திருவெம்பாவை
=============
பாடல் – 11
—————
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர் என்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா! வழி அடியோம் வாழ்ந்தோம்காண்! ஆர் அழல்போற்
செய்யா! வெண்ணீ றாடி! செல்வா ! சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா நீ! ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்!.
விளக்கவுரை
============
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
ஆட்கொண்டருளும் விளையாட்டு
===============================
நீராடிய மகளிர் எண்ணீறாடிய பெருமானிடம் திருவருட் சார்பிலிருந்து வழுவாமல் தம்மைக் காக்க வேண்டுமெனக் குறையிரந்து நிற்கின்றனர். நாங்கள் வண்டுகள் மொய்க்கும் பொய்கையில் புகுந்து நீரினைக் கையால் குடைந்து நீராடி வந்து உள் வான்வார்கழல் பாடி உய்ந்தோம். நீ அடியவர்களை ஆட்கொள்கின்ற திருவிளையாடல்களில் எல்லாம் ஒருவாறு உய்ந்தோம். இனியும் யாங்கள் இளைத்துக் களைத்துச் சலித்து விடாதபடி எங்களைக் காத்தருள்வாய்க என்று வேண்டுகின்றனர்.
நீராடுவதற்குரிய பொய்கை மெய்யார்தடம் பொய்கை. அது வாச மலர் நிறைந்த பொய்கையாதலின் மூசு வண்டறைப் பொய்கையாக உள்ளது. அங்கே மகளிர் நீராடப் புகுகின்றனர். கைகளால் நீரைத் தட்டியும் இறைத்தும் விளையாடிக் கொண்டு நீராடுகின்றனர். அதனால் மொய்த்துக் கிடக்கின்ற வண்டுகள் பறந்து செல்கின்றன. நீருள் மூழ்கும் போது உண்டாகும் ஒலிக்குறிப்பே முகேர் என்பது. மார்கழித் திங்களில் திருவாதிரை நாள் இறுதியாகப் பத்து நாள்களிலும் வைகறைப் போதில் சேரமகளிர் நீராடுவதும் பாடுவதுமாக விழாக் கொண்டாடுகின்றனர். நீராடுங்கால் அவர்கள் தண்ணீரைத் தட்டுவதனால் ஒரு வகையான ஒலியை உண்டாக்குகின்றனர். இவ்வொலியை இவர்கள் இடக்கையை மூடித் தண்ணீர் மட்டத்திற்குக் கீழே அமிழ்த்துக் கொண்டு வலது உள்ளங்கையைச் சாய்ப்பாக அடித்து உண்டாக்குகின்றனர். பாடுதல் முடியும்வரை இவ்வொலி தாளவொத்தாக அவர்களால் நிகழ்த்தப் பெறும் என்ப. நீராடிய பின்னர் இறைவனது திருவடிப் புகழினைப் பாடுகின்றார்கள். இங்ஙனம் தையில் நீராடிய தவம் உடையவர்களாகி விட்டதனாலே நாங்கள் உய்ந்தோம். உயர்வாழ்வு பெற்றோம் என்கிறார்கள். ஐயோ நாங்கள் உனக்கு வழி வழியாக வந்த அடியவர்களாவோம் என்று தங்கள் பழைமையினை இறைவனுக்கு நினைவூட்டுகின்றார்கள். மேலும் இறைவனை செய்யா, வெண்ணீறாடி செல்வாஇ மடந்தை மணவாளா என்றெல்லாம் அழைக்கின்றார்கள். இறைவன் செம்மையும் வெண்மையும் ஆகிய நிறங்கள் உடையவனாதலின் அவன் அடியவர்களைச் செம்மை செய்வான். தூய்மை செய்வான் என்றும் கருத்துக் கூறுவர்.
செம்மையும் வெண்மையுமாகிய நிறங்கள் இராசதம் சாத்துவிகம் என்னும் ஆளுமைக் குணத்தையும் அமைதிக் குணத்தையும் உணர்த்துவன ஆதலின் படைத்தல் காத்தல்களைச் செய்பவன் என்பது கருத்தாகும் எனவும் கூறுவர். நீறணிந்தவன் என்பதனால் அவனுக்அகே உரிய அழித்தல் தொழிலும் கொள்ளப்பபடும். செல்வா என்பதனால் அவன் முத்திச் செல்வத்தைத் தருபவன் என்பது பெறப்படும். இம்மையுலகத்துச் செல்வம் நிலையானது அன்று. முத்தி எனும்பதமே முடிவிலாப்பதம். ஆதலின் அதுவே சிறந்த செல்வம் என்பர். செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே என்றார் திருஞான சம்பந்தர்.
மடந்தை மணவாளன் என்பதனால் இறைவன் உயிர்கட்கு இம்மையிய்பம் தருவது கருதப்பட்டது. இறைவன் யோகமும் மோகமும் தருபவன். யோகத்தன் நல்ல போகத்தையே புரிந்தான் என்றார் திருஞான சம்பந்தர். இராமபிரானும் சீதா பிராட்டியும் மணக்கோலங் கொண்ட காட்சியைக் கூற வந்த கம்பர் யோகமும் போகமும் ஒருங்கிருந்தன என்று கூறினார். வீடுபேற்றுச் செல்வமும் இம்மை இன்பமும் தருகின்றவன் என்பதனால் இறைவன் யோகமும் போகமும் உடையவனாய் அடியவர்க்கு இருமையும் அளிக்கும் திறம் பேசப்பட்டது.
இறைவனோடு இசைந்த வாழ்வு என்னும் போது இவ்வுலகினை இகழ்ந்து ஒதுக்க வேண்டும் என்பது கருத்தன்று. இம்மை வாழ்வை மறக்காத மறுமை நோக்கமும் மறுமை வாழ்வை மறக்காத இம்மை வாழ்வுமே நமது சமய வாழ்வு. இதன் பொருட்டே இறைவனை மையார் தடங்கண் மடந்தை மணவாளனாகப் போற்றுகின்றோம். இறைவன் உயிர்களை இவ்வுலக அரங்கிலே நடைபயில விடுகின்றான். உலகினில் வாழ்பவர் பொய்யாய செல்வத்தே புக்கு அழுந்திவிடாது மெய்யுணர்வு கொள்ள வேண்டும். இதுவே அவன் நம்மை ஆட்கொண்டருளும் விளையாட்டு. இந்த விளையாட்டில் உய்தி பெற்ற மெய்யடியார்கள் அடிச்சுவடு பற்றி நாங்களும் உய்ந்தோம் என்று கூறுகின்றார். ஆணவக் காரிருளில் அமிழ்ந்து விடாமல் நாங்கள் எல்லாம் உன்னுடைய அருளாகிய பெருவெள்ளத்தில் திளைக்கின்றவர்களாக இங்ஙனம் முன்வந்து கொண்டிருக்கின்ற எங்களை விளக்கற்றம் பார்க்கும் இருளே போல் முன்னர்ப் பழகிய பழக்க மிகுதி பின்னே இழுத்து விடாதபடி எங்களைக் காப்பாற்றுவாய் என்று வேண்டிக் கொள்கின்றனர்.
நான் முயற்சிகளைச் செய்து பயனடைந்தோர் பெற்ற நம்மையின் பயன் நுகர்ந்து பிறக முயற்சியைக் கைவிடுதலுமுண்டு. ஆதலால் உய்வார்கள் உரியும் வகையெல்லாம் உய்வடைந்த நாங்கள் இனிமேல் இயலாது தொண்டு செய்வதற்கு நீ துணை செய்தல் வேண்டும் என வேண்டுகின்றனர். உய்வார்கள் உரியும் வகையெல்லாம் உய்ந்தொழிந்த எங்களை மேலும் காப்பதில் நீ இளைத்துக் கை விடாமல் காத்தல் வேண்டுமென்னும் கருத்தும் அடங்கியுள்ளது.
கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும் தொல்லது விளைந்தென நிலம் வளங்காப்பினும் எல்லா உயிர்க்கு இல்லால் வதாழ்க்கை இன்னும் தம்மென எம்மனோர் இரப்பின் முன்னும் கொண்டிர் என நும்மனோர் மறுத்தல் இன்னா தம்ம இயற்றேர் அண்ண என்ற புறப்பாட்டின் கருத்தும் பொருத்துவதாகும்.

Add a Comment