மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
===================
பாடல் – 4
——————–
இன் இசை வீணையர், யாழினர், ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர், ஒருபால்;
துன்னிய பிணை மலர்க் கையினர், ஒருபால்;
தொழுகையர், அழுகையர்,துவள்கையர், ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால்.
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு, இன் அருள் புரியும்
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
விளக்கவுரை
==============
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
புலரிக் காலத்து வழிபாட்டுக்காக இனிய இசை பயிலும் வீணை ஏந்தியவர்களும் யாழ் ஏந்தியவர்களும் ஒரு பக்கம் அவற்றை இசைத்தவாறு இருக்கிறார்கள். இருக்காகிய மறையினை ஓதுவோரும் போற்றிப் பாக்கள் பாடுவோரும் ஒரு பக்கம் இருக்கிறார்கள். நெருக்கமான மலர்களைக் கட்டிய மாலைகளைக் கைகளில் ஏந்தியவர்கள் ஒரு பக்கம் உள்ளார்கள். தொழுவோரும் அழுவோரும் துவள்வோருமாக அன்பு செலுத்துவோர் ஒரு பக்கம் இருக்கிறார்கள். தலை மேல் அஞ்சலியாகக் கைகுவித்தவர்கள் ஒரு பக்கம் நிறைந்து நின்றார்கள். திருப்பெருந்துறைக்கண் வீற்றிருக்கும் சிவபெருமானே ! சிறியேனையும்ஆட்கொண்டுஇனிஅருள்புரிகின்றஎங்கள்தலைவனே! துயில்விட்டுஎழுந்தருள்வாயாக !

Add a Comment