கனிந்த நேரத்தில் கவிழ்வதா ?
============================
கவியரசர் இளந்தேவன் கோபாலபுரத்துப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தவர்.
வாய் திறந்தால் வண்ணம் பாடுகின்ற திறமையோடு கவிதைப் புலமையில் கடல்போல பாடுகிற திறமையைப் பெற்றிருந்தார்.
எனக்கு அவருடைய பாடலில் ஈர்ப்பிருந்ததால் அருளாளர் ஆர்.எம்.வீ. அவர்களிடத்தில் போய் இளந்தேவனை அறிமுகப்படுத்தினேன்.
இளந்தேவன் மீது அவர் தொட்ட கரமும் பட்ட பார்வையும் அவரை அரசுத்துறையின் செய்தித்துறைக்கு ஈர்த்தது. செய்தித்துறையில், தமிழரசில் அரசுக்கு வேண்டிய கட்டுரைகளையும் அமைச்சருக்கு வேண்டிய குறிப்புரைகளையும் அவ்வப்போது நடைபெற்ற ஊர்வல நிகழ்ச்சிகளுக்கு உரைகளையும் தந்து பெருமிதமாகத் திகழ்ந்தார்.
பிறகு, முதலமைச்சர் அம்மையாருக்கு கட்டுரை, கருத்துரைகளை வடிவமைத்துக் கொடுக்கின்ற பணிகளிலும் பங்கு பெற்று உயர்ந்த நிலையில் இருந்தார்.
எப்படியோ அடி தவறி, விழுந்தவர் எழுந்திருக்கவேயில்லை.
இந்தத் தொல்லைகளுக்கு நடுவில், அவரின் அருமை மகன் விபத்தில் இறந்தார். தாங்க முடியாத இன்னல்களை தாங்கி வந்தார். போர் புண்கள் உடல் மீது சூந்திருந்தாலும், அவர் புன்னகை குறையவேயில்லை.
எழுந்து திரும்பி வரப்போகிறார் என்று நான் எண்ணிப் பார்த்தபோது, இந்த பேரிடி விழுந்திருக்கிறது.
இளந்தேவன், புலமையாலும் கவியரசர் தலைமையாலும் பல்வேறு இலக்கியங்களை படித்த நிலைமையாலும் சிறப்பாக விளங்கினார்.
என்ன உலகம் இது? காற்றடித்தால் வெம்பிய கனிகள் விழுந்து போகலாம்; பழுத்து வரும் கனிகளும் பருவம் தப்பி விழுவது போல் இருக்கிறது. இளந்தேவன் மறைவு!
…. ஔவை நடராசன்

Add a Comment