POST: 2017-01-03T10:26:40+05:30

திருவெம்பாவை
===================
பாடல் – 18
——————–

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணார் முடியின் மணித்தொகை வீற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே! இப் பூம்பனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

விளக்கவுரை
==============
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================

கண்ணாரமுகமுமாய் நின்றான்
===========================

வான்தொட உயர்ந்த திருவண்ணாமலையில் கோயில் கொண்டிருக்கும் சிவ பெருமானுடைய செந்தாமரை அனைய திருவடிகளைச் சென்று வழிபடுகின்ற தேவர்களின் மணிமுடிகளில் பதித்துள்ள ஒளி வீசும் மணிகள் எல்லாம் ஒளியிழந்து போவது போல கதிரவன் எழுந்து காரிருளைப் போக்குவதனால் விண்மீன்கள் எல்லாம் ஒளியிழந்து புலர்காலைப் பொழுது புலரவில்லை. இவ் வேளையில் பெண்ணாகவும் ஆணாகவும் அலியாகவும் ஒளி நிறைந்த விண்ணாகவும் மண்ணாகவும் இத்தனைக்கும் வேறாகவும் அகக்கண்ணாகிய அறிவுக்கண்ணால் நுகர்தற்குரிய இன்ப நிறைவளிக்கும் அமுதமயமாகவும் விளங்குகின்ற பரம்பொருளின் ஞானமாகிய திருவடிகளைப் பாடி நீராடுவோம் என்று கூறுகின்றனர்.

திருவெம்பாவை திருவண்ணாமலையில் அருளிச் செய்யப்பட்டது என்பதனை இப் பாடல் காட்டுகின்றது. தொடக்கமும் கூட ஆதியும் அந்தமும் இல்லா அரும்பொருள் சோதி என்றே அமைகின்றது. ஐம்பூதத் தலங்களில் திருவண்ணாமலை அனல் வடிவுக்குரியது. திருவண்ணாமலை ஒரு காலத்து ஒளி வண்ணமாக ஓங்கி நிற்தென்பர்.

இங்ஙனம் பேரொளிப் பிழம்பாக உள்ள மலையுருவில் விளங்கிய பெருமானுடைய திருவடிகளில் தேவர்கள் முடிசாய்ந்து வணங்கும் போது அவர்களுடைய மணிமுடிகளில் பதிந்துள்ள மணிகள் ஒளியிழந்து போவதற்கு உவமை கூறினார். இங்ஙனம் உவமை கூறும் வாயிலாக இறைவனது வியன் பெரும்புகழையும் பாடி மகிழ்கின்றார்.

இவ் வருணனையால் இறையருட் பேற்றிற்குரிய கடவுட் பக்தியைப் பலகாலம் மேற்கொண்ட உயிர்களுக்குச் சிவஞானம் தோன்றியதும் அவ்வுயிர்கள் பாசம் நீங்கப் பெற்று உயிரறிவு மடங்கி இறையருள் நினைவில் இரண்டறக்கலந்து இன்புறுவனவாம் என்னும் சைவசிந்தாந்த உண்மையும் குறிப்பிடப் படுகிறது.

‘பெண்ணாகி ஆணாகி அவியாகி பிறங்கொனிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான்‘.

என்பதனால் இறைவன் வேறாய் உடனாகி விளங்கிய தன்மையினைக் கூறுகின்றார்.

கடவுள் என்ற சொல்லுக்கே கடந்து நிற்பவன் என்றும் கூறுவர்.

‘வேறாய் உடனானான்‘ என்றார் திருஞானசம்பந்தர். நானானான் தானானான் நானும் தானும் ஆனான் என்பார் வள்ளலார்.

இயங்கியல் பகுதி நிலையியல் பகுதி என உலகம் இரு வகைப்படும். இதனைச் சராசரம் என்பர். பெண் ஆண் அலி என்பன இயங்குதிணை குறித்தன. விண்ணும் மண்ணும் நிலைத்திணை சேர்ந்தவை. இந்தப் பொருள்கள் யாவும் இறைவனுக்குரிய எண்வகை உருவமாக – உட்ட மூர்த்தங்களாகப் – பேசப்படும்.

நிலம் நீர் நெருப்பு உயிர் நீள்விசும்பு
நிலாப் பகலோன்
புலனாய மைந்தனோடு எண்வகையாப்
புணர்ந்து நின்றான்
உலகேழ் எனத்திசை பத்து எனத்தான்
ஒருவனுமே
பலவாகி நின்றவா தோள்நோக்கம் ஆடாமோ?

என்ற இடத்திலும் இறைவனது கலந்த நிலை கூறினார். ஏகன், அநேகன், இறைவன் என்புழியும் இந்நிலை சுட்டிக்காட்டப்படுகிறது.

இவ்வாறு மண்ணும் விண்ணும் மற்றுள்ள உயிர்களுமாகக் கலந்து நிற்கும் பரம்பொருள் அவ்வளவில் அடங்காது அப்பாலும் செல்கின்றது. இதனையே விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி என்று கூறினார்.

பரம்பொருள் எட்டாத நிலையில் இருந்தால் நமக்குப்பயன் இல்லை. அது நம்பொருட்டு இரங்கி வந்து கண்ணும் ஒளியும் உடம்பும் உயிரும் போல் கலந்து நின்று, நமக்குக் காட்டாதன எல்லாம் காட்டிபின்னும் கேளாதன எல்லாம் கேட்பித்து மீண்டும் பிறவாமல் காத்துக்கொள்கிறது. இக் கருணைத் திறத்தினைக் குறிப்பிடவே கண்ணார் அமுதமுமாய் நின்றான் என்றார்.

கண் என்பது இங்கே அகக்கண்ணைக் குறிக்கும். அண்ணாமலையான் அடிக்கமலம் என்று ஊரும் பேரும் இல்லாத ஒருவனுக்கு ஊரும் பேரும் உருவமும் காட்டியதனால் அவன் புறக் கண்ணுக்கும் அமுதமாய் இனிக்கின்றான் என்பதும் பொருந்தும். முன்னரும் கண்ணுக்கு இனியான் என்று பாடினார். உலகெங்கும் இரண்டறக் கலந்து நிற்கும் இறைவனுடைய திருவடிகளைப் பாடுவதே அறிவின் பயன் ஆதலின், கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல் பாடுக என்றார்.

பாவை நோன்பின் முதல் நோக்கம் இங்கே வலியுறுத்தப் படுகிறது. இளம்பெண் ஒருத்தி தன் தாயிடம் தனக்குரிய கணவராம் தன்மை உடையார் இன்ன தகுதியினராதல் வேண்டும் என்று கூறிக்கொள்வது போல் தந்தையும் தாயும் ஆகிய இறைவனிடம் தமது விருப்பினைத் தெரிவித்துக் கொள்கின்றான்.

அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லோமும் குன்றே அனையாய் எனைஆட் கொண்ட போதே கொண்டிலையோ என்று உள்ளங் குழைந்து நிற்கும் பெருமான். வேண்டத்தக்கது அறிவாய் நீ, வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உன்தன் விருப்பன்இறே என்று முழுமையாகத் தன்னை இறைவனுக்கு உரிமையாக்கிக் கொண்ட பெருமான், அடியவரல்லாதார் தனக்குத் தலைவராகி விடக் கூடாதே அடியர் அல்லாதார்க்கு ஆட்படும் சூழல் நேர்ந்து விடக்கூடாதே என்ற அச்சத்தால் உனக்கே அடைக்கலம் என்ற பழஞ்சொல்லைப் புதுப்பித்துக் கொள்கின்றார்.

அல்லார் தோள் சேரற்க. உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க. வேறொன்றும் காணற்க என எதிர்மறையால் கூறுவது வலியுறுத்துவதன் பொருட்டு, அன்னவரே எங்கணவர் ஆவார். அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம் என்று ஒன்பதாம் பாடலில் கூறியதையே இங்கும் எதிர்மறை முகத்தால் வலியுறுத்திக் கூறினார். வேண்டுகோட் பாடல்களின் தொடக்கமும் முடிவுமாக அமைதலின் இரவும் பகலும் இறைவனையே காண வேண்டும் என்பதனால் கனவிலும் நனவிலும் இறைவன் காட்சியே முன் நிற்க வேண்டும் என்பது புலனாகும்.

‘பண்ணேறும் மொழியடியார் பரவி ஏந்தும், பாதமலர் அழகினை இப் பரவி பார்க்கில் கண்ணே படும் என்றோ கனவிலேனும் காட்டென்றால் காட்டுகிலாய்‘ என்று வள்ளலார் கனவிலும் கடவுட் காட்சியினை வேண்டுகின்றார்.

இரவாயினும் பகலாயினும் இறைவனையே கண்டு அவன் புகழே பேசிப் பேசி நிற்பார்க்கு இரவானால் என்ன பகலானால் என்ன? எல்லாம் சிவமயமே எங்கும் அருள்மயமே என்பார். கதிரவன் எங்கே எழுந்தால் என்ன என்றும் கூழுறினார். கண்கள் உன்னையே காணவேண்டும் என்பதனால் காதுகள் உன் புகழே கேட்க வேண்டும். வாய் உனது புகழே பேச வேண்டும் என்பதும் கொள்ளப்படும். என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல கனவிலும் நனவிலும் அருளையே நினைந்து அன்பரோடு கூடி அன்பர் பணிக்கு ஆளாகி நிற்பதே இன்ப நிறைவாகும் என்பது இப் பாடலின் கருத்தாகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *