திருவெம்பாவை
===================
பாடல் – 16
——————–
முன்னிக் கடலைச்சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன் அருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.
விளக்கவுரை
==============
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
========================================
முன் சுரக்கும் இன்னருள்
===========================
இளைய நங்கையர் நாடும் வீடும் நலம் பெறவேண்டுமென்று நல்ல நோக்கத்தோடு நோன்பு மேற்கொள்கின்றனர். இந்த நோன்பின் பொதுப்பயனாகிய மழை வேண்டுதலை இப்பாடலில் குறிப்பிடுகின்றார்.
மழை கடலைச் சுருக்கி கார்மேகமாக எழுகின்றது. அப்போது அது இறைவியின் திருமேனி வண்ணம் கொண்டு திகழ்கின்றது. இடையிடையே அந்த மழை மேகம் மின்னுகிறது. அப்போது எம்பிராட்டியின் சிற்றிடை போல் திகழ்கின்றது. மழைமேகத்தின் இடிக்குரல் இறைவியின் திருப்பாதச் சிலம்பொலிபோல் ஒலிக்கின்றது. அது வானத்தில் வீசுகின்ற வண்ணவில் அன்னையின் திருப்புருவம் போல் திகழ்கின்றது. அது பொழிகின்ற மாமழையோ இறைவி அடியவர்க்குச் செய்கின்ற பேரருள்போல் வரம்பின்றிப் பொழிகின்றது. இங்ஙனம் எல்லையற்ற பேருலகங்களை ஈன்று புரந்தருகின்ற இறைவியைப்போல் விளங்குகின்ற மாமழையே நீ வையகத்துக்கு வாழ்வு தர வருக அன்னையின் இன்னருள் போல் எல்லோர்க்கும் நலந்தரப் பொழிக என வேண்டுகின்றனர்.
மேகம் கடல்நீரை முகர்ந்து கொண்டுவந்து பொழிவதாகக் கூறுவர். கடல் நீர் ஆவியாகி மேகமாய்த் திரண்டு மழையாய்ப் பொழிகின்ற அறிவியல் அடித்தளத்திலேயே இக் கற்பனை எழுந்திருக்கிறது. காணுமிடம் எல்லாம் கடவுளைக் காணுகின்ற பக்தி மேலீடு இப் பாடலில் ஒளிவீசுகின்றது.
உலக நலங்குறித்துப் பொழியும் மழைக்கு உயிர்நலங் கருதிச் சுரக்கும் திருவருள் ஒப்பாகின்றது.
வானமழையினைத் திருவருட் சக்தியாகிய அன்னையோடு ஒப்பிட்டிருப்பது மழையே திருவருட்சக்தியின் வடிவம் என்பதினை எடுத்துக்காட்டுகின்றது. திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தினை அடுத்து வான்சிறப்பினைக் கூறுவதும் இது பற்றியே எனவும் கூறுவர். இறைவன் அருள் செய்வது போல் என்று கூறுகிறார். இறைவி தன் அடியவர்க்கு அருள் செய்கிறாள் என்று கூறாமல் தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு அருள் செய்கின்றான் என்றும் கூறுகின்றார். சக்தியும் சிவமும் தனித்தனியே பேசப்படினும் நெருப்பும் சூடும் போல ஒன்றே என்பது குறிக்கும். இறைவன் அடியவர்க்கும் பொலிகின்ற பேரருளே அவனது சக்தி என்பதும் கருதத்தக்கது. அருளது சக்தியாகும் என்பது சிவநெறிப் பனுவல்.
எங்கோமான் அன்பர் என்பது இறையருளுக்கு முழுவதும் உரியவராய் மலபரிபாகம் இருவினை ஒப்பு முதலியன பெற்றுச் ஜீவன் முத்தராய்த் திகழும் பேரன்பர்களை, எங்கோமான் அன்பர்க்கும் நமக்கும் என்பது நல்லார் ஒருவர் பொருட்டுப் பெய்யும் மழை எல்லோர்க்கும் பயன் படுவதையும் குறிப்பிடுகிறது. மாமழையே நீ இறைவியின் இன்னருள்போல் பொழிவாய் என்று வேண்டுவதனை நோக்கும்போது.
கெடுப்பதும் பின்னர் எடுப்பதுமாகிய எல்லாம் வல்ல மழையே நீ வேண்டியபொழுது பெய்யாமல் நின்றும் வேண்டாத பொழுது பெய்தும் எம்மைக் கலங்கவைக்காமல் எம்மை எல்லாம் வாழ வைக்கும் இறைவியின் பேரருள்போல் இன்னருள் போல் நல்லருள்போல் இனிதாகப் பொழிக நலந்தரப் பொழிக வளந்தரப்பொழிக என்று வேண்டினார் என்று கூடக் கொள்ளலாம் போலும்.
இறைவியினை ஓரிடத்து உடையாள் எனவும் பின்னர் என்னை ஆளுடையான் எனவும் இன்னோரிடத்து எம்பிராட்டி எனவும் முறையே கூறுவதும் உட்கொள் உடையது ஆகும்.
உயிர்க்குலங்கள் மூன்று நிலைகளை அடைகின்றன. முதல் நிலையில் உலகெலாம் ஒடுங்கிய பின்னர் படைப்புக் காலம் அளவும் காரிட்ட ஆணவக் கருவறையில் கட்டுண்டுகிடக்கும் இந்நிலை கேவல நிலை என்று அழைக்கப்படும், என்று நீ அன்று நான் உன் அடிமை அல்லவோ என்றபடி இநந்லையிலும் உயிர்த்தொகுதிகளை இறைவி உடைமையாகக் கொண்டவளே, இந்நிலை குறித்து உடையாள் என்றாள்.
ஆணவமாம் இருட்டறையில் கிடந்த உயிர்களை அருளாற்றல் அணிமாலை விளக்கறைக்கு அழைத்து வருகின்றது. உடல் உள்ளம் என்னும் கருவிகளைக் கொடுத்து உலகமெனும் பேரரங்கில் நடைபயில விடுகிறது.
அறிவினைச் சிறிது சிறிதாக அளித்து ஆட்கொள்ளுதற்குத் தகுதியளிக்கும் இந்நிலை சகல நிலை எனப்படும். இந்நிலையில் உயிர்களை நடைபயில விட்டுப் புறம் புறம்திரியும் அன்னை போல விளங்குகின்ற இறைவியை ஆளுடையாள் என்று அழைத்தார்.
குற்றங்களிலிருந்து விடுபட்டு இறைவனை அடைவதற்குரிய தகுதியைப் பெற்ற நிலை சுத்த நிலை எனப்படும். இந்நிலையில் இறைவி இறைவனைச் சேர்ந்து இன்புறுதற்குத் துணை புரிதலின் எம்பிராட்டி என்றார்.
தெய்வ நாயகன் நீறணி மேனி போற் சென்று
பௌவம் மேய்ந்தமை மேனிபோற் பசந்து பல்லுயிர்க்கும்
எவ்வ மாற்றுவான் சுரந்திடு மின்னரு ளென்னக்
கௌவை நீர்சுரத் தெழுந்தன கனைகுரல் மேகம்
என்று திருவிளையாடற்புராணத்தில் கூறியுள்ளதும் காணலாம்.
இறைவன் உயிர்களுக்கு உடலையளித்து, அவை வாழ்வதற்கு நிலத்தைப் படைத்து அவை உண்டு உயிர்வாழ்வதற்கெனப் பயிர்களை உண்டாக்கி, அப் பயிர்கள் வளர்வதற்கு மழையைப் படைத்து மழை பொழியும் நீரையும் படைத்தான் இதனை.
பாரவன் காண், பாரதனிற் பயிரானான் காண், பயிர் வளர்க்கும் துளியவன் காண், துளியில், நின்ற நீரவன்காண்‘ என்று ஆளுடைய அரசு அருளியுள்ளதும் எண்ணத்தக்கது.

Add a Comment