POST: 2017-07-18T10:27:55+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-79
————-
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் டாக்டர்.கா.காளிமுத்து அவர்களின் பட்டமளிப்பு உரை தொடர்ச்சி…. (பகுதி-V)

இந்த இருபதாம் நூற்றாண்டு உலக வரலாற்றிலேயே மாற்றங்களையும், மறுமலர்ச்சிகளையும், புதுமைப் போக்குகளையும், புரட்சிப் பூக்களையும் கொழிக்கும் நூற்றாண்டாகும்.

பேரறிஞர் அண்ணாவின் மொழியில் சொன்னால் சாமானியர்களின் சகாப்தம் இது பகுத்தறிவும் விஞ்ஞானமும் பழுத்துக் குலுங்கும் பருவம் இது! ஏழையின் சொல் அம்பலம் ஏறும் காலம்! எத்தர்கள் ஓடி ஒளியும் காலம்! எங்கும் நாம் கேட்கலாம், பொய்யும் புரட்டும் அஞ்சி இடுகின்ற ஓலம்!

பொன்யுகம் மலர்ந்துள்ளது – புதுயுகம் புலர்ந்துள்ளது. புது ராகங்கள் – பூபாளங்கள் ஒலிக்கின்றன – அதிசய ராகங்கள் அல்ல இவை, அவசிய ராகங்கள். அங்கிங்கெனாதபடி எங்கும் பாடப்படுகின்றன. அரசும் ஆட்சியும் அணுயுகப் பொறிகளின் முரசும் நிறைந்து முழங்கும். இன்றைய அறிவியல் உலகம் மகத்தான வெற்றிகளைக் குவித்து வருகிறது. தத்துவத்தின் கதை என்னும் நூலில் வில்ட்யூரண்ட் என்னும் பேராசிரியர் “மனித அறிவானது, மகத்தான அளவிற்கு இப்போது மலர்ந்து மணம் பரப்புகிறது. ஒவ்வோர் அறிவியலும் ஒன்றல்ல, இரண்டல்ல, பன்னிரண்டைப் பெருக்கி விட்டிருக்கின்றது. ஒரு துறை மற்றொன்றை விட மிகவும் நுண்ணியதாக அமைகிறது. தொலை நோக்காடி வானத்திலுள்ள விண்மீன்களையும், அவற்றின் இயக்கங்களையும் பற்றி மனித நினைவுக்கு எட்டாத பல செய்திகளைச் சுட்டி காட்டுகின்றது.

நில நூல், இதற்கு முன்பெல்லாம் ஆயிரம் என்ற அளவில் பேசப்பட்டு வந்தவைகளை நூறு நூறாயிரம் என்று பேசும்படி செய்துவிட்டது. ஆயிரங்களைப் பாயிரங்களாகப் படித்தது போய், அரிச்சுவடிகளே மில்லியன்களில் இப்போது ஆரம்பமாகின்றன. பௌதிக நூல் அணுவுக்குள் ஒரு பேருலகையே அடக்கிக் காட்டியிருக்கிறது. உயிர் நூல் உடலின் ஒரு சிறு நுண்ணறையில் ஒரு சிறிய உலகையே சித்தரிக்கிறது.

உளவியல் நூல் ஒவ்வோர் உறுப்பிலும் எல்லையற்ற மறைபொருள் நுட்பத்தினை உணர்த்துகிறது. மனநூல் ஒவ்வொரு கனவிலும், உணர்விலும் விந்தையான நிகழ்ச்சிகளை விவரிக்கின்றது. மனித நூல் ஐயத்திற்கு இடமின்றி, மனிதனின் பழைமையைப் புதிதாகப் புகட்டுகின்றது. தொல் பொருள் நூல் புதைந்த நகரங்களையும், மறைந்த அரசுகளையும் அகழ்ந்தெடுக்கின்றது. வரலாற்று நூல் வாழ்வுப் பழைமையின் இடறல்களை வரைந்து காட்டுகின்றது. புதிய கண்டுபிடிப்புகள், வாழ்க்கையையும், போரினையும், சிக்கலாக்குகின்றன. பொருளியற் கொள்கைகள் சூழ்நிலைகளை மாற்றி உலகத்தையே நிலைகலங்கச் செய்கின்றன.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *