எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-15
————-
இந்த உலகத்தமிழ் மாநாட்டுக்கான நிகழ்ச்சிநிரலை ஒழுங்கு படுத்தியபோது, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு, ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர், திறமை மிகுந்தவர். தேசியப்பற்று உள்ளவர். நான் கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டு, அவரிடம் சொன்னேன். ஞாயிற்றுக்கிழமை 6 மணிக்கு என்று போடக்கூடாது. ராகுகாலம் 6 மணிவரை இருக்கிறது. நாமெல்லாம் பகுத்தறிவுவாதிகள் அல்லவா என்று சிரித்துக் கொண்டு சொன்னேன். உடனே அவர் வெடுக்கென்று, அதனைத் தவறாக நினைத்துக்கொண்டார்.
முதலமைச்சருக்கு, எல்லோரையும் விட நெருக்கமானவர் என்ற நினைத்துக் கொண்டிருந்தார், தலைமைச் செயலாளர்.
நான் பக்கத்தில் இருந்த நண்பரிடத்தில் சொன்ன போது, அவர் காதில் விழுந்துவிட்டது. உங்களுக்கு எவ்வளவு நாளாக, முதலமைச்சரைத் தெரியும் என்றார் அவர் நான் மாணவனாக இருந்தபோதிலிருந்தே தெரியும். வேறொன்றுமில்லை என்றேன் நான். உங்களுக்கு எல்லாம் தெரியாது. ராகுகாலத்தில்தான், தேர்தலில் நிற்பதற்கான தாள்களைத் தந்தவர் அவர். முதலமைச்சருக்கு, இந்த நம்பிக்கைகள் கிடையாது. நீங்கள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னார் அந்தத் தலைமைச் செயலாளர். நான் சிரித்துக்கொண்டே, சரி என்று சொன்னேன். ஏனென்றால், எனக்குத் தெரியும். சில நிகழ்ச்சிகள் நடத்துகிற போது, இவர்கள் சிலவற்றுக்கு ஆட்பட வேண்டும் என்பது இயல்பாகத் தெரியும்.

Add a Comment