மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
===================
பாடல் – 1
——————–
போற்றி! என் வாழ்முதல் ஆகிய பொருளே !
புலர்ந்தது; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை“ கொண்டுநின் திருவடி தொழுகோம்.
சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே !
ஏற்றுயர் கொடியுடையாய் ! எமை உடையாய் !
எம்பெருமான் ! பள்ளி எழுந்தரு ளாயே !
விளக்கவுரை
==============
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
நாடாளும் வேந்தர்க்கு நிகழ்த்தும் படை, கொடி, வழிபாடு போல விடியற்காலையில் பள்ளியெழுச்சிப் பாடுதலும் மரபு. அம்மரபுகள் அத்தனையும் பின்னாளில் இறைவனுக்கும் வழங்கினார்கள். அப்படிப் பிறந்ததே பள்ளியெழுச்சி. விடியலில் நல்லிசையோடு பாணர்கள் நின்று பாடி பள்ளியெழுச்சி இசைப்பார்கள்.
எம் வாழ்விற்கு நிலைத்த மூலப்பொருளே! சேற்றில் நின்று தாமரைகள் இதழ் விரிக்கும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் திருக்கோயிலில் அமர்ந்த சிவபெருமானே!உயர்த்திய எருதுக்கொடியுடையவனே! என்னை அடிமையாக உடையவனே! எம்பெருமானே வணங்குகிறோம் ! பொழுது புலர்ந்தது. உன் அழகிய திருவடிகள் இரண்டுக்கும் ஒன்றற்கொன்று ஒத்த மலர் கொண்டு தூவினோம். எங்களுக்கு அருள்புரியும் பொருட்டு உன் திருமுகத்தில் மலரும் எழிலார்ந்த புன்னகையை எங்கள் உள்ளத்தில் நிறுத்தி, உன்னுடைய திருவடியை பணிந்து வணங்குகின்றோம். பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக.

Add a Comment