மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-79
————-
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் டாக்டர்.கா.காளிமுத்து அவர்களின் பட்டமளிப்பு உரை தொடர்ச்சி…. (பகுதி-VII)
———-
இந்த வேளையில் நமக்காகக் காத்திருக்கும் வேலைகளைக் கடமைகளைப் பட்டதாரிகளாகிய நீங்கள் பெரிதும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த நூற்றாண்டு முடிந்து புதிய நூற்றாண்டு மலர்வதற்கு இன்னும் கால் நூற்றுண்டுக்காலம்கூட இல்லை.
இந்த இருபத்திரண்டு ஆண்டுகளில் நீங்கள் உருவாக்குகிற உலகம் தான் உண்மையிலேயே புதிய உலகமாகும். சரியாகச் சொன்னால் புதிய நூற்றாண்டைப் பெற்றுத் தரப்போகும் தாய்க் குலமே நீங்கள்தான். எனவே இந்தக் காலத்தில் நீங்கள் செய்வதும், செய்யாததும்தான் வருங்கால வாழ்வைத் தமிழ் வையகத்தின் வளர்ச்சியை வரையறுத்துக் காட்டும் என்பதை மட்டும் நீங்கள் மறந்து விடாதீர்கள்.
நீங்கள் இனி ஆட்படுகின்ற சோதனைகள்தான், வருங்காலத்திற்குச் சாதனைகள். நீங்கள் எடுத்தெறியப்போகும் தடைக்கற்கள்தான் நாளைய நல்வாழ்வு மண்டபத்திற்கான படிக்கற்கள். இந்த நிலையில் சிறிது கண் அயர்ந்தால், கவனம் குறைந்தால், நாம் பெரிதும் பின்தங்கி விடுவோம். நெஞ்சில் உரமும், நினைவில் உறுதியும் அறிவில் தெளிவும், சமுதாயத்தின்மேல் பரிவும் கொண்டு வறுமை, வேலையின்மை, பசி, பிணி, பொருளாதாரப் பேதங்கள், சாதி சமயத் தளைகள், மூட நம்பிக்கை களைகள், பழமையில் கொண்டுள்ள கண்மூடித்தனமான பற்றுதல் முதலியவற்றைப் போராடிப் போராடிப் பூக்காமல், காய்க்காமல் வேரோடு பறித்தெடுக்க அறிஞர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், தொழில் நிபுணர்கள், ஆகியோர் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். அத்தகைய பல்கலைவாணர்களின் பண்ணைகளாகத்தான் கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் பரிமளிக்க வேண்டும்.
இன்றைய வாழ்வின் இமாலயச் சிறப்பு மக்களாட்சியின் மலர்ச்சி யேயாகும். மன்பதை எங்கணும் பெருமன்னர், குறுமன்னர், சிறு மன்னர்கள் ஆட்சிகளும் அடக்குமுறைகளும் சிதைந்து மறைந்து, சாமானியர்களின்-எளிய மக்களின் வாக்குரிமையால் உருப்பெறும் ஆட்சி சரித்திரப் புகழ்பெற்று நிமிர்ந்து நிலவுகிறது.

Add a Comment