POST: 2016-12-31T07:25:57+05:30

திருவெம்பாவை
பாடல் – 15
===================

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீர் ஒருகால் வாய்ஓவான் சித்தம் களிகூர
நீர்ஒருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்‘
பார்ஒருகால் வந்தனையாள் விண்ணோரைத்தான் பணியாள்
பேர் அரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்ககர்தான்
வார்உருவப் பூண்முலையீர்! வாயார நாம்பாடி
ஏர்உருவப்பூம் புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

விளக்கவுரை
———————-
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
======================================
ஆட்கொள்ளும் வித்தகர்
=========================================

பங்கயப் பூம்புனல் ஆடவந்த பெண்கள் வேதப்பொருள் பாடியும் அப் பொருளின் பாதத் திறம் பாடியும் மகிழ்ந்தனர். இறைவனுடைய பெயரைக் கேட்டவுடனேயே தன்வயம் இழந்து உள்ளம் உருகிக் கண்ணீர் பெருக்கி நிற்கும் இளம்பெண் ஒருத்தியின் தலையன்பினைப் பாராட்டி இவ்வாறு அவனை உள்ளுருகச் செய்த வித்தகனைப் போற்றிப் பாடி நீராடுகின்றனர்.

அன்பிற் சிறந்த அந்த இளம்பெண் ஒவ்வொரு நேரங்களில் எம்பெருமான் எம்பெருமான் என்று இறைவனுடைய, சீரார்ந்த சிறப்புகளை ஓயாது சொல்வாள். உள்ளங் களிகூரக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகத் தரைமிசை விழுந்து வணங்குவாள். எம்பெருமானையன்றி ஏனைய தேவரை ஒருபோதும் பணியாள். எல்லையற்ற பேருலகங்களை எல்லாம் ஆளுகின்ற பேரரசனாகிய எம்பெருமானிடத்துப் பித்தாகி நிற்கும் இவள் பேரன்பு தான் எத்தகையது. இங்ஙனம் அவன் பித்தேறி நிற்குமாறு அவளை ஆட்கொண்ட வித்தகனாகிய எம்பெருமானது திருவடிகளை வாயாரப்பாடிப் பூம்புனல் பாய்ந்து ஆடுவோம் என்கிறாள்.

எல்லோரும் அன்புடையவர்களே என்றாலும் அன்பின் நிறம் வேறுபடும். ஆதலின் தலையாய அன்பு இடையாய அன்பு, கடைப்பட்ட அன்பு என்று கூறுவர். நெருப்பிடைப்பட்டு இரும்பு உருகுதல் போல அரிதாக உருகும் இயல்பினர் சிலர், நெருப்பிடைப்பட்ட மெழுகாய் உருகுவோர் சிலர், வெயிலிடைப்பட்ட நெய்யாய் உருகுவோர் சிலர், இவரை எல்லாம் விட இடையீடின்றித் தைலதாரை போல உள்ளுருகி நிற்பவரே தலையாய அன்பினர். அத்தகைய தலையாய அன்பு கொண்டவர். ஓரொருகால் எம்பெருமான் சிறப்பினைப் பேசத் தொடங்கினால் அவன் ஓய்வதில்லை. அவனுடைய அளப்பரிய பெரும் புகழைச் சொல்வதிலே அவர்களுக்குப் போதுமென்ற மனம் வருவதில்லை. வாய் ஓவாது அவன் புகழினைப் பேசுவார்கள். கண்ணீர்ப் பெருக்குத் தைலதாரையாய்த் தாரை தாரையாய் வரும். உள்ளுருகிப் பெருகி எழும் கண்ணீரால் உடம்பு நனையவேண்டும் என்பார் வள்ளலார். உள்ளம் உருகிக் கண்ணீராய்ப் பெருகும் என்பார் சேக்கிழார். தைந்து உருகிப் பாய்வது போல் அன்புநீர் பொழி கண்ணும் என்றார். இங்ஙனம் உருகிய உள்ளத்தராய் பேதுற்றும் தொழுவதும் தரைமிசை விழுவதும் எழுவதுமான நிற்பார்.

கையும் தலைமிசை பொலி அஞ்சலியன்
கண்ணும் பொழி மழை ஒழியாதே
பெய்யும் தகையன கரணங்களும் உடன்
உருகும் பரிவின பேறெய்தும்
மெய்யும் தரைமிசை விழுமுன்பு எழுதரும்
மின்தாழ் கடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும்பிடும் அவர்
ஆர்வம் பெருகுதல் அளவின்றால்.

என அடியவர் மெய்ப்பாடுகளை அழகுறப் பாடுகிறார் சேக்கிழார்.

இங்ஙனம் நெகிழ்ந்துருகி நிற்குமாறு அடியவர்களை ஆட்கொண்ட பெருமானது சதுரப்பாட்டினை எண்ணி வியக்கின்றார் அப்பரடிகளும்

கண்பனிக்கும் கைகூப்பும் கண்முன்றுடை
நண்பனுக்கு எனைநான் கொடுப்பேன் எனும்
வண்பொனித் தென் வலஞ்சுழி மேவிய
பண்பன் இப்பொனைச் செய்த பரிசிதே.

என்று செவிலி கூற்றாகப் பாடுகின்றாள். வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகளும் தமது செந்நிற் கோவையில் “என் ஒக்கலைப் பெண்ணுக்கும் மால் கொடுத்தாயே‘ என்று பேசுவார்.

அடியவர்களை ஆட்கொண்டு அவர்களைக் கோதாட்டி அவர்களுக்குப் பேரின்பம் அளிப்பவன் இறைவன். அவன் தன்னடைந்தார்க்கு இன்பங்கள் தருகின்ற தத்துவன். அவனுடைய திருச்சின்னங்கள் கேட்டுச்சிவனே சிவனே என்று பாடி சிந்தை களிகூர்ந்து செந்நெறியில் நன்நெறியில் நிற்க வேண்டும் அருள்நெறியில் செல்லவேண்டும் என்பதே இப்பாடலின் கருத்தாகும்.

சித்தம் களிகூர என்றதால் மனம் பரம்பொருளின்பால் ஈடுபட்டமையும், வாயே – வான் என்ற குறிப்பால் வாக்கு இறைவன் பொருள்சேர் புகழ் மொழிக்கே ஆக்கப்பட்டமையும் வந்தனையான் என்பதனால் காயம் இறைவன் வழிபாட்டுக்கு உவமையாவதும் புலனாகும். இவ்வாறு உள்ளம் உடல் உயிர் என மூன்றாலும் ஆட்பட்டு உருகும் திறம் உணர்த்தப்பட்டது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *