POST: 2017-07-07T12:22:09+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================

பகுதி-75
————-

உங்களுக்கெல்லாம் நன்றாக நினைவிருக்கும்.
என்னை முதன்முதலாக உவமைக் கவிஞர் சுரதாதான் புரட்சித்தலைவரிடம்
அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார் என்று சொன்னேன் அல்லவா?

அந்த உவமைக் கவிஞரின் “அமுதும் தேனும்” கவிதை தொகுப்பில் இடம்பெற்ற “அசோகர் சக்கரவர்த்தி” தொடர்பான இப்பாடலையும் நான் கூற, என் மாணவர் காளிமுத்து திருப்பிச் சொல்வார்.
அந்த கவிதை ….

மன்னனும் மண் சட்டியும்
==========================

ஆரம்ப காலத்தில் அவனோர் மூர்க்கன்;
அதற்குபின் அன்னவனோர் சூழ்ச்சிக் காரன்;
ஓரம்போ ஓரம்போ என்று தன்னை
ஒதுக்கிவைத்தோர் தமையெல்லாம் ஒழித்துவந்தோன்.
வீரத்தால் ஒருலட்சம் பேரைக் கொன்ற
வெறிவேந்தன்; பின்னரவன் புத்த பக்தன்.
காரணத்தால் அவன்துறவி; அவன்யார் என்றால்,
காலத்தின் மேல்நீந்தும் அசோக மன்னன்.

வீரத்தை நிலைநாட்டித் தமிழ்ச்சங் கத்தில்
விவேகத்தைப் புலப்படுத்தி ஆட்சி செய்தோன்
ஆரியரின் படைகடந்த செழிய னாவான்.
அவனைப்போல் சிறந்தவனாம் அசோகன், நாட்டைப்
பேரனிடம் ஒப்படைத்து விட்டுப் புத்த
பிட்சாகி உபதேசம் செய்து வந்தான்.
ஈரத்தை நதிநீரில் முன்பு கண்டோன்;
இரக்கத்தில் அதனையவன் பின்பு கண்டான்.

அலையாடும் கங்கைநதி ஓரம் தன்னில்
அம்மன்னன் மிகச்சிறிய குடிசை ஒன்றில்
நிலையாகத் தங்கியபின், நீதி நூலின்
நிழலானான். கர்வத்தைக் கரைக்க லானான்.
மலஞ்சார்ந்த உடல்தழுவி மகிழும் இன்பம்
மற்றபல இன்பங்கள் இணைந்தி ருக்கும்
உலகத்தில் நாட்டத்தைச் செலுத்தி டாமல்
உணர்ச்சிகளை ஒடுக்கியன்னோன் ஒடுங்கி வந்தான்.

அன்றாடம் தவஞ்செய்தான். நோன்பு நோற்றான்.
அக்பரைப்போல் சிறுபொழுதே உறங்கி வந்தான்.
மன்றத்தில் அரண்மனையில், வீற்றி ருந்தோன்
மண்தரையில் அமர்ந்தபடி பேசி வந்தான்.
நின்றுபயன் தருகின்ற நீதி கூறி,
நெருக்கிவந்த ஆசைகளை நொறுக்கி வந்தான்.
தென்றலில்லா வடநாட்டில், அசோகன் மட்டும்
தென்பொதிகைத் தென்றலைப்போல் இருந்துவந்தான்.

ஓடத்தை விட்டிறங்கி ஒருநாள் மாலை
உபகுப்தர் அன்னவனைக் காண வந்தார்.
மாடத்தில் உலவாமல் ஏழை போன்று
மண்குடிசை தனில்வாழ்ந்து வந்த மன்னன்,
சூடத்தைப் போன்றவராம் அவரை, அந்தத்
துறவியினை வணங்கிவர வேற்க லானான்.
நாடுசுற்றும் புத்தபிட்சு அவனும், கங்கை
நதிக்கரையில் அமர்ந்தபடி பேச லானார்.

அழுக்குருண்டை உலகத்தில் நாமெ லோரும்
அவசரமாய்ப் பிறந்துவிட்டோம்; அதனால் கெட்டோம்.
வழுக்கிவிழா திருந்தாலும் மரணம் வந்தால்
வாழ்க்கைவிழ திருப்பதுண்டோ? இருப்ப தில்லை.
விழித்தவிழி தான்கலங்கும். வாழ்வில் என்ன
கிழித்துவிடப் போகின்றோம்? ஒன்று மில்லை.
கிளிப்பேச்சு மனிதனுக்குச் சாவே மிச்சம்.

சுவரின்மேல் ஒட்டிக்கொண் டிருக்கும் வெள்ளைச்
சுண்ணாம்பைப் போன்றதுதான் பதவி யாகும்.
கவலையினால் நம்நினைவு நிமிர்வ தில்லை.
கவலையில்லா மனிதர்களும் உலகி லில்லை.
கவியென்பர், கலையென்பர், காத லென்பர்,
காதலைப்போல் பூதலத்தின் மீதில் இன்பச்
சுவையுண்டோ? என்றிடுவர். ஐயோ பாவம்!
சுரைக்கொடியின் பூக்களிலா வாசம் வீசும்?

என்றுரைத்தான் திடீரென்று துறவி யானோன்.
இவ்வாறு கூறிக்கொண் டிருக்கும் போது,
சின்னதொரு மண்சட்டி கொண்டு வந்து
தெளிவடைந்த வேந்தனிடம் ஒருவன் தந்தான்.
என்பேரன் கொடுத்தானா இதனை? என்றான்.
எதிர்நின்றோன் ஆம்என்றான். அதனைக் கேட்டோன்,
இன்றெனக்கோர் புதுமாற்றம் என்று கூறி
இச்சென்று சட்டியினை முத்த மிட்டான்.

மண்சட்டி என்சட்டி; இதனை மக்கள்
மதிப்பதில்லை என்றாலும் மதிக்கின் றேன்நான்.
மண்ணென்றால் அணுவென்று பொருளாம். பூமி
மண்மைப்போல் நம்முடலும் அணுவின் சேர்க்கை.
எண்ணங்கள் நம்நெஞ்சின் அணுக்க ளாகும்
எப்பொருளின் உட்புறத்தும் அணுக்கள் தூங்கும்.
மண்ணணுக்கள் பிரசவித்த பொருள்க ளன்றோ
மாணிக்கம், ஆணிப்பொன், வெள்ளி எல்லாம்.

இக்கருத்தை உணர்ந்தன்றோ எனது பேரன்

இதையெனக்கு விருப்பத்தோ டனுப்பி யுள்ளான்.
எக்கணமும் மாற்றத்திற் குரிய வாழ்க்கை
இல்வாழ்க்கை என்பார்கள். நேற்றோ என்றன்
பக்கத்தில் பொற்கிண்ணம். இன்றோ என்றன்
பக்கத்தில் மண்சட்டி. களிமண் பள்ளம்.
பக்குவமாய்க் காப்பாற்றா விட்டால், கையே
பாத்திரமாய் ஆனாலும் ஆகு மென்றான்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *