POST: 2017-01-12T10:53:50+05:30

மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
===================
பாடல் – 7
——————–
அது, பழச் சுவை என, அமுது என; அறிதற்கு
அரிது என, எளிது என; அமரரும்அறியார்.
இது அவன் திருஉரு; இவன், அவன்; எனவே
எங்களை ஆண்டுகொண்டு, இங்கு எழுந்தருளும்,
மது வளர் பொழில் திரு உத்தரகோச
மங்கை உள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப் பணி கொளும் ஆறு? அது கேட்போம்:
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

விளக்கவுரை
==============
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================

சில இன்பமானது பழத்தின் சுவையாக இனிப்பது அமுதாய நிலையின்பம் அளிப்பது எனவும் சிவபரம் பொருளானது தமக்குக் காண்பதற்கு அரியது, அடியார்க்கு எளியது என வானவரும் அறியமாட்டார்கள். அவ்வாறிருக்க, இது அவன் திருவுருவம், இங்கே காட்சி தருபவனே அச்சிவபெருமானாம் பெருமான் என்று நாங்கள் கண்டு சொல்லும்படி காட்சி தந்து எங்களை ஆட்கொண்டு இங்கு என் கண் முன் எழுந்தருளும் திருப்பெருந்துறை மன்னவனே !

தேன் வளரும் சோலை சூழ்ந்த திருவுத்தர கோசமங்கையில் வீற்றிருப்பவனே ! எங்களை ஏவல் கொள்ளும் முறையாது? அதைக் கேட்டு அவ்வாறே நடப்போம் எம்பெருமானே ! துயில் நீங்கி எழுந்தருள்வாயாக !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *