மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
===================
பாடல் – 3
——————–
கூவின பூம் குயில்; கூவின கோழி;
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு, நமக்குத்
தேவ! நல் செறி கழல் தாள் இணை காட்டாய்!
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
யாவரும் அறிவு அரியாய்! எமக்கு எளியாய்!
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
விளக்கவுரை
==============
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
அழகிய குயில்கள் கூவின, பறவை இனங்கள் யாவும் ஒலி எழுப்பின, சங்குகள் முழங்கின, விண்மீன்கள் ஒளி நீங்கின, விடியலின் ஒளி ஒருப்பட்டு எழுகின்றது. தேவனே ! எனக்கு விருப்பத்தோடு நல்ல கழல் செறிந்த உன் திருவடித் துணையைக் காட்டியருள்வாயாக ! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவ பெருமானே ! யாவரானும் அறிதற்கு அறியவனே ! ஆயினும் அடியோமாகிய எங்களுக்கு எளிவந்தருள்பவனே ! எம்பெருமானே ! துயில் உணர்ந்து எழுந்தருள்வாயாக!

Add a Comment