POST: 2017-01-11T11:41:31+05:30

மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய

திருப்பள்ளியெழுச்சி
===================

பாடல் – 6
——————–
பப்பு அற வீட்டு இருந்து உணரும் நின் அடியார்,
பந்தனை வந்து அறுத்தார்; அவர்பலரும்,
மைப்பு உறு கண்ணியர், மானிடத்து இயல்பின்
வணங்குகின்றார். அணங்கின் மணவாளா!
செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ்
திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!
இப் பிறப்பு அறுத்து, எமை ஆண்டு, அருள்புரியும்
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

விளக்கவுரை
==============
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================

மனத்திற்குள் பரபரப்பு ஒழிய, கட்டுகள் விடுபட்டு இருந்து மெய்யுணர்தல் வல்ல உன் அடியார் பலரும் உன்முன் வந்து தத்தம் பிறவிப் பிணியை அறுத்தொழித்தார்கள். மைதீற்றிய விழியுடைய மகளிர் தம் மானுட இயல்பில் உன்னை வணங்குகின்றார்கள். உமையம்மையின் மணவாளா ! கிண்ணங்கள் போலத் தாமரை மலர்ந்திருக்கும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் மன்னியிருக்கும் சிவபெருமானே ! இந்தப் பிறவியின் கட்டுகளை நீக்கி எங்களை ஆண்டு அருள் புரியும் எங்கள் பெருமானே ! துயில் நீங்கிப் பள்ளி எழுந்தருள்வாயாக !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *