POST: 2017-07-19T07:12:34+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-79
————-
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் டாக்டர்.கா.காளிமுத்து அவர்களின் பட்டமளிப்பு உரை தொடர்ச்சி…. (பகுதி-VI)
———-

டாக்டர் வி. சி. குழந்தை சாமி அவர்கள் குறிப்பிடுவது போல பல்வேறு துறைகளில், ஏராளமான ஆய்வு நிலையங்களில் தாராளமாக எண்ணற்ற ஆய்வாளர்கள் புதியன காணும் முயற்சியில் உழைத்தும் இரவு பகலாக விழித்தும் ஈடுபட்டிருக்கின்றனர். பொறியியல் போன்ற துறைகளில் 10 ஆண்டுகட்கு ஒரு முறை இரட்டிப்பாகும் அளவிற்கு உண்மை அறிவு ஊட்டமாக வளர்கின்றது. இன்னும் 10 ஆண்டில் அறிவு இன்றிருப்பது போல் இரண்டு மடங்காகிவிடும்.

உயிரியல், பாலியல், நுட்பவியல் போன்ற முறைகளில் நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்து 1970ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட வளர்ச்சியை விட 1970-ல் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை ஏராளம் என்கிறார்கள். இன்றைய அறிவு வளர்ச்சியின் வேகம், உண்மையிலேயே எண்ணிப் பார்த்தால் மலைப்பைத் தரும், சிந்தை அணு ஒவ்வொன்றுக்கும் சிலிர்ப்பைத் தரும். இதுவரை மானிட சமுதாயம் கண்டிராத மகத்தான வளர்ச்சி வேகத்தை வளர்ந்து வரும் நாடுகள் நடத்தி வருகின்றன.

வாழ்வின் பல துறைகளில், மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டவை என்று அண்மைக் காலம் வரை நாம் நினைத்திருந்தவையெல்லாம், இன்று நடப்பவைகளாகிவிட்டன. கனவுகளாக, கவிஞர்களின் கற்பனைகளாக நேற்று வரை இருந்த நிலைகள் பல, இன்று கண்முன் காட்சிகளாக அறிவாற்றலின் சாட்சிகளாக நிற்கின்றன. நிலவுலகத்திலிருந்து நிலா உலகுக்குச் சென்று திரும்பி வந்த மானிடம் விண்ணும் வெளியும் தனதே என்று வெற்றி நடை போடுகிறது.

மரணமில்லா பெருவாழ்வுகூட மனிதனுக்கு இயலாததல்ல என்ற அளவிற்கு அறிவுலகம் வளர்கிறது. வளர்ச்சி வேகம், எண்ணத் தொலையாத நிலையை எட்டிப் பிடித்திருக்கிறது. இந்தக் கால கட்டத்தில் – வேகயுகத்தில், விரைவுப் போட்டியில் நீண்ட உறக்கத்திலிருந்து நாம் கண் விழித்து ஈடில்லாத இந்த அறிவுப் பயணத்தில் நாமும் இணைந்துகொள்ள வேண்டாமா என்று எண்ணுகிறோம் கண்களைப் பிசைகிறோம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *