடுங் காலம் எனவும் கூறுவர்.
உண்ணற்கரிய நஞ்சை உண்டு ஒரு தோழம் தேவர் விண்ணிணு பொலிய அமுதளித்த விடைதேர்க்கொடி அண்ணல் என்பார்.

Add a Comment