எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-47
————-
அன்று மாலையே ஓட்டல் இராஜராஜன் என்று அறிக்கையில் எழுதினார்கள். நான் அன்றாடம் மாலை 06.00 மணியளவில், கவியரசி திருமதி.சௌந்தரா கைலாசம் அம்மையார் இல்லத்திற்கு அவர் பெறாத மகன் போல அன்றாடம் சென்று பேசி வருவது வழக்கம். பின்னர், நான் புறப்படும்போது 09.00 மணியிருக்கும், அப்போது சொன்னேன், “அம்மா, மாமன்னன் இராசராசனுக்கு மதுராந்தகன் என்று ஒரு பெயர், மதுரையை எரித்தவன் என்று பொருள். மதுரைக்கு எதிரியான இராஜராஜன் பெயரை மதுரை மாநகர் உணவு விடுதிக்கு வைப்பது பொருத்தமாகத் தெரியவில்லை. புரட்சித்தலைவரிடத்தில் என்னால் எடுத்துச் சொல்ல முடியவில்லை. உடன் இருந்தவர்கள் அவர் சொல்வதுதான் சரி என்று ஆமோதித்தார்கள். ஆமாம் என்று தலையசைத்தார்கள்.” என்று சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.
மறுநாள் காலை, புரட்சித்தலைவர் அலுவலகத்திலிருந்து பேசினார்கள். நான் 11.00 மணிக்கு முதலமைச்சரைச் சென்று பார்த்தேன். என்னை எப்போதுமே அருகில் அழைத்து ஒரு கையைத் தோளில் வைத்துக் கொண்டு பேசுவது புரட்சித்தலைவர் வழக்கம். “இராஜராஜன் பெயரை எடுத்து விட்டேன். ஓட்டல் தமிழ்நாடு என்று இனிமேல் அழைக்கப்படும். சுற்றுலாத்துறைக்கும் சொல்லிவிட்டேன். எங்கே சொன்னால் எது நடக்கும் என்று அவ்வைக்கு நன்றாகத் தெரிகிறது. நீங்களே சொல்லியிருக்கலாமே என்ன பயம்?” என்று புன்னகையோடு அனுப்பினார். உரிய நேரத்தில், உரியவர்கள் மறுப்பாகச் சொன்னாலும்கூடச் சொல்லுகிற முறையில் கனிவிருந்தால் காதாரக் கேட்டுத் தன் கருத்தை மாற்றிக்கொள்கிற திறம் எம்.ஜி.ஆர்.-ன் பெருமைக்கு ஆணிவேராக அமைந்திருந்தது.

Add a Comment