POST: 2017-07-11T15:53:50+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-78
————-

நான் ஏற்கனவே கூறியபடி, புரட்சிக்கவிஞர் அவர்களின் “பூட்டிய இருப்புக்கூட்டின்” பாடல் வரிகளை நான் கல்லூரியில் பேராசிரியராக இருந்த காலத்தில் கூற, அதை என் மாணவர் காளிமுத்து அப்படிய திருப்பிச் சொல்வது வழக்கம். ஒரு முறை, அப்பாடலை புரட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் சொல்ல, தலைவர் மெய்மறந்து அவரையே சொக்கிப் பார்த்தார். அவ்வரிகள்…..

புலியென புறப்படு
====================

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகை விரி, எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி

நமக்குள் உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!

நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை உயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!
வாழ்கதிராவிட நாடு!
வாழ்க நின்வையத்து மாப்புகழ் நன்றே

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *