மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-79
————-
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் டாக்டர்.கா.காளிமுத்து அவர்களின் பட்டமளிப்பு உரை தொடர்ச்சி…. (பகுதி-XII)
———-
பட்டதாரி செல்வியர்களே !
இதுகாறும் உலக நிலைகளையும் மக்கள் மனப்போக்கில் விளைந்த விளைய வேண்டிய கருத்துகள் சிலவற்றையும், அவைகளை நிறைவேற்ற வேண்டிய பணியில் நீங்களும் சார்ந்திருக்கிறீர்கள் என்பதையும் நினைவூட்டினேன். எல்லாம் சரி பட்டங்களைப் பெற்று விட்டோம் சமுதாயத்தை நோக்கி நடைபோடுகிறோம் கல்வி கற்ற எங்கள் வாழ்வுக்கு என்ன வழி, இந்தக் கவலையான வினாவைச் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கறிகுறியாகத்தானே கருப்புக் கவுணையும் காகிதச் சுருளையும் நாங்கள் ஏந்தி நிற்கிறோம், கற்றபின் நிற்க என்பது இதுதானா? என்று நீங்கள் கேட்கக்கூடும் நிலைமையை அரசு தெரிந்துகொண்டிருக்கிறது.
நிச்சயமாக ஆனால் நிதானமாக நல்ல வழிவகைகளை வகுக்கின்ற பணிகளை நாம் முனைந்து செய்து கொண்டிருக்கிறோம். வெற்றி உருவாகும் என்றும், வாய்ப்புகள் அதனால் விரிவாகும் என்ற நம்பிக்கையை மட்டும் உங்களுக்கு நான் வழங்கக் கடமைப்பட்டுள்ளேன்.
எனினும் இது தொடர்பாக நம் அருமை நாவலர் அவர்கள் இதே பல்கலைக் கழகத்துப் பட்டமளிப்பு விழாவில் ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்னர்க் கூறியதை நினைவூட்ட விரும்புகிறேன்.
“இதற்கு முன்பெல்லாம் கல்லூரிப் படிப்பு முடிந்து பட்டம் பெற்றதற்குப் பிறகு அரசாங்க வேலை பார்க்க முயலுதல், அது கிடைக்காவிட்டால் தனியார் துறையில் வேலை பார்க்க முயலுதல், அதுவும் கிடைக்காவிட்டால் பிறரோடு கூட்டுச் சேர்ந்து வேலை செய்ய முயற்சி தொடங்குதல், அதுவும் முடியாவிட்டால் தாமே முயன்று ஏதேனும் ஒரு வேலை செய்ய முற்படுதல் என்ற நிலை இருந்து வந்தது. அந்த முறையில் வேலைகளைப் பெறுவதற்கான வாய்ப்பும் வசதிகளும், இப்போது நாளுக்கு நாள் குறைந்து வருவதோடு அவை கிடைக்கும் என்ற நிலைமையில் நம்பிக்கையில்லாத நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

Add a Comment