திருவெம்பாவை
=============
பாடல் – 12
—————
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் ! நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்! இவ்வானும் குவலையமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோர் என்பாவாய்!.
விளக்கவுரை
============
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
ஆர்த்தாடும் தீர்த்தன்
================
தம்மைப் பிணித்திருக்கின்ற பிறவியாகிய துயர் கெடும்படி நாம் மகிழ்ச்சிப்பெருக்குடன் நீராடுகின்ற பேரருட்பொய்கை போன்றவனும் தில்லைப் பெருவெளியில் அனல் ஏந்தி ஆடுகின்ற ஆடல்வல்லானும், விண்ணையும் மண்ணையும் ஆக்கி அளித்து அழிக்கும் அருளாடல் வல்லவனுமாகிய இறைவனது மணிவார்த்தைகளைப் பேசி கைவளை ஒலிக்கவும் மேகலை முதலிய அணிகலன்கள் ஆரவாரம் செய்யவும் கூந்தலில் சூடிய மலர்களில் மொய்த்திருக்கும் வண்டுகள் நீருள் மூழ்கும் போது ஆரவாரம் செய்து அகலவும் இந்தப் பூம் பொய்கையில் நீராடி நம்மையுடைய தலைவனுடைய திருவடிகளைப் போற்றிப் புகழ்ந்து நீராடுவோம் என்று கூறிக்கொண்டு மகளிர் எல்லாம் நீராடுகின்றார்கள்.
திருவெம்பாவைப் பாடல்களின் உட்பொருளை நாம் மீண்டும் ஒருகால் நினைவு கூர்தல் வேண்டும். அந்தக் காலத்தில் மகளிர் தைந்நீராடல் என்ற பாவைநோன்பு நோற்பது மரபு. அதன் பொருட்டு அவர்கள் வைகறையில் எழுந்து அடுத்த வரையும் எழுப்பிக் கொண்டு நீராடச் செல்வர். இந்த மகளிராடலைக் கண்ட மணிவாசகனார் தன்னுடைய மனக்கண்களால் அறியாமை இருளில் ஆழ்ந்து கிடப்பவர்களைக் காண்கின்றார். அவர்களை அறிவு வெளிக்கு அழைத்து வந்து அருள் வெள்ளத்தில் ஆடச்செய்ய விழைகிறார் இந்த நோக்கினில் பிறந்ததே திருவெம்பாவைப் பாடல்கள்.
இந்த உலகில் பிறப்பது துன்பம் தருவது என்று கூறுவர். அதே வேளையில் நம்முடைய அறியாமையைப் போக்கி அறிவினைத் தருவதற்குரிய கருவி எனவும் கூறுவர். நெடுந்தொலைவு நடந்தால்தான் குறித்த இடத்தை அடையலாம். எனவே வழிப்பயணம் தேவையாக உள்ளது. ஆனால் வழி நடையின்போது வருகின்ற துன்பங்களை நோக்குடம்போது வழி நடை துயராகவே தெரியும். வாழ்க்கைப் பயணமும் இவ்வாறே. இந்தத் துயர் நீங்க வேண்டுமானால் இறைவன் என்னும் அருட் புனலில் மூழ்க வேண்டும். எனவேதான் ஆர்த்தபிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் என்று இறைவனைக் குறிப்பிட்டார். தீர்த்தன், தில்லைச்சிற்றம்பலத்தன், கூத்தன் என்பனவற்றால் தீர்த்தம், தலம், மூர்த்தி மூன்றுமாகியுள்ளார் என்பது நோக்கத்தக்கது.
நாம் மகிழ்ந்து சென்று ஆடுவதற்குரிய பெருமான் தில்லையம்பலத்திலே அனலேந்தி அருளாடல் புரிகின்றான். அவனுடைய ஆடல் ஐந்தொழிலின் அடையாளம். அவன் கையில் ஏந்தியிருக்கின்ற அனல் மெய்யறிவின் அடையாளம் என்பர்.
அனல் ஏந்தி ஆடும் அண்ணல் விண்ணும் மண்ணும் எல்லாம் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடுகிறான். இந்த உலகும் உடலும் ஆக்கி அளித்துப்பின் அழிக்கப்படுவன. உலகிடை வாழும் உயிர்கள் அறிவு மறைக்கப்படுதலும் பின்னர் தெளிவிக்கப் பெறுதலும் ஆகிய இரு தொழில்களுக்கு இலக்காவன. உடல் உலகு பற்றிய தொழில் மூன்று உயிர் பற்றிய தொழில் இரண்டு இந்த ஐந்தொழிலும் இறைவனது அருளாடலாகும். எல்லையற்ற பேருலகங்களையும் ஆக்கி அளித்து அழித்தல் அவனுக்கு விளையாட்டுப் போன்றது. சிறு பிள்ளைகளின் கண்களை மறைத்துக்கட்டி அவர்களை ஓடி ஆடிக் களைக்க விட்டுப் பின்னர் தன்னை அடையச் செய்யும் விளையாட்டுப் போலவே நம் அறிவை மறைத்து அலைமோத விட்டுப் பின்னர் ஆட்கொள்கிறான். இதனையே ஐயா நீ ஆட்கொள்ளும் விளையாட்டு என்றார் முன்னரும்.
இறைவனுடைய இந்த அருட்பெருஞ்செயலினைப் பாடிப் பரவிய வண்ணமே நீராடுவோம் என்கின்றனர். இந்த நீராடுதலின் பயன் உடல் அழுக்கு நீங்குவது மட்டுமன்று உள்ளத்து அழுக்கும் நீங்குவது அன்றோ? எனவேதான் அவனுடைய மாசில் மணிவார்த்தையினைப் பேசியவண்ணமே நம்மை உடையவனுடைய பொற் பாதங்களைப் போற்றி இந்தப் பூம்பொய்கையில் ஆடுவோம் என்கின்றார். சென்றாடும் நீர்த் தங்கள் அதைத்தாமே என்ற தீர்த்தாண்டகமும் கருதத்தக்கது.
இறைவனுடைய மாசில்லாத மணிவார்த்தையினைப் பாடுவதனால்தான் அவருடைய பாடல்களுக்கு மாணிக்கவாசகம் என்று பெயர் வந்தது. வாதவூர் அடிகளும் மாணிக்கவாசகரானார். வளைசிலம்ப, வார் கயல்கள் ஆர்ப்ப, அவை அரவஞ்செய்ய, அணிகுழல்மேல் வண்டார்ப்ப என்றெல்லாம் உலகியல் வாழ்வினை அருள் நெறியிற் செலுத்திப் பிறவித் துயர் கெடச் செய்கிறார். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற பழமொழியும் இத் தத்துவத்தினால் உண்டாகும்.

Add a Comment