மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-79
————-
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் டாக்டர்.கா.காளிமுத்து அவர்களின் பட்டமளிப்பு உரை தொடர்ச்சி…. (பகுதி-X)
———-
“பண்டுவந்த செழும் பொருளே, பார் அடர்ந்த இருட் கடலில் படிந்த மக்கள் கண்டுவந்த திருவிளக்கே களிப்பருளும் செந் தமிழே’ என்றும் ” திங்களொடும் செழும் பரிதி தன்னோடும் விண்ணோடும், உடுக்களோடும், மங்குல் கடல், இவற்றோடும் பிறந்த தமிழ்’ என்றும் நம் இன்பத்தமிழ் மொழியின் இயல்புகளை எப்போது எவர் எடுத்துச் சொன்னாலும் வெறும் தமிழ் என்று அடைகொடுக்காமல் நம் நறுந்தமிழைக் குறித்ததே இல்லை. தீந்தமிழ், தண்டமிழ், இன்தமிழ், செந்தமிழ், தென்தமிழ் என்று அழைத்து மகிழ்ந்ததோடு இல்லாமல் அவ்வப்போது சங்கம் வைத்துப் புலவர்களைக் கூட்டித் தங்கத் தமிழுக்கு மேலும் தகத்தகாயத்தைச் சேர்த்து வந்திருக்கிறார்கள்.
உலக மொழிகள் மூவாயிரத்துள் தொன்மை, முன்மை, எண்மை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை ஆகிய 16 சிறப்புகளையும் கொண்டது நம் உயர் தனிச் செம்மொழியாகிய ஒண் தீந்தமிழ் என்று மகிழ்ந்து பாராட்டியிருக்கிறோம்.
இணையில்லாத கவிதைகளும் ஈடு இல்லாத காவியங்களும், படிப்பவர் நெஞ்சத்தைப் பாகாக உருக்குகின்ற பக்திப் பனுவல்களும் இங்கே ஏராளம்.
ஆங்கிலத்தை வணிக மொழி என்றும், லத்தினைச் சட்ட மொழி என்றும், இத்தாலியைக் காதல் மொழி என்றும், பிரெஞ்சைத் தூதுவர் மொழி என்றும் ருசிய, ஜெர்மானிய மொழிகளை விஞ்ஞான மொழிகள் என்றும் சொல்லும்போது நம் இன்பத்தமிழை இலக்கிய மொழி என்று பெருமையாகக் குறிப்பிடலாம் என்பர்.
விடுதலை வாழ்வில் உரிமைக் காற்றை நுகர்ந்துகொண்டு வாழும் மக்களின் வாழ்விலும் கலையிலும் எண்ணங்களிலும், எழுத்துகளிலும், ஆட்சி நிறுவனங்களிலும், அரசுப் பொறுப்புகளிலும், அறமன்றங்களிலும், ஆலயங்களிலும், தாய்மொழி தலைமையான இடத்தைப் பெறவேண்டுமென்பது இயற்கையாகும், இயல்பான உண்மையுமாகும்; உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டியதுமாகும்; கடந்த முப்பது ஆண்டுகளாக எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற ஆர்வக்குரல் எதிரொலித்து வந்தாலும் முனைப்பாக முன்னேற்றம் இல்லையென்பதை நான் குறிப்பிடத்தான் வேண்டும்.

Add a Comment