உத்தமம் எனும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் சார்பில் 16ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு, ஆகஸ்ட் 25 முதல் 27 வரை, கனடா நாட்டின் டொரண்டோ நகரில் நடைபெறுகிறது.
——————————————————————————–
இம்மாநாட்டிற்கு
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வாழ்த்துரை
——————————————————————————–
கனடா மாநாடு கரம் நீட்டுமா?
===============================
அளப்பரிய அறிவின் வளப்பெரும் திலகமாகத் திகழ்வது இணையத்தின் எழுச்சியாகும். உலக நாடுகளில் சேர்ந்தாரை அரவணைக்கும் செழிப்பும் சிறப்பும் கொண்ட ஒப்பரிய நாடு என்ற பெருமை கனடாவுக்குத்தான் உரியது.
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என்பது மாறிக் கணினியும் இணையமுமே நமக்கு வாய்த்த இரு கண்கள் என்ற விரைந்த வளர்ச்சியில் உலக நாடுகள் சிறந்து மிளிர்கின்றன. காலத்தால் கண்டறிய முடியாத தொன்மை கொண்ட மொழி தமிழ்மொழிதான் என்று நெஞ்சு உயர்த்திப் பேசினாலும் அறிவியல் வளர்ச்சியினுடைய ஆக்கங்கள் இன்னும் முழுமையாகத் தமிழில் தோயவில்லை.
இந்நிலையில், கனடா நாட்டில் வாழும் தமிழர்கள், தாம் வாழும் நாட்டுக்கு நன்றியுடைவர்களாக சிறப்படைவதோடு நூற்றி ஐம்பதாவது ஆண்டு விடுதலைத் திருநாளை எண்ணி நெகிழ்வதும் கணினி உயர்வால் தமிழை உயர்த்தும் மகிழ்வும் கொண்டு உலக இணைய மாநாட்டை நடத்துவது பொருத்தமாகும்.
தமிழில் இணைய வளர்ச்சியைப் பற்றி கருதும்போது, கனடா நாட்டு இளைஞர்கள் தமிழகத்திற்குத் திரண்டு வந்து தமிழர்களுக்கு நடுவில் இந்த இணையக் கருத்துகளையெல்லாம் வலியுறுத்த வேண்டுமென்பது என் பெருவிருப்பமாகும்.
பொறியியல் கல்வி தேய்ந்து சாம்பலாகிப் போகும் மன வருத்தத்தில் தமிழக மாணவர்கள் உள்ளனர். பொறியியல் கல்லூரிகள் பல புகை சூழ்ந்த இடிந்த மாடங்களாகி வருகின்றன. இந்தக் கொடுமையை நீங்குவது பற்றியும் மாநாடு கருதும் என்று எதிர்பார்க்கிறேன்.
யார் யாரை வாழ்த்துவது?
அன்புள்ள,
ஔவை நடராசன்

Add a Comment