திருவெம்பாவை
===================
பாடல் – 19
——————–
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப்பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் ! உனக்கொன் றுரைப்போம்கேள்?
எங்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சோற்க‘
எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசோமக் கெங்கோன் நல்குறியேல்
எங்கெழிவ்ல என் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய் !
விளக்கவுரை
==============
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
எங்கு எழிலென் ஞாயிறு
===========================
பாவை நோன்பு கொண்ட பெண்கள் தங்கள் விருப்பத்தை வேண்டுகோளை றைவன் முன்னிலையில் கூறி நிற்கின்றனர். இவ்வுலகத்து எல்லாப் பொருள்களும் இறைவனுக்குரிய உடைமைகளே. இது பற்றியே இறைவனை உடையான் எனவும் கூறுவர். அங்ஙனம் உரிமை உடையவனாகிய தலைவனிடம் உன் அடைக்கலப் பொருளை நீ பாதுகாப்பாயாக என்ற வேண்டிக் கொள்ள வேண்டுவதில்லை என்றாலும் அச்ச மேலீட்டினால் அன்பு மேலீட்டினால் கவலை மிகுதியினால் அடைக்கலப் பொருளைப் பாதுகாத்துக் கொள் என்று வேண்டிக் கொள்கின்றார்கள்.
திருமணக் காலத்தில் மணமகளிடத்து மணமகளை ஒப்படைத்து உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று சொல்வது பழைய மரபு என்று கூறுவர். மணமகனுக்கு உரிமையாக ஒப்படைக்கப்பட்ட பெண்ணைப் பாதுகாப்பது அவனுக்அகே உரிய கடமையாகும். மணமகளை அவ்வாறு அளிக்கின்ற தந்தை தன்னுடைய பரிவு மிகுதியால் தன் மகளைப் பாதுகாத்துக் கொள்க என வேண்டிக்கொள்கின்றார். இப்படிச்சொல்வதனால் தலை மகனுடைய பொறுப்பு இரண்டு மடங்காகி விடுகிறது. தன் மனைவி என்று உரிமையோடு அவளைப் பாதுகாக்கும் பொதுக் கடமையுடன் அந்தப் பெண்ணைத் தனக்கு அளித்த தந்தையின் பொருட்டு அவளை அடைக்கலப் பொருளாகப் பாதுகாக்கும் சிறப்புக் கடமையும் சேர்கின்றது. உரிமைப் பொருளைப் பேணுவதனை விட அடைக்கலப் பொருளைக் கருத்துடன் காப்பாற்ற வேண்டும் என்பர்.
இங்ஙனம் தலைவனிடம் கடமையினை வலியுறுத்திக் கூறுவது போல பாவை நோன்பு கொள்ளும் மகளிர் இறைவனிடம் தங்களை அடைக்கலமாக்கிக் கொள்கின்றனர். அதன் பொருட்டாக உங்கையிற்பிள்ளை உனக்கே அடைக்கலம் என்ற பழஞ்சொல்லைப் புதுப்பித்துக் கொள்கின்றனர்.
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்பது ஒரு பழமொழி என்பர். தாய்க்குக் குழந்தையைக் காப்பது கடலை தான் என்றாலும் அடுத்தவர் அன்பு மேலீட்டால் அறிவுறுத்துவது போன்றதாகும்.
இறைவனே நாங்கள் என்றுமே உனது அடிமைகளே உனது உடைமைகளே ஆனாலும் இந்த அநோன்பு வாயிலாக நாங்கள் எங்களை உனக்கு அடைக்கலம் ஆக்கிக் கொள்கிறோம். இந்த நேரத்தில் நாங்கள் வேண்டிக் கொள்வது மூன்று உண்டு. பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம். எம் உடலும் உன் அடியவரோடு மட்டுமே கூடி மகிழ்வதாக. எங்களது கைகளும் உன்னுடைய பணிகளை அவ்வாறு வேறு பணிகளைச் செய்யாது இருக்கட்டும். இரவு பகல் எப்போதும் எம்முடைய கண்கள் உன்னையல்லாது வேறொன்றையும் காணாதிருக்கட்டும். இவ்வுலகத்து இவ் வண்ணமே நீ எமக்கு அருள் செய்து விட்டால் எங்களுக்கு வேறு ஒரு குறையும் இல்லை. உன்னுடைய பேரருள் கிடைத்துவிட்டால் உனக்கே பணி செய்கின்ற பெருவாய்ப்பினை எங்கட்கு அளித்து விட்டால் கதிரவன் எங்கே எழுந்தால் என்ன? என்று பாடல் முழுதும் இறைவனது திருவடிப்பெருமையே பேசப்படுகிறது. வணங்குதற்கும் வாழ்த்துவதற்கும் உரியது திருவடியே. ஆதலின் உலகியளிலும் பெரியோர் திருவடிகளில் வீழ்ந்து வணங்குவதே மரபு. நான் பெறுக உன் தாள் நிழல் வாழ்க்கை‘ என்பது புறநானூறு. திருவடி திருவருட் சத்தியைக் குறிக்கும் என்பதும் கருதத்தக்கது.

Add a Comment