POST: 2017-04-04T10:23:58+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-7
———

அது மட்டுமில்லாமல், இன்னும் ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்கிறேன். கல்லூரிப் படிப்பை முடித்ததும், தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியில் ஒரு தொடக்க நிலை உரையாளராக என்னுடைய பணியைத் தொடங்கினேன். அப்போது மாணவர்கள் மத்தியில், எனக்குச் செல்வாக்கு இருந்தது. திடீரென்று தஞ்சை நகரில், எம்.ஜி.ஆர். ஒரு நாடகம் நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு. அவரைக் கல்லூரிக்கு அழைத்துவந்து, பேசவைக்கலாம் என்று நான் மாணவர்களிடத்தில் சொன்னேன். மாணவர்களுக்கும், எம்.ஜி.ஆர். மீது மாபெரும் காதல், ஐயோ! நம் ஆசிரியர் இங்கே எம்.ஜி.ஆரை அழைத்து வரப்போகிறார் என்ற பெருமிதம்

அப்போது கல்லூரி முதல்வர் பார்த்து, “எம்.ஜி.ஆரை அழைத்து வர, உங்களால் முடியுமா?’ என்று கேட்டார். நானும் சரி என்று சொன்னேன். சரபோஜி மன்னர் கல்லூரிக்கு எம்ஜிஆர் வரப் போகிறார் என்பதை அறிந்ததும், தஞ்சையே கலகலத்துப் போயிருந்தது. எம்ஜிஆரைச் சந்தித்து, அவரைக் கல்லூரிக்கு அழைப்பதற்காக, நான் சென்றேன். அந்தச் சமயத்தில் எம்ஜிஆருடன் பணியாற்றிக் கொண்டு, திரைப்படங்களில் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தார் கவிஞர் முத்துக்கூத்தன்.

நான் மாணவனாக இருந்த போதே, அவரோடு பழகியதுண்டு. ஏனென்றால், நானும் கவிஞர் சுரதாவும் சில நேரங்களில் படப்பிடிப்புகளுக்குப் போவோம். அப்போது புரட்சித் தலைவரின் படப்பிடிப்புத் தளங்களுக்கும் சென்றிருக்கிறோம். கவிஞர் முத்துக்கூத்தனை, அந்தச் சமயங்களில் நான் சந்தித்திருக்கிறேன். என்மீது, மிகுந்த அன்பு காட்டுவார். அந்த நட்பினால், எம்ஜிஆரைப் பார்க்கும் வாய்ப்பு எளிதில் கிடைத்தது. என்னைப் பார்த்தவுடன் கட்டியணைத்துக் கொண்டார். “எப்படியிருக்கிறாய்? பேசாமல் என்னோடு வந்து சேர்ந்து விடு’ என்றார். எப்போதுமே தன்னைச் சந்திப்பவர்களிடத்தில், அவர் தனியன்பு காட்டுவார். நம்மிடத்தில் என்ன திறமை இருக்கிறது என்று இவ்வளவு அன்பு காட்டுகிறார் என்று நமக்கு எண்ணத் தோன்றும். ஆனால், எல்லோரிடத்திலும் அவ்வாறுதான் பழகுவார் எம்ஜிஆர். விதம் விதமான உணவுகளைக் கொண்டுவந்து, அதைச் சாப்பிடுங்கள், இதைச் சாப்பிடுங்கள் என்று உபசரித்தார். இதில் ஒரு மகிழ்ச்சியான விஷயம். என்னுடன் இரண்டு ஆசிரியர்களையும் அழைத்துப் போயிருந்தேன். அவர்களுக்கு என்னைப் பற்றி, மிகப்பெரிய மதிப்பு ஏற்படும்படி, எம்ஜிஆர் நடந்துகொண்டார். இது ஒரு சிறப்பான குணம் அல்லவா!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *