POST: 2016-12-30T08:41:14+05:30

திருவெம்பாவை
பாடல் – 14
===================

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம்ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்‘
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி றிம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் என்பாவாய்.

விளக்கவுரை
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
======================================

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை
=========================================
மகளிர் சீதப்புனல் ஆடுகின்றார்கள். அவர்கள் காதில் அணிந்த குழைகள் ஆடுகின்றன. அழகிய அணிகலன்களும் ஆடுகின்றன. மாலை அணிந்த குழல் ஆடுகிறது. அரதனால் வண்டின் குழாம் ஆடுகின்றன. இவ்வாறு காதார் கழையாடப் பைம்பூண் கலன் ஆடக், கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆடச், சீதப்புனல் ஆடிய செல்வியர் சிற்றம் பலத்தினைப் பாடுகின்றனர். பரம்பொருள் வேதங்களால் சுட்டப்படும் பொருளாதலையும் பாடினர். வேதம் நான்கினும் நாதன் நாமம் நமசிவாயவே – வேதப்பொருள் சிவம் என்றும் அப் பொருள் என்பதுயிர் சிவமயம் தன்மையைப் பாடி எனவும் கொள்ளலாம். இறைவனுடைய பேரொளி வண்ணமாய் பெற்றியினைப் பாடுகின்றனர். மேலும் பரம்பொருள் எல்லாவற்றுக்கும் ஆதியாகவும் அந்தமாகவும் விளங்குகின்ற தன்மையினைப் பாடினர். அறிவினை மறைத்து உலகியலில் அழுந்திடச் செய்து பின்னர் அந்த உலகியலிலிருந்து வேறுபடுத்தி சிவஞானம் ஊட்டிப் பாதுகாக்கின்ற திருவருட்சத்தியின் திருவடிப் பெருமையினைப் பாடுகின்றனர். இவ்வாறு இவர்கள் நீராடி இறைவன் புகழ்பாடி திருவருட்சத்தியின் திருவருட் பெருமையினைப் பாடிப் பரவுகின்றனர். சீதப்புனல் ஆடிய சிறப்பினைச் சொல்லோவியம் போலக் காட்டுகின்றனர்.

சீதப்புனலாடி என்று சிறப்பித்தது, பனிக்காலத்து வைகறைப் பொழுதில் மிக்க குளிர்ச்சி உடையது பற்றியேயாம். தில்லைச் சிற்றம்பலம் மணிவாசகப் பெருமானுக்குப் பெரிதும் உவப்பானதால் இறைவன் அவரைத் திருப் பெருந்துறையில் ஆட்கொண்டாலும் அவர் இறையருளில் கலந்தது. தில்லைச் சிற்றம்பலத்திலேதான் ஐம்பூதத் தலங்களில் அது வான் வெளித்தலம். தில்லைப் பெருவெளியில் இறையருளில் கலந்தமை கருதியே போலும் வான்கலந்த மாணிக்கவாசகர் என்று போறிறினார் வள்ளலார். இறைவன், சொல்லுக்கும் பொருளுக்கும் எட்டாதவன். அவன் சொற்பதம் கடந்த தொல்லோன். சித்தமும் செல்லாச் சேட்சியன். அவனை மனவாசகங் கடந்தான் என்று அழைப்பார் மணிவாசகர். பரம்பொருள் வெளிக்குள் வெளி கடந்து நிற்பது வான். அனந்தங் கோடி வைத்த பெருவான் என்றார் வள்ளலார். கோயில் என்பதும் கோன் பொழில் தில்லையே எனவே சிற்றம்பலம் பாடினார். வெளிக்குள் வெளி கடந்து நிற்கும் பரம்பொருளை நமக்கு உணர்த்துவன வேதங்களே. ஆதலின் வேதப் பொருளைப் பாடினார். வேதப்பொருள் என்பதற்கு மறை பொருளை இசைத்தமிழில் இசைத்துப் பாடிய ஞானப்பனுவல் என்றும் கூறுவர்.

வேதப்பொருள் இறைவனே என்பார். இப்பொருள் ஆமாறு பாடுவோம் என்கின்றார். வெளிக்குள் வெளியாய் வேதப் பொருளாய் விளங்கும் விழுப்பொருளை உள்ளவாறு உணர்வோர் மிகச் சிலரே. இந்த அருவ நிலையினை அறிய இயலாதவர்க்கும் அருள் செய்ய வேண்டி இறைவன் அருவ நிலைக்கடுத்த அருவுருவ நிலைக்கு வருகின்றான். அருவுருவமாகிய சோதித்திறம் பாடுகின்றார். திருக்கோயில் உள்ளிருக்கும் திருமேனிகளில் சிவலிங்கத் திருமேனி அருவுருவத் திருமேனியே ! அடுத்து பரம்பொருளின் உருவ நிலையினை எண்ணி இறைவனுக்குரிய சூழ் கொன்றைத் தார் பாடுகின்றார். கொன்றை வேந்தன் என்றார் ஔவையார். புறத்தே ஐந்திதழும் நடுவே ஓங்கார வடிவும் கொண்டிருத்தலால் கொன்றை மலர், ஓங்காரத்தை உட்கொண்ட திரு ஐந்தெழுத்தைப் புலப்படுத்தும் என்பர்.

இங்ஙனம் அருவமாகவும் அருவுருவாகவுமை பின்னர் அருளுருவமாகவும் விளங்கும் பரம்பொருளே இவ்வுலகிற்கு ஆதியாகவும் அந்தமாகவும் விளங்குகின்றான். இவ் உண்மை தோன்றவே ஆதி அந்தம் அறி எனக் கம்பநாடரும், அந்தம் ஆதி என்மனார் புலவர் என மெய்கண்டாரும் கூறினர். பெருமானும் ஆதித்திறம் பாடி அந்தம் ஆம் ஆறும் பாடுகின்றார்.

ஆதியாகவும் அந்தமாகவும் விளங்குகின்ற பரம்பொருள் இடை நின்ற காலத்து யாது செய்யும் என்பதற்கு விடை தருவார் போலவே பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன் பாதத் திறம் பாடுகின்றார்.

இறைவனுடைய அருட் செயல்கள் ஐந்தும் அருளாற்றலாகிய சிவசக்தியால் நிகழ்வன. ஐந்தொழிலுள் மறைத்தல் என்பதும் ஒன்று. மறைத்தலையே பேதித்தல் என்றார். மறைத்தலைச் செய்யும் நிலையில் அன்னை திரோதை எனப்படுவாள். இந்த மறைப்பாற்றல் உயிர்களுக்கு மலபரியாகத்தை உண்டாக்கிப் பாச நீக்கத்தில் அருட்சக்தியாக நின்று அருள் செய்யும் அம்மை திரோதை. அகன்றாள் எனை விரும்பி அம்மை அருட் சக்தி அடைந்தனனே என்பார் வள்ளலார்.

இங்ஙனம் ஆணவ இருட்டில் கிடந்த காலத்து மறக்கருணை காட்டிப்பின் அறக்கருணை காட்டி ஆட்கொள்ளும் திறத்தினையே மணிவாசகர் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் மாதத்திறம் என்று பாடினார். பெய்வளை என்று அன்னையைக் குறிப்பிட்டார். அஞ்சேல் என்று அபய முத்திரை காட்டுங் கரத்தினை நினைந்து எடன்பர். வளர்த்தெடுக்கும் கருணைத்திறம் நோக்கிலே போலும் பெய்வளை தன் பாதத்திலும் பாடுகின்றார். வேதத்துக்கும் எட்டாது வெளிக்குள் வெளி கடந்து விளங்கும் விழுப்பொருளின் அருள் ஞானச் சோதித்திறம் பாடுதலும், அவன் அடையாளமாகிய கொன்றையந் தார் பாடுதலும் அடியவரை ஆட்கொள்ளும் பாதத்திறம் பாடுதலுமே அடியார் செய்யத்தருவன என்பது இப் பாடலால் குறிக்கப்பட்டது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *