காமராசனை நினைத்துக் கண்ணீர் சொரிகிறேன்.
======================================
காமராசனும் காளிமுத்துவும் என் இரு சிறகுகளைப்போல இருந்து தியாகராசர் கல்லூரியில் நான் பறந்து செல்வதற்கு அமைந்தவர்கள்.
இவர்கள் இருவரும் கல்லூரிக்குச் செல்கிறார்களோ இல்லையோ காலை மலர்ந்ததும் என்னைப் பார்ப்பதற்கு வந்து என் தோளில் அமர்ந்த கிளிகளாக இருந்தனர்.
வாய் திறந்தால் இடிமுழக்கம் செய்த காமராசனையும், உருவக உவமைகளோடு எழில் ததும்பப் பேசும் காளிமுத்துவையும் நான் எப்போதும் நினைத்து வியப்பதுண்டு.
கடைசி மூச்சு வரை எங்கள் ஆசிரியர் ஔவை நடராசன் என்று பேச்சுக்குப் பேச்சு சொன்ன பெரும் தூண்கள் இருவரும் அரசியலிலும் இலக்கிய உலகிலும் அழியாத சுவடுகளைப் பதித்து மறைந்து விட்டார்கள்.
சேலத்தில் நடைபெற்ற விழாவில் காமராசன் கையில் விருதுக்குரிய காசோலையை நான் வழங்கியபோது, “இது வெறும் தாளில் வந்த காசு உங்கள் மனத்தில் நான் எப்போதும் இருப்பதுதான் தங்கக் காசு” என்றார்.
இந்தியச் சுதந்திரப்போரின் நூற்றாண்டு விழாவின்போது, நடைபெற்ற பேச்சுப் போட்டியில், பள்ளி மாணவர்களில் நா.காமராசன் முதற் பரிசு பெற்றார்.
அதே பேச்சுப்போட்டியில், கல்லூரி மாணவனாக இருந்து நான் முதற் பரிசு பெற்றேன். பெருந்தலைவர் காமராசர் அந்தப் பரிசை வழங்கினார்.
இப்போதும் நா.காமசாரனை நினைத்தால் பரிசு பெற்ற அந்தக் கலையான முகம் கண்ணில் நிற்கிறது.
இருவரும் எட்டி தொட வேண்டிய எல்லைகளைத் தொடாமலேயே மறைந்துவிட்டார்கள் என்பதுதான் என் துயரம்.
– பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Add a Comment