மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-79
————-
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் டாக்டர்.கா.காளிமுத்து அவர்களின் பட்டமளிப்பு உரை தொடர்ச்சி…. (பகுதி-VIII)
———-
மக்களாட்சி என்பது வளர்ந்துவரும் நாகரிகம் நமக்கு வழங்கிய நன்கொடையாகும். பேரறிஞர் அண்ணா ஒருமுறை கூறினர் : மக்களாட்சி என்பது வாழ்க்கையின் நடைமுறை என்று ! பரிகாரம் காணலாம் என்ற நம்பிக்கையோடு பஞ்சை பராரிகளும் கூட ஆட்சியாளர்களை அணுகி நலம் பெற வேண்டும் என்பதுதான் அதன் அடிப்படை.
யாரோ ஆள்கிறார்கள், எவரோ நடத்துகிறார்கள் ஏதோ நடக்கிறது எது வந்தால் என்ன ? எங்களால் என்ன முடியும் ? என்ற முனகல்களை-ஏக்கங்களை-பெரு மூச்சுக்களை, தழதழத்த குரலில் வெளிப்படுத்தப்படும் தாபங்களை இடிமுழக்கங்களாக, களிறின் பிளிறல்களாக, சிங்கங்களின் கர்ச்சனைகளாகக் கருதி சமுதாயப் பணிக்கு நம்மை ஆளாக்கிக் கொள்ள சமவாய்ப்பை வழங்குவது மக்களாட்சி.
அறிஞர்கள், மக்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் என்ற நான்கு தூண்கள் ஜனநாயக மண்டபத்தைத் தாங்கும் என்பார்கள். எனவே எல்லோரும் பங்குபெறும் பொது ஆட்சி அது. மக்களாட்சியால் மட்டும் வேண்டிய பலன்களை முழுவதுமாக நம்மால் எய்த முடியுமா என்று ஒரு வினாவை எழுப்பி, மக்களாட்சி என்பது ஒர் உருவமே தவிர உள்ளீடாகாது என்று கூடச் சிலர் கூறுவார்கள்.
அந்த உருவத்துக்கு உயிரூட்டுகின்ற, உயிரோட்டம் தருகின்ற உள்ளீடாகச் சுரண்டலற்ற பொருளாதார அமைப்பைப் பொருத்த வேண்டும் என்பதும் நம் முன்நிற்கும் நடைமுறைச் சிந்தனையாகும்.
எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான ஏற்றத் தாழ்வில்லாத இந்தப் பொதுவுடமை இலட்சியத்தைக் கடைப் பிடிக்க வேண்டும் என்பது அறிவுலகம் வற்புறுத்தும் நெறியாகும்.
இதுவே தந்தை பெரியாரின், பேரறிஞரின், புரட்சித் தலைவராகிய நம் பொன்மனச் செம்மலின் நோக்கும் போக்குமாக இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

Add a Comment