மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
===================
பாடல் – 8
——————–
முந்தியமுதல், நடு, இறுதியும், ஆனாய்;
மூவரும்அறிகிலர்; யாவர்மற்றுஅறிவார்?
பந்துஅணைவிரலியும், நீயும், நின்அடியார்
பழம்குடில்தொறும்எழுந்தருளியபரனே!
செம்தழல்புரைதிருமேனியும்காட்டி,
திருப்பெருந்துறைஉறைகோயிலும்காட்டி,
அந்தணன்ஆவதும்காட்டி, வந்துஆண்டாய்!
ஆர்அமுதே! பள்ளிஎழுந்தருளாயே!
விளக்கவுரை
==============
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
முற்பட்டயாவற்றினும் முதலாக நடுவாக முடிவாக ஆக்கல் காத்தல் அழிப்பவன் ஆக விளங்குவோனே! மும்மூர்த்திகளும் உன்னை அறியவல்லார் அல்லர். அவ்வாறு இருக்க வேறுயாவர் தாம் உன்னை அறிகுவார்? பூப்பந்து போன்ற விரலினை உடைய உமையம்மையும் நீயுமாக உன் அடியாரது பழங்குடிசைகள் தோறும் அவர்களின் பொருட்டு எழுந்தருளிய மேலானவனே !
சிவந்த நெருப்புப் போன்ற திருமேனியனாய்க் காட்சி தந்து திருப்பெருந்துறையில் நீ உறையும் கோயிலும் காட்டிக் குளிர்ந்த அறவோன் ஆக இருப்பதும் காட்டி வந்து ஆண்டு கொண்டாய், நிறைந்த அமுதம் ஆனவனே! துயில் உணர்ந்து எழுந்தருள்வாயாக !

Add a Comment