திருவெம்பாவை
=============
பாடல் – 13
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய் !
விளக்கவுரை
——————-
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
============================
எங்கள் பிராட்டியும் எங்கோனும்
======================
பாவை நோன்பு கொண்டு பனி நீராடும் மகளிர் இறைவனது அளப்பரிய புகழினைப் பாடியும் அவனைப் பாடும் பரிசு ஏது என்று கேட்டும் பாடிப்பரவினர். பரம் பொருளையே இடைவிடாது நினைந்து போற்றியவராய் பூம்புனலாட வந்த நங்கையர்க்குப் பங்கயப் பூம்புனலே பரம் பொருளாகக் காட்சி தருகிறது.
பொய்கையில் குளிக்கச் சென்ற பாவையர் மடுவையும், மடுவிலிருந்த மலர்களையும் அம்மையப்பருக்கு ஒருவாறு ஒப்பிட்டுப் போற்றி அம்மையப்பரது அருளில் ஆடித்திளைத்தல் போல எண்ணி நீராடி மகிழ்ந்தனர்.
மடுவில் நீலோற்பல மலர்கள் நிறையப் பூத்திருந்தன. இடையிடையே செந்தாமரைப் பூக்களும் மலர்ந்திருந்தன. நீல நிறமான குவளை மலரும் சிவந்த நிறமான செந்தாமரை மலரும் அடுத்தடுத்து அமைந்திருந்தன. அக் காட்சி, நீலமேனியுடைய உமையம்மையும் செந்நிற மேனியராம் எம்பிரானும் இணைந்து வீற்றிருப்பது போல இருந்தது.
அதுவுமின்றி, நீலக்குவளை மலர்கள், இறைவனின் நீல கண்டத்தை நினைவூட்டின. இறைவியின் நீலக் கண்களையும் நினைவில் நிகழ வைத்தன. செந்தாமரை மலர்களும், எம்பிரானின் சிவந்த திருமுகம் போலவுபம் எம்பிராட்டியின் பரந்த அருள்முகம் போலவும் அழகு செய்தன.
மேலும், அம் மடுவில் வெண்ணிறமான நீர்வாழ் பறவைகள் தங்கியிருந்தன. அவை இறைவியின் கைகளில் அணிந்துள்ள வெண்ணிறமான சங்கு, முத்து வளையல்களைப் போன்றிருந்தன. இறைவரின் திருமேனியில் பூசிய வெண்ணீறு போலவும் காட்சியளித்தன. அவையெழுப்பும் ஒலி பரமனது உடலின் அங்கமான கைகளில் உமாதேவியார் நிரல்பட அணிந்துள்ள வளைகள் செய்யும் இன்னொலியை ஒத்திருந்தது.
அக் குளத்தில் அரவங்களும் ஆங்காங்கு அசைந்து கொண்டிருந்தன. அவை, இறைவர் அணிகலனாகப் பூண்டுள்ள பாம்புகள் நெகிழ்வது போலவும், இறைவியின் தலைப் பின்னல் அசைவது போலவும் காட்சி தந்தன.
அப் பொய்கை உடல் அழுக்கைப் போக்கிக் கொள்ள வந்து குளிப்பவரது அழுக்கையெல்லாம் அகற்றித் துப்புரவு செய்கிறது. அம்மையப்பரும் தம்மை வந்து சார்ந்து, ஆணவம், கன்மம் மாயை என்ற உயிரின் மும்மல அழுக்கைப் போக்கி முத்தி பெற விரும்புவோரை ஆட்கொண்டு அருள்கின்றார். பொய்கை நீர் எவ்வாறு எல்லோரது அழுக்கையும் ஏற்ற போதிலும், தூய்மையாகவே விளங்குகிறதோ, அவ்வாறு அம்மையப்பரும் தம் அடியார்களது அழுக்கையெல்லாம் தாம் அகற்றியும், தம் நிகரில்லாது திகழ்கின்றனர்.
இவ்வாறெல்லாம் மடுவையும் மங்கை மணாளரையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே அம்மையப்பரது அருளிலேயே மூழ்கித் திளைப்பது போல, குளத்து நீரில் மூழ்கி மகிழ்ந்தனர். எடுத்த பிறவி ஏற்றம் பெற நீராட வந்த நங்கையர்.
எல்லாவகையாலும், எம்பிராட்டியும், எம் கோனும் போல இணைந்து அமைந்திருக்கிறது இப்பொய்கை. இதில் நீராடி நாம் உடலழுக்கு உயிரழுக்கு இரண்டையும் போக்கிக் கொண்டு தூய்மை, பெறுவோமாக என்று பாடிக் கொண்டே நீராடுகின்றனர்.
அம் மடு நீர் நிறைந்தது ! அவைகள் பொங்கிப் பொங்கி எழுவது. அதில் கன்னியர் பாய்ந்து பாய்ந்து மூழ்கினர். அவ்வாறு அவர்கள் பாய்ந்து மூழ்கும்போது, அவர்கள் கைகளில் அணிந்திருந்த சங்கு வளைகள் ஒலித்தன. கால்களால் நீரை அடித்து, நீந்தி விளையாடும்போது, கால்களில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் நடன ஒலி எழுப்பின.
அவர்களோ கன்னிப் பெண்கள், எல்லோரும் ஒன்று கூடி நீரில் நினைத்து விளையாடுகின்றனர். ஒருவர் மீதொருவர் நீரை வாரி இறைத்துக் கொண்டும், பலவாறு விளையாட்டாக ஏசிப் பேசிக் கொண்டும், இறைவரின் புகழை இசைத்துக் கொண்டும் குளிக்கின்றனர். எனவே, அவர்களது உள்ளத்தில் உவகை ஊற்றாய்ப் பெருகி வழிகிறது. உள்ளத்தின் உவகையால் உடலும், உடல் அங்கங்களுங் கூடப் பூரிப்படைந்து பொங்குகின்றன.
நீரைக் குடைந்து குடைந்து, மூழ்கி மூழ்கி எழுகின்றனர் மங்கையர். அதனால் இயற்கையாகவே அலை மோதிப் பொங்கும் புனல் நிர், அவர்களது ஆட்டத்தால் மேலும் பொங்கிப் பொங்கி எழுகிறது.
இவ்வாறெல்லாம் புனலில் புகுந்து புகுந்து விளையாடி, அப்பரையும் அம்மையையும் அப் புனலில், பொருத்தக் கண்டு மகிழ்ந்தனர் அந்த நங்கையர்.
பரம்பொருளை மாதொரு பாகனாகப் போற்றுவது பழத்தமிழ் மரபு.
தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால் வெள்ளை நீறும் பசுஞ்சாந்து பைங்கியும்
சூலும் தொக்க வளையம் உடைத் தொன்மைக் கோலம்
என மாதொரு பாகனாகிய கோலத்தின் பழைமையினை அடிகள் கூறுகின்றார்.
இறைவன் அருளாசிரியனாகத் தோன்றி அடியவர்களது பாசத்தை நீக்குவதற்குக் கருதியும் அடியவர்களை அன்போடு நோக்கியும் அருளுரை கூறியும் திருக்கரங்களால் தீண்டியும் தீக்கை செய்தருளுவான் என்பர். திருவிழிகளைப் போன்ற செங்கமலப் பைம் போதால் மானசிக தீக்கையும் பார்ப்புகளைப் பைஞ்சிறகால் பாதுகாக்கும் குருகினங்களால் பரிச தீக்கையும் அரவத்தால் வாசிக தீக்கையும் இப் பாடலில் குறிப்பிடப் படுகின்றன.

Add a Comment