தமிழுலகத்தில் பதித்த ஒப்பறிய முத்து !
=========================================
சைவச் சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தின் ஆட்சியாளர் அன்பிற் செழித்த நண்பர் முத்துகுமாரசாமி மறைந்தது கேட்டு மனம் கலங்கினேன்.
நானும், நண்பர் முத்துகுமாரசாமியும் ஒரே கல்லூரியில் அவர் ஓராண்டு மூத்தவராகவும் நான் இளையவராகவும் தமிழ் முதுகலை வகுப்பு பயின்றோம்.
வாரம் தவறாமல் எங்களைக் காண வரும் ஈடில்லாத பதிப்புத்துறையின் வேந்தராகத் திகழ்ந்த தாமரைத்திரு வா.சுப்பையாபிள்ளை தன் மருகனைக் காண்பதுபோல என்னையும் பரிவோடு வினவி நலம் கேட்பார்.
அறிஞர் முத்துகுமாரசாமி நினைத்திருந்தால், தானே ஒரு கல்லூரியை உருவாக்கி அதன் தாளாளராகவும் தலைவராகவும் திகழ்ந்திருக்க முடியும். மாமன் மனத்திற்கு ஏற்ற மருகன் என்ற வகையில் தன்னுடைய முதுகலைக் கல்வியை முடித்த பிறகு நூற்பதிப்புக் கழகத்தையும் மறைமலையடிகளார் நூலகத்தையும் பொறுப்பாக ஏற்று நடத்தினார்.
நூலகத்துறையிலும் பட்டங்கள் பெற்றார்.
காலம் ஒரே நிலையில் ஓடுவதில்லை போலும். வளைவு நெளிவுகள் இல்லாத பாதைகள் அமையாததால் வழிநடையாளர்கள் சில நேரங்களில் சோர்ந்துவிடுவார்கள்.
அந்த வகையில்தான், ஆற்றல் வாய்ந்த அணிகலனாய் மக்கள் செல்வங்கள் அமைந்திருந்தாலும் கழகத்தைத் தாங்கி நிறுத்தும் தோள்களில் சில நிலைகளில் சோர்வு நேர்ந்தன.
சுமக்க முடியாமல் உள்ளதே! மாமா கட்டிய மண்டபத்திற்கு நான்கு தூண்களாகவும் நானே எப்படி இருப்பது? என்று ஒருமுறை சொன்னார்.
என் தந்தையார், தன் தாய் வீடாகச் சைவச் சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை உறவுபாராட்டிச் சொல்வார்.
முத்துகுமாரசாமி அவர்களுடைய நடையும் பெருமிதமும் ஒரு மொழிவேந்தரை நினைவூட்டியது. தமிழுக்கு அரணாக யார் தம்மை அழைத்துக்கொண்டாலும் சைவச் சிந்ததாந்த நூற்பதிப்புக் கழகமும் நண்பர் முத்துகுமாரசாமியும் தமிழைத்தாங்கும் தோள்களாக இருந்தனர்.
நான்தான் முத்துகுமாரசாமியை முந்துவேன், செந்தமிழ்செல்வி இரங்கல் தெரிவிக்கும் என்று நான் பலமுறை சொல்வதுண்டு.
அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என்று அடிக்கடி ஆறுதல் சொல்பவர், நண்பர் முத்துகுமாரசாமி.
இளையதிலகம் திரு.சுப்பையா பொறியியல் பட்டம் பெற்ற பெருந்தகுதி வாய்ந்தவர். அவர் மாமாவும் தந்தையும் கட்டிய மாட மாளிகையை மீண்டும் எழுப்பித் தமிழுலகத்திற்குக் கோபுரமாகத் திகழச்செய்வார் என்று எண்ணிப் பார்க்கிறேன்.
என் கண்ணெதிரில் பெரிய இருளும் தெரிகிறது. சேய்மையில் ஒரு செம்மொழியும் பரவுகிறது.
—– ஔவை நடராசன்

Add a Comment