எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-28
————-
பெயர் குறிப்பிட, விரும்பவில்லை. பெரிய தொழில்நுட்ப இயக்குனர், பேராசிரியர்கள் என்று எல்லோருமே, அவர் எழுதிய ஐந்திறம் என்ற நூலைப் பாராட்டினார்கள். ஐந்திறம் நிறைந்த தொல்காப்பியம் இதுதான் என்றும் சொன்னார்கள். சொன்னது மட்டுமில்லாமல், அதைத் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட வேண்டும் என்றார்கள். என்னால் முடிந்தவரை மறுத்துச் சோர்ந்து போனேன். ஆனால், தமிழ்நாட்டு தொழில்நுட்ப இயக்ககம், ஏறத்தாழ ஐந்து லட்சம் செலவில், ஐந்திறம் நூலை வெளியிட்டது. அதோடு சிற்பச் செந்நூல்களும், தமிழர்களின் மெய்யியல் உண்மைகளைச் சொல்கிற ஞான நூல்களும், வெளியிடுவதற்குத் தயாராக இருக்கின்றன என்றும் கட்டுக்கதைகள் சொன்னார் அந்தப் புலவர்.
உடனே தொழில்நுட்ப இயக்ககத்தில் அவருக்கு அலுவலகத்தைத் தந்து, கூடவே நான்கு உதவியாளர்களையும் நியமித்தார்கள். உலகத் தமிழ்ச்சங்கத்தின் தொடக்கவிழாவில், இந்த ஐந்திறத்தையும் வெளியிட்டார்கள். இது வெளிவந்தபிறகு,ஊரார் காறித்துப்பினர் என்று சொல்வது கடுஞ்சொல்லாக இருக்கும். எல்லோரும் பழித்தார்கள். இது என்ன ஐந்திறம்? யார் இப்படி வெளியிடுவது? முன்னரே ஒருமுறை, கூத்தநூல் ஒரு பழைய நூல் என்று சொல்லி, ஒரு பொய்நூலை வெளியிட்டீர்கள். இதே வேலைதானா? இவரா தமிழ் அறிந்தவர் என்று என்னிடம் கேட்டார்கள் சிலர்.

Add a Comment