தைவான் நாட்டு கவியரசருக்கு
தமிழ்ப் பல்கலைக்கழகம் சூட்டும் மகுடம்!
=======================================
உலக கவிஞர்கள் மாநாட்டில் உயர்ந்த கவியரசராக பல்வேறு நாடுகளில் நடைபெற்ற கவியரங்கத்தில் தலைமை தாங்கிய கவிஞர் கோமான், தைவான் நாட்டு தனிப்பெரும் கவியரசர் யூசி அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் கடந்த ஐந்தாண்டுகளாக நெருங்கிய உறவும் பரிவோடு பழகும் பண்பாடும் சீரோங்கி வளர்ந்திருக்கிறது.
தமிழக அரசின் மேனாள் அரசு செயலாளரான முனைவர்.மூ.இராசாராம், இ.ஆ.ப., மற்றும்
மொழிபெயர்ப்புத்துறை இயக்குநரான முனைவர் ந.அருள்
ஆகியோர் தைவான் நாட்டு விருந்தினர்களாகச் சென்று திரும்பிய நிலையில் உலகப்பொதுமறை திருக்குறள், தெரிவு செய்யப்பட்ட தேசியகவி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள், தமிழ் மூதாடியார் ஔவையாரின் ஆத்திசூடி நூல்களையெல்லாம் தைவான் மொழியில் வெளியிட அவர் பெருந்துணை புரிந்தார்.
ஒப்பில்லாத கவிஞராகவும் மனிதநேயத்தின் மணிவிளக்காகவும் திகழும் கவிஞர் யூசி அவர்கள் தமிழகத்தின் உயர்ந்த நண்பராகத் திகழ்கிறார்.
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திலும், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திலும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் தமக்கு வழங்கிய பரிசுத்தொகையையும் விஞ்சிய அளவில் தமது நன்கொடையையும் சேர்த்து அறக்கொடைகளை நிறுவியுள்ளார்.
டாக்டர் யூசி அவர்களுக்கு தமிழ்ப்பல்கலைக் கழகம் விருது தருவது தமிழுக்குப் பெருமை; தைவானுக்கு வாய்த்த அருமை என்று போற்றிப் புகழலாம்.
பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாமின் நினைவு நாளான நேற்று (27.07.2017), கலாம் அவர்களின் மணி மண்டபத்தை பெருமைமிகு மோடி அவர்கள் திறந்து வைத்த நன்நாளில், கலாம் அவர்களின் நண்பரான கவிஞர் யூசி அவர்களுக்கு தமிழ்ப் பல்கலைக்கழகம் முதுமுனைவர் பட்டம் வழங்கியது
மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

Add a Comment