மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-73
————-
உங்களுக்கெல்லாம் நன்றாக நினைவிருக்கும்.
என்னை முதன்முதலாக உவமைக் கவிஞர் சுரதாதான் புரட்சித்தலைவரிடம்
அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார் என்று சொன்னேன் அல்லவா?
அந்த உவமைக் கவிஞரின் இப்பாடலைத்தான் நான் வாய்நிறையச் சொல்வேன்
அதை முழுவதும் அப்படியே திருப்பிச் சொல்பவர்தான் என் மாணவர் காளிமுத்து…
அந்த கவிதை ….
மூச்சு ஊஞ்சல்
==============
வெண்ணிலவில் நீ உரைத்த வார்த்தை தன்னை
விளையாட்டுப் பேச்சென்று நினைத்திருந்தேன்.
உண்மையிலே அவ்வாறு இருக்கு மானால்,
உயிர்மலரே! எனைப்பார்க்கத் தவறு வாயா?
பெண்ஒருத்திக், காதலனை வருத்த வேண்டின்,
பிணங்கிடலாம்; அதைவிட்டு, நீயோ என்றன்,
கண்ணுக்கு உன்அழகைக் காட்டி டாமல்,
கண்விளக்கில் உப்புநீரை ஊற்று கின்றாய்!
முதன்முதலில் தாய்ப்பாலின் இனிமை கண்டேன்;
முழுநிலவே! அதனால்நான் வளர்ச்சி பெற்றேன்
அதற்குப்பின் செந்தமிழின் இனிமை கண்டேன்.
அதனாலே தமிழ்நாட்டின் கவிஞன் ஆனேன்!
புது அழகே! மூன்றாவ தாக உன்றன்
பூஉதட்டில் சுவை கண்டேன், பித்தன் ஆனேன்.
இதுவரைக்கும் ‘நெல்இரவு’ ஆக்கி வந்தாய்;
இப்போதோ, ‘பதர்இரவு’ ஆக்குகின்றாய்.
நெருப்புதனை நன்றாக உற்றுப் பார்த்தால்;
நீலநிறம், செம்மைநிறம் தெரியும்; அந்த
இருநிறத்தில், நீலத்தை “சக்தி” என்பர்;
இன்னொன்றைச் “சிவம்” என்று சொல்வர்; சோழ
அரசாங்க ஓவியமே! நீயும் நானும்,
அவ்விரண்டு நிறம்போன்று இருந்தோம்; ஆனால்
நெருஞ்சிப்பூ சிலநாட்கள் கழித்து, முட்கள்
நீட்டுவதற் கொப்பாக நடக்கின் றாய்நீ.
கோடையிலே, பொதியமலைச் சந்த னம்போல்
குளிர்ச்சி தந்தாய்; குயிலோசை தந்தாய்; ஈர
வாடைதரும் பனிப்பருவ காலந் தன்னில்,
வாய்குவிந்த தாமரையின் உட்பு றம்போல்,
சூடுதந்தாய்; நீஎனக்கு உன்னைத் தந்தாய்!
ஆடுகின்ற காவேரி மயிலே! என்னை
அடியோடு மறந்தாயா? வெறுத்திட் டாயா?
நிலத்தைவிடப் பெரிதென்றும்; நிலவின் வட்டம்
நீந்துகின்ற வானைவிட உயர்ந்த தென்றும்;
அலைவீசும் கடலைவிட, நமது நட்பு
ஆழத்தை காட்டுமென்னும் நினைத்தி ருந்தேன்
தலைகீழாய்த் திருப்பிவிட்டாய், நமது காதல்
சந்திப்புச் சம்பவத்தை; இல்லா விட்டால்,
மலைக்குப்பின் இருக்கின்ற சிற்றூர் போல
மறைவாக இருப்பாயா எனைப்பா ராமல்?
நீரருவிக் கரைதனிலே, அன்று என்னை
நிற்கவைத்து, நீஎதிரே நின்று; பார்வை
ஓரத்தால் பேசியதும், என்னி டத்தில்
உறுதிமொழி கூறியதும், ஒவ்வோர் நாளும்,
ஆருயிரே! ஆணழகே! அன்பே! என்று,
அழைத்ததுவும் பொய்தானா? போலி தானா?
கூரம்மா, கொலைவாளா நீதான்! இல்லை
குளிர்மழையா? எதுஎன்றே தெரிய வில்லை.
ஒவ்வோர்நாள் இரவினிலும் சோலை வந்து
உனக்காகக் காத்திருந்தும் வந்தாய் இல்லை.
இவ்வாறு செய்வதுஏன்? உனக்கு, வேம்பின்
இலையாகி விட்டேனோ? நிலவைத் தேடும்
செவ்வல்லி போன்றவளே, உனைப்பா ராமல்
செத்துக்கொண்டி ருக்கின்றேன், நெருப்பு வீட்டில்
சவ்வாதே! சந்தனமே! இனிமேல் உன்றன்
சந்திப்பே இல்லைஎனில், சாவே இன்பம்!
நான்செத்தால், என்னோடு இளமை சாகும்;
நான்கண்ட கனவுகளோ, கண்ணில் சாகும்;
தேன்சொற்கள், நாக்கினிலே சாகும்; வாழ்வில்
சேகரித்த ஆசையெலாம் நெஞ்சில் சாகும்;
மீன்விளக்கே! கருவண்டு மிதிக்கும் பூவே
மென்கொடியே! இருந்தாற்போ லேயிருந்து,
ஏன்செத்தான் கம்பன்மகன் என்று கேட்டால்,
என்சொல்லும் இதற்குவிடை உனது உள்ளம்?
என்னாலே உனைமறக்க முடிய வில்லை,
ஏனென்றால், என்உளத்தில் பதிந்து விட்டாய்.
மன்னவனின் மகள்நீயோ, வெடுக்கென் றென்னை
மறந்துவிட்டாய், எனைத்தூக்கி எறிந்து விட்டாய்;
மன்னவர்கள் தீம்போன்றோர்; மேலும் அன்னோர்,
வாளேந்திக் கொலைசெய்யும் கிரீடக் கூட்டம்,
அன்பென்றால், புலிக்கென்ன தெரியும்? என்னை,
அரசன்மகள் நீ மறந்தால் வியப்பே இல்லை!
அனல்மீது நிற்கின்றேன்; கண்ணே பெண்ணே
அணுஅணுவாய்ச் சாகின்றேன்; பார்வை நீரால்
நனைகின்றேன்; நலிகின்றேன்; நிலவு போல,
நாள்தோறும் இளைக்கின்றேன்; உமைசந் திக்க
இனிமேல்நான் வரமாட்டேன், வரவே மாட்டேன்
என்றேனும் சொல்லிவிடு; சொல்லி விட்டால்,
இனிஎதற்கு உடலுக்கு ‘மூச்சு ஊஞ்சல்’
இப்போதே பிணமாவேன், சாம்ப லாவேன்!

Add a Comment