POST: 2017-07-25T09:23:33+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-79
————-
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் டாக்டர்.கா.காளிமுத்து அவர்களின் பட்டமளிப்பு உரை தொடர்ச்சி…. (பகுதி-XI)
———-

குறிப்பாக மகளிர் இனம், மனம் வைத்தால்தான் தாய் மொழித் தலைமை இன்னும் விரைவும், வேகமும் பெறும் தமிழ் வளர்ச்சி என்றால் அது தமிழாசிரியர்கள், புலவர்கள் இவர்களுடைய பொழுதுபோக்கு என்றும் மற்றவர்களுக்கு அதில் சற்றும் தொடர்பில்லை என்பதுபோலவும் நம் நாட்டில் கருதப்படுகிறது.

உங்களைப் போலப் பல்வகை அறிவுத்துறைகளிலே தேர்ச்சிபெற்ற பட்டதாரிகள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள், வரலாற்றுத்துறையினர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கலைஞர்கள், அலுவலர்கள், பொருளாதார வல்லுநர்கள் என்று பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்ற மதிவாணர்கள் அனைவரும் குறிப்பாக, சிறப்பாக நம் நாட்டு ஆடவர் மகளிர்களாகிய அனைவரும் தமிழுக்குத் தலைமை தரும் திருப்பணிக்குத் தங்களை ஆளாக்கிக் கொள்ள வேண்டும்.

நேற்றுப் பிறந்த புது மொழிகள் எல்லாம் பொது மொழிகள் என்று ஆர்ப்பரிக்கும்போது ஆற்றல் தமிழாகிய முதுமொழிக்கு அழிவா வருவது? என்று கல்லூரிப் பருவத்தில் கனல் சிந்திய கண்களோடு தழும்புகள் பெற்றுத் தமிழ் கற்ற மாணவன் நான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பெருமைக்காக நான் இதைப் பேசவில்லை. ஆனால் ஒன்று, எங்களுக்கு அப்போது உணர்வூட்டியவர்களெல்லாம், செயல் என்று வந்தபோது “புயல்” என்று உதவுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அவர்களோ முயலாகப் பதுங்கிக்கொண்டார்கள். எனவேதான் சொல்லுவது போலச் செய்யும் ஆர்வமும் பெருகவேண்டும் என்பதற்காக இதைக் குறிப்பிட்டேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *