POST: 2017-07-16T16:32:10+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-79
————-

மாண்புமிகு முன்னாள் அமைச்சர் டாக்டர்.கா.காளிமுத்து அவர்களின் பட்டமளிப்பு உரை தொடர்ச்சி…. (பகுதி-III)

கற்பிற் சிறந்த பெண்ணரசிகளின் கண்ணால் வாழ்வுபெறும் காரணத்தினால்தானே ஆற்றல் மிக்க ஆடவர்களும் கணவர் என்ற அரும்பெயரைப் பெறுகிறார்கள்.

நமது நாட்டிலே வைதீகத்திலே ஊறியவர்கள் விளையாட்டாகக் கேட்பார்கள். ‘நீங்கள் என்ன மதுரையா சிதம்பரமா’ என்று. சிதம்பரத்திலே நடராசருக்குத் தான் சிறப்பு. சிவகாமிக்குச் செல்வாக்கில்லை. மதுரையிலே மீனாட்சிக்குத்தான் மதிப்பு! இங்கே சிவன் சிவனே என்று ஒருபக்கத்தில் செயலின்றிக் கிடப்பான். மனைவியின் கை ஓங்கி அதிகாரம் கொண்ட வீட்டை அதற்காகத்தான் ‘மதுரை’ என்பார்கள்.

அதனால்தான் இந்த ஊரில் புனையப்பட்ட புராணம்கூட, ஆண்டியாகியிருந்தவன் மீனாட்சியைக் கைப்பிடித்த அதிர்ஷ்டத்தில் அரசனாக மாறினான், ஆட்சியும் செய்தான் என்றும், அவளால் வந்த உதவி அரசாங்கப் பதவி என்பார்கள்.

‘ஏர்பிடித்தவன் என்ன செய்வான் பானைப் பிடித்தவள் பாக்கியம்’ என்பதற்கு மீனாட்சி ஒரு எடுத்துக்காட்டு. இதையே வேடிக்கையாக

‘ஆனைஉரித்தும் அதள்தனைப் போர்த்திட்டு அடியும்பட்டு
மானம் அழிந்தங்கு இரந்தே திரிந்த மதுரைச் சொக்கர்
ஞானம் மிகப் பெற்று வாழ்வதெல்லாம் சொக்க நாயகியாள்
பானைபிடித்த முகூர்த்தத்தினால் வந்த பாக்கியமே’

என்பார்கள்.

இதை நான் குறிப்பிடுவதற்குக் காரணம், பகுத்தறிவு வாதிகள் கூட இந்தப்பழம் பாட்டில் ஒளிந்து மறைந்து கிடக்கும் சமுதாயக் கருத்தை மதிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் என்பதற்காகவேதான். தமிழ்நாட்டில் தமிழ்ப் பெண்கள் தாங்கள் உயர்வதோடு, ஆடவரையும் தம்மோடு சேர்த்துச் சான்றோராக்கும் சக்தி படைத்தவர்களாக விளங்குகின்றார்கள். பெண் என்ற வேலி இல்லையேல் ஆண் என்ற பயிர்கள் ஆசைகள் என்ற ஆடுமாடுகளால் அழிக்கப்படும் என்பது அகிலம் அறிந்தது. பழைய மரபுபற்றி இதுவரை சில பாராட்டுகளைக் கேட்ட உங்களுக்குப் புதிய மரபுகளையும் போற்றிச் சில எண்ணங்களைச் சொல்லக் கருதுகிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *