மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
===================
பாடல் – 5
——————–
பூதங்கள் தோறும் நின்றாய்’ எனின், அல்லால்,
போக்குஇலன், வரவுஇலன்,’ என நினைப்புலவோர்
கீதங்கள் பாடுதல், ஆடுதல், அல்லால்,
கேட்டு அறியோம், உனைக்கண்டு அறிவாரை.
சீதம் கொள்வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து,
ஏதங்கள் அறுத்து, எம்மை ஆண்டு, அருள் புரியும்
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
விளக்கவுரை
==============
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
நீ ஐம்பூதங்களிலும் நிலைத்திருக்கிறாய் என்று உரைத்தல் அல்லது ‘போதல் இல்லாதவன் வருதல் இல்லாதவன்‘ என்று கூறி உன்னை இசைப்பாக்களால் வல்லோர் பாடுதலும் ஆடுதலும் தவிர உன்னைக் கண்டறிவோரைக் கேட்டறிந்திலேம். குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் நிலையாக இருப்போனே ! நினைப்பிற்கும் எட்டாத அரும்பொருள் ஆனவனே ! எங்கள் கண்களுக்கு எதிரில் எழுந்தருளி எங்கள் குற்றம் கடிந்து எம்மை ஆண்டு அருள்புரியும் எங்கள் தலைவனே ! பள்ளி எழுந்தருள்வாயாக !

Add a Comment